முதல் பக்கம்

Dec 22, 2011

முடிவற்றதைக் கண்டறிந்த மனிதன்.. கணிதமேதை இராமானுஜம்.

டோக்கியோ அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறை தலைவர் அவர். கணித மேதை இராமானுஜன் பற்றி ஜப்பானிய மொழியில் புத்தகம் எழுதி உள்ளார். நூலாக்கத்தின் துவக்க கட்டத்தில் ஈரோடு வந்திருந்தார். அந்நூலை வெளியிடும் பதிப்பக உரிமையாளர், புகைப்பட கலைஞர், அறிவியல் இயக்க ஆர்வலர் என ஒரு குழுவாக வந்தனர். என்னைத் தொலைபேசியில் அழைத்து, ’இராமனுஜன் வீட்டைப் பார்வையிட வேண்டும் அழைத்துச் செல்லுங்கள்” என்றனர். கணிதமேதை இராமனுஜன் ஈரோட்டில் பிறந்தவர் என்று அறிவேனே தவிர, ஈரோட்டில் அவர் பிறந்த இடத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கியது இல்லை. இவ்வாறு அறிந்து கொள்ளாமல் இருந்தமைக்கு மிகவும் வெட்கப்பட்டேன். நம்பி வந்த குழுவினருக்கு உதவிடும் முயற்சியில் இறங்கினேன். வரலாற்று ரீதியாக பல விபரங்களை அறிந்த ஓர் அறிவு ஜீவியை தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவரோ, ’அய்யா, கணித மேதை ஈரோட்டிலா பிறந்தார்?” என்றார். இதற்கு மேல் யாரிடம் கேட்பது என்று ஐயம் மேலிட எனக்குத் தெரிந்தவர்கள், விபரமறிந்தவர்கள், அரசியல்வாதிகள் என பலரிடமும் கேட்டேன். அரை மணி நேர தகவல் அறியும் எனது முயற்சி படுதோல்வியில் முடிந்தது. ஜப்பான் கணிதப் பேராசிரியர் என் அழைப்புக்காக விடுதியில் காத்துக் கொண்டு இருந்தார். வருத்தம் தோய்ந்த மனதுடன் நேரில் காண சென்றேன்.

‘ஈரோடு, தெப்பக்குளம், பழைய சார் பதிவாளர் அலுவலகத்திற்கு எதிர்வீடு” என்ற ஆவணக் குறிப்பை வைத்துக் கொண்டு ஆட்டோவில் அங்கு சென்று அடைந்தோம். ஈரோட்டின் மையப்பகுதி அது. ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில் இருக்கிறது. உண்மையில் தெப்பக்குளம் எந்தக் காலத்தில் இருந்ததோ தெரியவில்லை. தெப்பக்குளம் என்ற பெயர்; மட்டும் நின்று நிலவுகிறது. அறிவு ஜீவிகளுக்கு தெரியாத இடத்தை ஆட்டோ டிரைவர் எளிதாக கண்டுபிடித்து கொடுத்தார். கதவு எண்.18, அழகிய சிங்கர் வீதி, தெப்பக்குளம், ஈரோடு - 1 என்பதே அந்த வீட்டின் முகவரி. இங்குதான், 124 ஆண்டுகளுக்கு முன் 22.12.1887 - ல் கணித மேதை சீனிவாச இராமானுஜன் பிறந்தார். நாளை முதல் 125 ம் ஆண்டு தொடங்குகிறது.

இராமானுஜன் வாழ்ந்த இடங்களைப் பார்வையிட ஜப்பானிய பேராசிரியர் பல முறை சென்னைக்கும், கும்பகோணத்துக்கும் வந்திருந்ததாகவும், அவர் பிறந்த இடத்தைப் பற்றிய குறிப்புகள் இன்மையால் துயரத்துடன் திரும்பிச் சென்றதாகவும் கூறினார். தனது வாழ்நாளில் இதனை விட கூடுதல் மகிழ்ச்சி அடைந்த தருணம் இல்லை எனக் கூறி, நம்மை இறுக்கி அணைத்துக் கொண்டார். அவர் பிறந்த வீட்டையும், அந்த வீதியையும் போட்டோவாக எடுத்துத் தள்ளினர் புகைப்படக் கலைஞர். அந்த வீதியில் குடியிருந்தோருக்கும் கூட அன்றுதான் கணிதமேதை இராமானுஜன் பிறந்த இடம் பற்றி தெரிய வந்தது. சென்னையில் உள்ள இராமானுஜன் அருங்காட்சியகத்திற்கும் அது முக்கிய ஆவணம். உலக வரலாற்றில், கணிதமேதை இராமானுஜன் பிறந்த இடம் பற்றிய முதல் புகைப்படம் எடுக்கப்பட்ட நாள் அன்றுதான். இந்த சம்பவம் என்றோ நடந்தது என்று எண்ணி விடாதீர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2008 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ம்தேதி.

இராமானுஜன் பிறந்த வீடு, தற்போது அவரது சொந்தக்காரர்கள் வசம் கூட இல்லை. பெருமுயற்சி எடுத்து தேடிப்போகும் ஒன்றிரண்டு பேரிடம் கூட வீட்டு உரிமையாளர், ‘கணித மேதை இராமானுஜன் இங்கேதான் பிறந்தாரா?” என்ற கேள்விக்கு ஆம் என பல நேரங்களில் பதில் தருவதில்லை. இந்த விசயம் பிரபலமாகி, வீட்டை அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமோ என்ற பயம். ஜப்பான் பேராசிரியர் சக்குராய் வந்த அன்று உரிமையாளர் வீட்டில் இல்லை. அவரது மகன் ஆற அமர வைத்து உபசரித்து அனுப்பினார். நான் பார்க்கும் நண்பர்களிடம் எல்லாம் இந்த வீட்டைப் பற்றி சொல்லித் திரிகிறேன். அவ்வீட்டைக் காண விளைவோரிடம் நான் கூறும் செய்தி இதுதான். ‘ஈரோடு பிர‡ப் ரோட்டில் உள்ள சிவரஞ்சனி ஓட்டலுக்கு எதிர் சந்தில் செல்லுங்கள். அழகிய சிங்கர் வீதி வலது புறத்தில் வரும். வீதியில் நுழைந்ததும் நான்கு, ஐந்து

வீடுகள் தள்ளி மஞ்சள் கோபி நிறத்தில், உள்ள வீடு. ஜோதி நிலையம் என்று பெயர் எழுதப்பட்டிருக்கும். சற்று நேரம் நின்று பார்த்து விட்டு வந்து விடுங்கள்” என்பதுதான். இந்த நிகழ்வுக்குப் பிறகு, அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம் அழகிய சிங்கர் வீதியில் நுழைந்து, அந்த வீட்டின் மீது ஓர் பார்வை வீசி விட்டு வருகிறேன்.

எனது அலைபேசி எண்ணில் ஒரு முறை லண்டன் கணிதப் பேராசிரியை ஒருவர் தொடர்பு கொண்டார். தான் இந்தியாவுக்கு வந்திருப்பதாகவும் திருவனந்தபுரத்தில் இருப்பதாகவும் கூறினார். கோவைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து ஈரோட்டுக்கு காரில் வர இருப்பதாக கூறினார். தனக்கு கணித மேதையின் வீட்டை காண்பிக்க வேண்டும் என்றார். ‘நான் ஊரில் இல்லை. பிறிதொரு முறை வாருங்கள்” என்றேன். ‘நான் பல முறை இந்தியா வந்துள்ளேன். பல முறை கும்பகோணம், சென்னை என சென்று, அவர் வாழ்ந்த இடங்களை எல்லாம் பார்வையிட்டுள்ளேன். ஈரோடு வந்து, அவரது பிறப்பிடம் கண்டுபிடிக்க இயலாமல் திரும்பிச் சென்ற நாட்களும் உண்டு. எனவே தயவு கூர்ந்து உதவி செய்யுங்கள்” என்றார். மாற்று ஏற்பாடு மூலம் காண ஏற்பாடு செய்தேன். லண்டனில் இருந்து வந்த பெண் பேராசிரியர் என்பதால் வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்தும், மறுப்பு எதுவும் கூறாமல் வீட்டில் அனுமதித்து, உபசரித்து அனுப்பினார். கார் ஏறும் போது அவருக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

கணிதம் படித்த அனைவரும் கணித மேதை இராமானுஜனை அறிவர். இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு பல மொழிகளில் எழுதப்பட்டு உள்ளது. இராபர்ட் கனிகள் என்ற இங்கிலாந்து நாட்டுக்காரர் எழுதிய நூலின் தலைப்பு ‘;முடிவற்றதைக் கண்டறிந்த மனிதன்” என்பது. இந்தப் புத்தகம் பல  பதிப்புகளைக் கண்டுள்ளது. இராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் தலைசிறந்ததாக கருதப்படுவதும் இந்த நூலே. இத்தகைய நூல்கள் ஒரு பக்கம். இராமானுஜன் இறந்த பிறகு, அவரது சமன்பாடுகள், கோட்பாடுகளை ஆய்ந்தறிந்த கணித மேதைகளுடன் இணைத்து பெயரிடப்பட்ட சமன்பாடுகள் அவரது பெயரிடப்பட்ட ஆய்விதழ்கள், அவரது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பரிசுகள் ஆய்வு மையங்கள் என 25 க்கும் மேல் பட்டியல் நீளும்.

ராயல் சொசைட்டி ஆ‡ப் இங்கிலாந்தின் மதிப்புமிக்க அங்கத்தினராக மிக இளவயதில் தேர்வு செய்யப்பட்டவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் இவர் செய்த ஆய்வுகளுக்காகவே டீ.யு. பட்டம் வழங்கியது. அந்த டீ.யு. பட்டமே பின்னர் டாக்டர் பட்டமாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இத்தகைய கௌரவம் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வேறு எவருக்கும் வழங்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. 

கணித மேதை இராமானுஜத்தை கண்டெடுத்து உலகறியச் செய்தவர் பேராசிரியர் ஹார்டி. இவரிடம் ‘உலகக் கணித மேதைகளை 100 புள்ளிகளைக் கொண்ட அளவுகோலில் அளந்தால் யார், யார் எத்தனை புள்ளிகள் தேறுவர்” என்று கேட்டனர். ‘நான் ஒரு 25 புள்ளிகள் தேறுவேன். லிட்டில்வுட் 30 புள்ளிகள் பெறுவார். டேவிட் ஹில்பர்ட்டுக்கு 80 புள்ளிகள் வழங்கலாம். 100 புள்ளிகள் பெற தகுதியுள்ளவர் இராமானுஜன் மட்டுமே” என்றார். இராமானுஜத்தின் இரண்டாவது நோட்டுப் புத்தகத்;தில் இருந்த 47 கோட்பாடுகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்ட பேராசிரியர் ஹார்டி ‘எஞ்சியுள்ள ஆய்வுகளை தொகுத்து வெளியிட என் ஆயுட்காலம் போதாது. வேறு எந்த ஆய்விலும் ஈடுபட முடியாது” என மலைத்துப் போய் கூறினார். 18ஆம் நூற்றாண்டில் உலகப் புகழ் பெற்று விளங்கிய ஜெர்மனிய கணித மேதை ஜேகப் ஜேகோபியுடனும், 17 ஆம் நூற்றாண்டில் உலகப் புகழ் பெற்று விளங்கிய சுவிஸ் நாட்டு கணித மேதை லியனார்டு ய+லரோடும் ஐரோப்பிய கணித மேதைகள் இவரை ஒப்பிடுகின்றனர்.

இராமானுஜத்தின் வாழ்வையும் பணியையும் முன் வைத்து பத்துக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற திரைப்படங்கள், நாடகங்கள், புனைக் கதைகள் உலகம் முழுவதும் எழுதப்பட்டுள்ளது. நோய்க்கிருமிகள் உடலில் புகுந்து இராமானுஜத்தின் உடலை அரிக்கத் தொடங்கிய பின்னரே, இங்கிலாந்து செல்லகப்பல் ஏறினார். 1914 முதல் 1919 வரையான கேம்பிரிட்ஜ் வாழ்க்கையில்
நோயுடன் போராடிக் கொண்டே, கணிதம் என்னும் பெருங்கடலில் மூழ்கி, முத்தெடுத்த வண்ணமே இருந்தார். முறைப்படியான கணித கல்வி பெறாமலும், ஐந்தாண்டு காலத்திலும், இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திய மனிதன்; உலகில் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

ஐன்ஸ்டினின் இயற்பியல் சாதனைகளை போற்றிட 2005ம் ஆண்டை சர்வதேச இயற்பியல் ஆண்டாக சர்வதேச சமூகம் கொண்டாடியது. கலிலியோவின் பங்களிப்பை வானவியலில் போற்றும் வகையில் 2009ம் ஆண்டு சர்வதேச வானவியல் ஆண்டாக பன்னாட்டு சமூகம் கொண்டாடி மகிழ்ந்தது. வேதியியலுக்கு மேரிகிய+ரி ஆற்றிய பங்கை நினைவு கூற 2011ம் ஆண்டு சர்வதேச வேதியியல் ஆண்டாக கொண்டாடப்பட்டுள்ளது. இராமானுஜத்தின் 125ஆம் ஆண்டு பிறந்த ஆண்டையொட்டி 2012ஆம் ஆண்டு சர்வதேச கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு ஐ.நா.சபை அறிவிக்காமல் விட்டது வேதனை அளிக்கும் விசயம். அதனினும் கொடியது, 125 ஆண்டுகளுக்குப் பிறகும், கணித மேதை இராமானுஜன் பிறந்த இடம் உலகம் அறியாமல் இருப்பது. அதனை அறிந்தவர்கள் கூட அந்த வீட்டிற்குள் சென்று, நிதானமாக பார்த்து வர முடியாமல் இருக்கும் அவலம். 

இராமானுஜன் கணிதத்தில் மட்டும் மேதையல்ல. நற்பண்புகளிலும், மனிதாபிமானத்திலும் மாமேதை. கேம்பிரிட்ஜில் அவர் வாழ்ந்த காலம், முதலாம் உலகப் போர்முடிவுற்ற தருவாய். தான் உண்டு பழகிய சைவ உணவு கிடைப்பதில் பெருத்த சிரமம் இருந்த காலம். இருந்தும், அவர் சைவ உணவு பழக்கத்தை கைவிடவில்லை. தனது வழிகாட்டியான பேராசிரியர் ஹார்டி தீவிரமான கடவுள் மறுப்பாளர். இருந்தும் இருவரும் உயிருக்கு உயிராய் நட்புக்
கொண்டிருந்தார்கள். நோய் முற்றி இந்தியா திரும்பிய பிறகு வாழ்ந்தது ஓர் ஆண்டு காலம் மட்டுமே. இறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு ஹார்டிக்கு
எழுதிய கடைசிக் கடிதத்தில் கூட ‘நான் ஒரு முக்கிய சமன்பாட்டைக் கண்டு பிடித்துள்ளேன். அதற்கு மோக் தீட்டா (ஆழஉம வுhநவய) என்று பெயரிட்டுள்ளேன். அதில் சில எடுத்துக்காட்டுகளை தங்களுக்கு அனுப்புகிறேன்” என்று எழுதினார். தான் படும் அவஸ்தை, ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருப்பது, சிகிச்சைக்காக கோவை, கொடுமுடி, கும்பகோணம், சென்னை என அலைந்து திரிவது பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதவர். இந்தியா திரும்பியபின் தன் ஆய்வுகளைத் தொடர சென்னைப் பல்கலைக் கழகம் அளித்த ஸ்காலர்ஷிப்பின் ஒரு பகுதியை ஏழை மாணவர்களின் கல்விக்கும் நோட்டு புத்தகங்களுக்கும், உடைகள் மற்றும் பள்ளிக் கட்டணத்திற்கு செலவிடும்படி தெரிவித்தவர். வறுமை, ஏழ்மை, காச நோய் ஆகியவை தன்னை பங்கிட்டுக் கொண்ட போதும் இத்தகைய கருணை உள்ளத்தோடு இருந்தது கர்ணணை விஞ்சிய செயல் என்றே குறிப்பிட வேண்டும்.

கும்பகோணத்தில் அவர் வாழ்ந்த சிறிய வீடு. படித்த டவுன் உயர் நிலைப் பள்ளி. ஆய்வு மேற்கொண்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இறுதியாக ஆய்வு மேற்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம். தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட சென்னை பெருமாள் செட்டியார் வீடு. ஆகியவை அனைத்தும் அவரது
நினைவுகளை சுமந்து நிற்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது மார்பளவு வெண்கலச் சிலை, 100 கணித மேதைகளின் சொந்தச் செலவில் நிறுவப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், ‘தி இராமானுஜன் இன்ஸ்டிடிய+ட் ‡பார் அட்வான்ஸ் ஸ்டடி இன் மேத்தமெடிக்ஸ்” என்ற நிறுவனத்திலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ளது போல மார்பளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. கணித மேதை இராமானுஜன் அருங்காட்சியகம் மற்றும் கணிதக் கல்வி மையம் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள ‘டாட்டா இன்ஸ்டிடிய+ட் ஆ‡ப் ‡பண்டமண்டல் ரிசர்ச்”, அவரது கணிதக் குறிப்பேடுகளை பொக்கிசமாக பாதுகாத்து வருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக அது திகழ்கிறது. தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம், 32 வயதுக்குள் கணிதத் துறையில் சாதனை புரிந்தவர்களை உலகில் எங்கிருந்தாலும் தேடிக் கண்டறிந்து, ஆண்டு தோறும் ‘கணித மேதை இராமானுஜன் விருது” வழங்கி வருகிறது. அவர் பிறந்த இடத்தில் மட்டும் எந்த அடையாளமும் இல்லை. ஈரோடு நகரில் வாழ்பவரில் ஆயிரத்தில் ஒருவருக்காவது தெரியுமா? என்பது சந்தேகம். 

இராமானுஜன் பிறந்த நாளான டிசம்பர் 22ஆம் தேதியை தமிழக அரசு மாநில அரசின் தகவல் தொழில் நுட்ப நாளாக அறிவித்துள்ளது. இது எத்தனை பேருக்கு
தெரியும்? கணித மேதை இராமானுஜனின் 125 வது பிறந்த ஆண்டை வெகு விமரிசையாக கொண்டாட மத்திய, மாநில அரசுகள் ஓர் ஆண்டுக்கு முன்பே திட்டமிட்டு இருக்க வேண்டும். போதுமான நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். வருடம் முழுவதுக்குமான கொண்டாட்ட நிகழ்ச்சி நிரலை வெளியிட்டு இருக்க வேண்டும். மத்திய அரசு பல விசயங்களில் அமைதியாக இருந்துவிடுவது போல் இந்த விசயத்திலும் அமைதியாக இருக்கலாம். மாநில அரசு இப்போதேனும் விழித்துக் கொள்ளட்டும். உலகம் முழுவதும் பல ஆய்வு நிறுவனங்கள் கருத்தரங்குகள் நடத்த திட்டமிட்டுள்ளன. அறிவு ஜீவிகளோடு அந்த செய்திகள் முடிந்து விடும். குழந்தைகள், சிறுவர்கள், மாணவர்கள், மக்கள் என பெரும் எண்ணிக்கையில் இந்த மாமேதையின் 125-வது ஆண்டை கொண்டாட என்ன திட்டம் இருக்கிறது? கணித மேதை இராமானுஜத்தின் 125-வது ஆண்டு விழாவையோ, பிறந்த நாளையோ, நினைவு நாளையோ கொண்டாட வேண்டுவது, அவரது புகழ் பாடுவதற்கு அல்ல. அவரது நினைவு அலைகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதில் நாம் திளைப்பதும் அவசியம். இராமானுஜன் என்னும் மின் காந்த அலையை நமது குழந்தைகளையும் உணர வைப்பது அத்தியாவசியம். அதன் வழியாக படைப்பாற்றல் என்னும் பெரு நெருப்பை பற்ற வைத்தல் வேண்டும். இந்திய நாடு அறிவியல் தொழில் நுட்பத்தில் சுய சார்பை எட்ட இச்சமூகக் கடமையை செய்தாக வேண்டும். இதற்காகவே 125-வது ஆண்டு பிரமிக்கத்தக்க வகையில் கொண்டாடப்பட வேண்டும். பத்திரிக்கைகள், ஊடகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்து அமைப்புகளும் தங்கள் பங்குக்கு நிகழ்ச்சிகளை திட்டமிடலாம்.

கணிதமேதை இராமானுஜன் வீடு உள்ள தெருவின் பெயர் ‘கணித மேதை இராமானுஜன் வீதி” என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். தற்போது அந்த வீட்டில் குடியிருக்கும் உரிமையாளர் சம்மதத்துடன் அவரது நினைவு இல்லம் உருப்பெற வேண்டும். வீட்டின் மேல் தளத்தில் உரிமையாளருக்கு அரசு வீடுகட்டிக் கொடுத்து விட்டு, கீழ் தளத்தை பார்வையாளர் சென்று காணவாவது அனுமதிக்கலாம். 125-வது ஆண்டிலேயேனும் கணித மேதை இராமானுஜத்திற்கு நிகழ்ந்த இந்த அவலம் துடைத்தெறியப்பட வேண்டும்.

பேரா.என்.மணி
கட்டுரையாளர், மாநிலத் தலைவர்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 
மற்றும்  ஈரோடு கலைக்கல்லூரி பேராசிரியர்

Dec 16, 2011

புத்தகங்களை என்ன செய்வது ? -எஸ். ராமகிருஷ்ணன்

To add a library to a house is to give that house a soul. Your library is your portrait.

- Cicero

புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது, படிப்பது சரி என்று ஒத்துக் கொள்கிறவர்கள். புத்தகம் வைக்க இடமில்லை என்று சொல்வது என்னவிதமான மனநிலை, இது போல சங்கடங்கள் உங்களுக்கும் வந்திருக்கும் தானே இதை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் டி. எஸ். வெங்கட் என்ற நண்பர் ஒரு மின்னஞசல் அனுப்பியிருந்தார், இதே விசயத்தைப் பற்றி சென்ற முறை கோவை வந்த போது ஒரு நண்பரின் மனைவி என்னிடம் நேரடியாகவே சண்டையிட்டார், அநேகமாக வாசிக்கும் விருப்பம் உள்ள எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரே சிக்கல் இது தான் என்று தோன்றுகிறது

வாசிக்க விருப்பமுள்ளவர்கள் அத்தனை பேரின் கனவும் வீட்டில் ஒரு நல்ல நூலகம் அமைக்க வேண்டும் என்பது தான், ஆனால் அதை எங்கே வைப்பது, யார் பராமரிப்பது, எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருக்கின்றன

ஒருவகையில் புத்தகங்களை வைக்க இடமில்லாத நெருக்கடி தான் புத்தகம் படிப்பதைக் காப்பாற்றி வைத்திருக்கிறது என்பேன், வீட்டில் மிகப் பெரிய நூலகங்களை அமைத்தவர்கள் அதன்பிறகு படிப்பதையே விட்டகதையை நான் அறிவேன், நெருக்கடியான இடத்திற்குள் மறைத்தும் ஒளித்தும் சண்டையிட்டும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களே நம்மை மறுபடி வாசிக்கத் தூண்டுகின்றன,

ஒரு வணிகநிறுவன உரிமையாளர் தனது தாத்தா வாங்கிச் சேகரித்து வைத்திருந்த இரண்டாயிரம் புத்தகங்களை என்னிடம் காட்டி, இது புத்தகங்களின் கல்லறை போலதானிருக்கிறது, முப்பது வருசமாக யாரும் இதில் ஒன்றைக்கூட புரட்டிப் படிக்கவேயில்லை, அதே நேரம் புத்தகங்களை கடைக்குப் போட மனதுமில்லை, இதை என்ன செய்வது என்று கேட்டார், இது இன்னொரு விதமான நெருக்கடி.

உண்மையில் நமக்கு விருப்பமான ஒரு நூறு புத்தகங்களே போதுமானது தான், அது எந்த நூறு என்று தெரியாமல் தான் பலநூறு புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்,

வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை தேர்வு செய்வது ஒரு குறிப்பிட்ட மனநிலையே, அப்படிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகின்ற மனநிலையில் விரும்பிய புத்தகம் கிடைக்காமல் போய்விட்டால் அடையும் வேதனைக்காகவே புத்தகங்கள் பாதுகாக்கபடுகின்றன, இன்னொன்று புத்தகங்கள் கூட இருப்பது ஏதோவொரு பாதுகாப்பு உணர்வைத் தருகின்றன, அதுவும் ஒரு காரணம் தான்,

புத்தகங்களைச் சேகரிப்பதற்கு முன்பு அதை எதற்காகச் சேமிக்கிறோம், எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும், அத்துடன் புத்தகப்பூச்சி, கரையான், தூசியில் இருந்து அதை எப்படிப் பாதுகாப்பது என்பது முக்கியமானது, அதற்காக ஆண்டிற்கு ஒருமுறை புத்தகங்களை முறையாக உதறி வெயில்பட வைத்து கிருமிநாசினி அடித்து மறுமுறை அடுக்கவேண்டும்,

பல ஆண்டுகளாக புத்தகங்களுக்குள்ளாக அலைந்து நான் சுவாச ஒவ்வாமையால் அவதிப்படுகிறேன், மருத்துவர் சொல்லும் முதல் அறிவுரை எந்தப் பழைய புத்தகத்தையும் கையால் தொடாதே, பழைய நூலகம் எதற்குள்ளும் போகாதே என்பது தான், இரண்டையும் தவறாமல் செய்துவருகிறேன் நான், பின்பு எப்படி ஒவ்வாமை நீங்கும்,

என்னிடம் நாலாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன, அதில் பாதி அரிய புத்தகங்கள். முதற்பதிப்புகள். பல அரிய மொழியாக்கங்கள், இதை ஒரே இடத்தில் வைத்துப் பாதுகாக்க முடியாது என்று ஆங்காங்கே பிரித்து ஊருக்குக் கொஞ்சமாக தனியே பாதுகாத்து வைத்திருக்கிறேன்,

சமீபமாக இணையத்தில் கிடைக்கின்ற மின்னூல்களைப் படிக்கப் பழகி அதற்கென சோனி ஈபுக் ரீடரை வாங்கி அதில் ஐநூறு புத்தகங்களுக்கும் மேலாகச் சேகரித்து கையில் எடுத்துப்போய் பயணத்தில் படித்துவருகிறேன், கணிணியிலும் மடிக்கணிணியிலுமாக பலநூறு மின்னூல்கள் இருக்கின்றன, இவற்றைப் பொருள்வாரியாகப் பிரித்து தனியே தொகுத்து வைத்திருப்பதால் பயன்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் இருபது புத்தகங்கள் வாங்கிவிடுகிறேன், நான் வாசிக்க வேண்டும் என அனுப்பபடும் கதை, கட்டுரை, கவிதைப்புத்தகங்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டிவிடும். இவை தவிர புத்தகக் கண்காட்சி. பழைய புத்தகக் கடைகள் என்று வாங்கிக் குவித்த புத்தகங்கள் வீட்டில் நிரம்பிப் போயிருக்கின்றன, பலநேரங்களில் வாசிக்க பத்துத் தலைகள் வேண்டும் போலிருக்கிறது.

சிலநேரங்களில் ஒரே புத்தகத்தின் வேறுவேறு பதிப்புகளாக பத்துப் பிரதிகள் வாங்கி வைத்திருக்கிறேன், அது எதற்கு என்று எனக்கே புரியவில்லை, அது போலவே படித்த புத்தகங்களை ஆண்டுக்கு ஒரு முறை முதியோர் காப்பகம் அல்லது கிராமநூலகங்களுக்குத் தந்துவிடுகிறேன், அப்படியிருந்தாலும் புத்தகங்கள் வைக்க இடமேயில்லை,

கன்னிமாரா நூலக அளவில் ஒரு கட்டிடம் தந்துப் புத்தகங்களை வைக்கச்சொன்னாலும் இடம் போதவில்லை என்ற எண்ணம் இருக்கவே செய்யும், அது இடம் தொடர்பான பிரச்சனையில்லை, படிக்கவேண்டும் என்ற தீராத ஆசை தொடர்பானது.

புத்தகங்களை ஒரு முறைப் படித்து முடித்தவுடன் அதன் ஆயுள் முடிந்து போய்விட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள், பிறகு எப்போதாவது ஒரு முறை அதை இருபது முப்பது பக்கங்கள் புரட்டுவதோடு சரி, தனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்று அடுத்தவர் நம்பவேண்டும் என்பதற்குத் தான் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்களோ என்று கூடத் தோன்றுகிறது,

பழைய உடைகள். வீட்டுஉபயோகப்பொருள்கள். பொம்மைகள். நாற்காலிகள் மெத்தைகள். கரண்டி டம்ளர்கள் என்று வேண்டாத பலநூறு பொருட்கள் எல்லோருடைய வீட்டிலும் நிரம்பியிருக்கின்றன, ஆனால் அவை எல்லாம் என்றாவது உதவும் என்று நம்புகிறார்கள், புத்தகத்தை அப்படி நினைக்கவேயில்லை

அதைப் படித்து முடித்துவிட்டதும் எடைக்குப் போட்டால் கிலோவிற்கு ஐந்து ரூபாய் தருவார்கள், அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்,

உண்மையில் பழைய இரும்பு ஆணிகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கூட புத்தகங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை,

ஆனால் புத்தக வாசகனுக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவனைப்பற்றிக் கொள்கிறது, அவன் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை, ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறான், அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறான், ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறான், புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக. நண்பனாகவே கருதுகிறான், ஆகவே புத்தகவாசகன் ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறான்,

உலகின் கண்களில் புத்தகங்கள் வெறும் அச்சிடப்பட்ட காகிதங்கள், ஆனால் வாசகன் கண்ணில் அது ஒளிரும் ஒரு வைரக்கல், அதன் மதிப்பை காலம் தான் முடிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள்ளிருக்கிறது, ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஆன்மாயிருக்கிறது, அதை வாசகனால் நன்றாகவே உணர முடிகிறது, புத்தகத்தோடு உள்ள உறவு எப்போதுமே தனித்துவமான நினைவாகிவிடுகிறது, பலநேரங்களில் வாழ்க்கை அனுபவத்தை விடவும் புத்தகங்களே நம்மை வழிநடத்துகின்றன. ஆறுதல்படுத்துகின்றன.

எனது படுக்கையில், எழுதும் மேஜையில், நாற்காலியின் அடியில், அலமாரியில். காரில். என எங்கும் புத்தகங்களே இருக்கின்றன, ஒரு இரவு ரயில்பயணத்திற்கு துணையாக மூன்று புத்தகங்கள் கொண்டு போகின்ற ஆள் நான், காத்திருக்கும் எந்த இடத்திலும் படிக்க கையில் ஒரு புத்தகம் வைத்திருப்பேன், அப்படி விமானநிலையம் ரயில்நிலையத்தில் படித்தவை ஏராளம். இவையின்றி சிலவேளைகளில் படிப்பதற்காகவே தனியே பயணம் செய்திருக்கிறேன், ஆள் அற்ற தனியிடங்களில் தங்கியிருக்கிறேன்.

படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்கிறார்கள்,

ஒன்று நான் தினசரி படிக்கின்றவன், மற்றது நான் தேர்வு செய்து படிக்கின்றவன், மூன்றாவது நான் தொலைக்காட்சியே பார்ப்பது கிடையாது, ஆகவே போதுமான நேரம் எனக்கிருக்கிறது, படிப்பதில் திட்டமிடல் தான் முக்கியம்,

நான் ஒரே நேரத்தில் நாலு புத்தகங்கள் படிக்கின்ற ஆள், காலையில் ஒன்று. மதிய உணவுவேளையில் வேறு ஒன்று. காரில் செல்லும் போது படிப்பது வேறு, இரவு ஒன்று. என்று ஒவ்வொன்றிலும் ஐம்பது நூறு பக்கங்கள் படித்துவிடுவேன், நான் படிக்கின்ற வேகம் அதிகம், ஆகவே விரைவாக வாசித்துவிட முடியும்,

அப்படியானால் நிறைய பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டிவிடுவீர்களோ என்று சந்தேகமாக கேட்பார்கள், நாம் அரைமணி நேரம் சைக்கிள் ஒட்டும் தூரத்தை ரேஸில் ஒட்டுகின்றவன், எப்படி ஐந்து நிமிசத்தில் கடந்து போய்விடுகிறானோ அது போல படிப்பிலும் வேகமும் கூர்ந்த கவனமும் இருந்தால் வாசிப்பது சாத்தியமே, நான் எனது பதிநாலாவது வயதிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன், அன்று காமிக்ஸ் இன்று நீட்சே அவ்வளவு தான் வேறுபாடு.

ஒரு ஆண்டில் எந்த்த் துறை சார்ந்து முதன்மையாகப்படிப்பது என்பதைத் திட்டமிட்டு அது குறித்த ஆதாரப்புத்தகங்களை வாங்கி அந்த ஆண்டிற்குள் படித்துவிடுவேன், மற்றபடி நண்பர்கள் மூலமும் இணையதளம் வழியாகவும் வேண்டிய புத்தகங்கள் கிடைத்துவிடுகின்றன.

அதிகம் விற்பனையாகிறது, பரபரப்பாகப் பேசப்படுகின்றது., யாரோ ஒரு பிரபலம் சிபாரிசு செய்கிறார் என்பதற்காக எதையும் நான் படிப்பதேயில்லை, பெரும்பாலும் நான் படிக்க ஆசைப்படுகின்றவை நூறு வருசங்களுக்கு முன்பாக எழுதப்பட்டவையாக இருப்பதே பிடித்திருக்கிறது, இது தற்போதைய மனநிலை, பத்துவருசங்களுக்கு முன்பாக சமகால இலக்கியமாகத் தேடித்தேடி வாசித்தேன், இன்றுள்ள சமகாலச்சூழல் மீது அதிக ஈர்ப்பு இல்லை,

அகழ்வாய்வுகள், மன்னர்கள் எழுதிய புத்தகங்கள். வரலாற்று ஆவணங்கள். அறிவியலின் வரலாறு. நுண்கலையின் மகத்தான ஆளுமைகள், போன்றவற்றை வாசிக்கையில் துப்பறியும் கதைகள் படிப்பது போலவே இருக்கிறது,

தமிழில் வாசிப்பது போல நாலு மடங்கு ஆங்கிலத்தில் வாசிக்கிறேன், எனது வாசிப்பின் முக்கியத்துறைகள். இலக்கியம், காமிக்ஸ். வரலாறு, வாழ்க்கைவரலாறு, விஞ்ஞானம் மற்றும் நுண்கலைகள். ஜென் கவிதைகள் சார்ந்த புத்தகங்கள்

பயணம் சார்ந்த நூற்களைப் பெரும்பாலும் படிக்க விரும்ப மாட்டேன், அது போலவே கல்விப்புலஆய்வுகள். அசட்டு நகைச்சுவை எழுத்து, விஞ்ஞானக்கதைகள். திரில்லர் பேய்க்கதைகள். மனவியல் சார்ந்த புத்தகங்கள். இலக்கியக் கோட்பாடு சார்ந்த விளக்கங்கள். ஆய்வுகள் போன்றவை என் விருப்பமானவையில்லை,

சினிமாவின் புதிய தொழில்நுட்ப சார்ந்த விசயங்கள் மற்றும் உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்களை வாசிப்பேன், சினிமா விமர்சனங்களை வாசிப்பதில்லை, பௌத்த தத்துவம் எனது விருப்பங்களில் ஒன்று, அதில் ஆழமாக தேடித்தேடி வாசிக்க கூடியவன்,

பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்கள் தான் எனது விருப்பமான இலக்கியக்களம், அவற்றை மறுவாசிப்பு செய்வது பிடித்தமானது.

ஜப்பானிய மற்றும் சீனப்பண்பாடு கலாச்சாரம். இலக்கியம் கலைகள் குறித்து அறிந்து கொள்ளவும் வாசிக்கவும் அதிக நாட்டமுள்ளவன் அவற்றை நமது மரபின் நீட்சி என்று கருதுவதால் அதிகமாகவே வாசிப்பேன், அதை போலவே என் எழுத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த ருஷ்ய இலக்கியங்களை அடிக்கடி மீள்வாசிப்பு செய்தபடியே இருப்பேன்.

ஒரு புத்தகம் படிக்க எவ்வளவு நேரம் ஆகும், அதில் எவ்வளவு படிக்க முடியும் என்று நாள், மணி, நேரம் கணக்கிட்டு நான் படித்த புத்தகங்கள் குறித்து என்னை சந்தேகப்பரிசோதனை செய்யும் சில அடிமுட்டாள்களை நான் கண்டுகொள்வதேயில்லை, காரணம் படிப்பது எனது விருப்பத்திற்காக மட்டுமே, அவர்களது பாராட்டுகளைப் பெறுவதற்கு அல்ல,

வீட்டிலே சிறிய நூலகம் வைத்துள்ள பலரையும் எனக்கு தெரியும், அவர்கள் என்னை விடவும் அதிகமான குடும்ப நெருக்கடியைச் சந்திக்கின்றவர்கள், ஆனால் அவர்கள் எந்த நெருக்கடியிலும் சேகரித்த புத்தகங்களை இழக்கவேயில்லை,

சென்னையில் கவிஞர் ராஜமார்த்தாண்டன் அறையில் ஒரு ஆள் படுக்கப் போதுமான அளவு கூட இடமில்லாத அளவு புத்தகங்கள் நிரம்பியிருந்தன, அதற்குள்ளாக தான் அவர் வசித்து வந்தார், மொழிபெயர்ப்பாளர் சா,தேவதாஸ் அறைமுழுவதும் புத்தகங்களாகவே இருக்கும், கோணங்கியின் நூலகம் மிகப்பெரியது, அபூர்வமான பல புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கிறார், நாவலாசிரியர் பா.வெங்கடேன், தமிழவன், சுந்தர ராமசாமியின் நூலகங்கள் முறையாக. பகுக்கப்பட்டு துறைவாரியாக அடுக்கிவைக்கப்பட்ட சிறப்பான நூலகங்கள், கவிஞர் நா. முத்துகுமாரின் தந்தை மிகப்பெரிய புத்தக வாசகர், காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நூலகம் மிக அற்புதமானது, பல முக்கிய எழுத்தாளர்களின் முதல்புத்தகங்கள் அவர்கள் கையெழுத்துடன் அவரிடமிருந்தன,

எண்பதுகளின் துவக்கத்தில் நானும் கோணங்கியும் கோட்டையூரில் உள்ள ரோஜா முத்தையாவைத் தேடிச்சென்றோம், தமிழ்நாட்டில் தனிநபராக ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் சேகரித்து தனியே நூலகம் வைத்திருந்தவர் அவர், அவரது சேமிப்பைத் தான் சிகாகோ பல்கலைகழகம் விலைக்கு வாங்கி டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி இன்று ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் என சென்னையில் நடத்திவருகிறது, தரமணியில் உள்ள இந்த நூலகம் தமிழின் மிகப்பெரிய பொக்கிஷம்

நாங்கள் ரோஜா முத்தையாவைத் தேடிச்சென்று டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளைக் கேட்டபோது அவர் எங்களை வரவேற்று உபசரித்து தன்னிடம் அதன் பிரதிகள் இருப்பதாக எடுத்து வந்து படிக்கத் தந்தார், புத்தகங்களை பாதுகாக்க ரோஜா முத்தையா தனி ஆட்கள் வைத்திருந்தார், அவரது சேமிப்பில் அரிய பல தமிழ் நூல்கள் இருந்தன, இலக்கியப் புத்தகங்கள். இதழ்கள். நாடக சினிமா நோட்டீஸ். இசைத்தட்டுகள். விளம்பரங்கள் என்று அவரது சேமிப்பு இன்று ஒரு பெரிய ஆவணக்களஞ்சியமாக விளங்குகிறது

ரோஜா முத்தையா நூலகம் போலவே புதுக்கோட்டையில் ஞானாலயா என்ற அரிய நூலகம் இயங்கிவருகிறது, அதை நடத்திவருபவர்கள் பா.கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதிகள், தமது வாழ்நாள் முழுவதும் உழைத்துச், சேகரித்த புத்தகங்களை கொண்டு பத்து லட்சம் செலவில் 1800 சதுர அடியில் அமைந்துள்ள இந்நூலகத்தில் அரிய நூல்கள் மட்டுமின்றி, முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்துக் கடிதங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

எனது நண்பரும் மிகச்சிறந்த தமிழ் அறிஞருமான பல்லடம் மாணிக்கம் அவர்கள் தனது புத்தகச் சேமிப்பை கொண்டு தமிழ் நூல் காப்பகம் என மிகப்பெரிய நூலகம் ஒன்றை விருத்தாசலத்தில் நடத்திவருகிறார்

பல்லடம் மாணிக்கம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே வாங்கிச் சேகரித்த ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்குள்ளன, .இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரையான பல முதல் பதிப்புகள், கம்பராமாயணத்திற்குப் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள். திருக்குறள் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.

வேதங்கள், உபநிடதங்கள்,கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகள். ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் என அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பம்சம்.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் கொண்டதாக இது அமைந்திருக்கிறது.

இது போலவே திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகமும் மிக முக்கியமான ஒன்றே, இங்கே பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முந்நூற்றுக்கும் அதிகமான தமிழ்நூல்களை வெளியிட்டும் மறுபதிப்புச் செய்தும், திருத்தப்பதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது இவ் ஆதீனம்.

தஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்தில் தற்போது 10 மொழிகளைச் சேர்ந்த 69,000 நூல்கள், 39,000 ஓலைச்சுவடிகள் மற்றும் சோழர்கால கலைநயமிக்க ஓவியங்கள் உள்ளன.

நாயக்கர் காலத்தில் சரஸ்வதி பண்டார் என்ற பெயரில் 1918 வரை அழைக்கப்பட்ட இந்த நூலகம், மராட்டியர்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சை மன்னர் சரபோஜியால் சரஸ்வதி மகால் நூலகம் என்று மாற்றம் பெற்றது. 1918-ல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்ட இந்த நூலகத்தில் அரிய ஒலைச்சுவடிகளை பாதுகாக்கவும் முறைப்படுத்தி பதிப்பிக்கவும் படுகின்றன.

தமிழ் இலக்கியங்களின் மூலச் சுவடிகளை தேடி சேமித்து, பகுத்து, பாடபேதம் கண்டு, தொகுத்து அச்சிலேற்றும் பணியாற்றும் நூலகம் உவேசா நூலகம், இது சென்னையில் உள்ளது, செவ்வியல் இலக்கியங்களுக்கான 61 ஓலைச் சுவடிகளைக் கொண்ட நூல் நிலையம் இதுவொன்றேயாகும் பத்தொன்பதாம் நூற்றாண்டு வெளியீடுகள் டாக்டர். உ.வே.சா. கி.வா.ஜ. போன்ற பேரறிஞர்கள் சேகரித்தவை. அனைத்துத் தமிழ் ‌ இலக்கியநூல்கள். இலக்கண நூற்கள் இங்கே உள்ளன

இது போலவே சென்னையில் ஒரு தமிழ் புத்தகம் கூட இல்லாத ஒரு நூலகமிருக்கிறது, அது சென்னை இலக்கிய சங்க நூலகம், அது நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில், சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ள D.P.I வளாகத்தினுள் உள்ளது,

1812ஆம் ஆண்டுசென்னையிலிருந்த ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஒரு பகுதியாக இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது ஒன்றரை லட்சம் புத்தகங்கள் இங்கே உள்ளன. இலத்தின், பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் புத்தகங்கள் மட்டுமே இங்குள்ளன, தமிழ் புத்தகமே கிடையாது, இதில் உறுப்பினராவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. வருட சந்தா ஐநூறு ரூபாய். உறுப்பினர் ஒரே நேரத்தில் நான்கு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள 134 ஆண்டு பழமை வாய்ந்த பென்னிங்டன் பொதுநூலகம் முக்கியமான ஒன்று, 1953-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1875-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் ஆசியுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த சரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமசந்திரராவ், டி. ராமஸ்வாமி ஐயர், டி.கிருஷ்ணராவ், முத்துஐயங்கார் மற்றும் முத்துச்சாமி பிள்ளை ஆகியோர் இணைந்து, இந்த நூலகத்தை ஆரம்பித்தனர். இங்கே தமிழில் 20,113 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 21,277 புத்தகங்கள் என மொத்தம் 41,390 புத்தகங்கள் உள்ளன.

இது போலவே சேலம் தமிழ்சங்க நூலகம். கும்பகோணம் கோபால்ராவ் நூலகம் மதுரை ரீகல் தியேட்டரின் பின்பக்கம் உள்ள விக்டோரியா நூலகம். சிரவணபெலகோலாவில் உள்ள சமண நூலகம். சித்தாமூரில் உள்ள குந்தகுந்தார் நூலகம். கயாவில் உள்ள பௌத்தநூலகம். பூனாவில் உள்ள பண்ட்ராகர் நூலகம். ராஜபாளையத்தில் உள்ள மு,கு,ஜெகநாத ராஜா நூலகம். பிஎஸ்கே,சமஸ்கிருத நூலகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம், கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய நூலகம். டெல்லி பொது நூலகம், சாகித்ய அகாதமி நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம், சென்னை அடையாறில் உள்ள அடையாறு நூலகம். பெரியார் நூலகம். மதுரை காந்தி மியூசிய நூலகம், நெய்வேலி மத்திய நூலகம். பனாரஸில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரி நூலகம். பரோடாவில் உள்ள மத்திய நூலகம், போன்றவை நான் பார்த்த நூலகங்களில் முக்கியமானவை,

புத்தகங்களை இரவல் கொடுப்பதைப் பற்றி எழுத்தாளர் அனதோலியா பிரான்சு வேடிக்கையாக குறிப்பிட்டது தான் நினைவிற்கு வருகிறது

Never lend books, for no one ever returns them; the only books I have in my library are books that other people have lent me.

ஆனால் கைவிடப்பட்ட புத்தகங்களை விடவும் படிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்ற புத்தகங்கள் வேதனைமிக்கவை, இதைக் கேலி செய்து ஸ்விப்ட் பேடில் ஆப் புக்ஸ் என்ற ஒரு புனைவு எழுதியிருக்கிறார், வர்ஜீனியா வுல்ப் கூட நடைபாதைக்கடைகளில் விற்கப்படும் புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்கிறார்,

புத்தகங்களை கண்ணாடி அலமாரியில் வைத்துப் பூட்டி சவமாக்கிவிடுவதை விட அவற்றை யாரோ படிக்கட்டும் என்று உலகின் கைகளுக்கே திரும்ப தந்துவிடுவது நல்லது என்றே தோன்றுகிறது, அது தான் எப்போதும் புத்தகங்களின் விதிவசம் போலும்,

••

உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்-தொ.பரமசிவன் உரை

மதுரை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் “உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்” என்ற தலைப்பில் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவரான தொ.பரமசிவன் அய்யா ஆற்றிய நீண்ட உரையை எனது அலைபேசியில் பதிந்து என் நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். உலகமயமாக்கலுக்கு எதிரான அவரது உரையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். தொ.பரமசிவன் அய்யாவின் உரையை தொகுத்ததில் எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள் அமைந்தால் என்னையே சேரும். மற்றபடி எல்லாப்புகழும் தொ.பரமசிவன் அய்யாவுக்கே! என்னால் அய்யாவிடம் தமிழ் கற்க முடியவில்லை என்ற ஏக்கத்தை நான் கேட்ட அவரது பல உரைகள் போக்கியது. எனவே, நானும் தொ.ப’வின் மாணவன்தான். தொ.ப’வின் அற்புதமான உரையை அனைவரும் வாசியுங்கள்! 

‘’பேசுகிற இடம் மதுரை. பேசப்படுகிற விசயம் புத்தகம். எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் எந்த ஊரில் அதிகமாக புத்தகங்கள் பிறந்தது என்றால் மதுரையில் தான் அதிக புத்தகங்கள் தோன்றியுள்ளன. ‘கலித்தொகை’ என்ற செவ்விலக்கியம் பாண்டியநாட்டு இலக்கியம் என்றே அழைக்கப்படுகிறது. ‘பரிபாடல்’ என்ற செவ்விலக்கியத்துக்கு பெயரே மதுரை இலக்கியம். அப்பேற்பட்ட ஊரிலே நின்று பேசுகிறேன் என்ற உணர்வு எனக்கு தன்னியல்பாகவே உண்டு. இந்த ஊரின் நீரும், நெருப்பும் கூட தமிழ்ச்சுவை அறியும் என்கிறது ஒரு நூல்.

“உலகமயமாக்கலில் பண்பாடும், வாசிப்பும்” என்ற தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழுதுக்கும் உள்ள தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு.

புத்தகங்களின் மீது சமூகம் நடந்து போகிறது. நடந்து போவது என்றால் எழுதியவனின் மனநிலையை நாம் உணர்ந்து கொள்வது. எனக்கு இங்கு வந்து பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. சில ஊர்களில் சந்தை என்று போட்டிருப்பார்கள். இங்கு புத்தகத் திருவிழா என்று போட்டிருக்கிறார்கள். “திருவிழா என்பது கொண்டாடப்பட வேண்டியது. அதே போல் புத்தகங்களும் கொண்டாடப்பட வேண்டியவை”. உலகமயமாக்கல் என்ற சொல்லே எனக்குப் புரியவில்லை. உலகை எப்படி உலகமயமாக்குவது? மதுரையை எப்படி மதுரைமயமாக்குவது? மதுரையை வண்ணமயமாக்கவேண்டும், ஒளிமயமாக்கவேண்டும் என்று சொல்லுங்கள். புரிகிறது. ஆனால், உலகமயமாக்கம் என்ற சொல்லே நமக்கு புரியவில்லை. நம் ஆட்சியாளர்கள் நமக்கு அளித்த நன்கொடையிது. இவர்கள் ஏதோ சொல்ல வருகிறார்கள். அதில் ஒரு நுண் அரசியல் இருக்கிறது. நான் கட்சி அரசியலை சொல்லவில்லை.

உலகமயமாக்குவது என்றால் உலகையே சந்தையாக மாற்றுவது. உலகிலே சந்தை மட்டும் இருந்தால் போதுமா? இம்மதுரையிலே சந்தையும் இருக்கும், தமுக்கமும் இருக்கும், மீனாட்சிகோயிலும் இருக்கும், மனநோயாளிகளுக்கான மருத்துவமனையும் இருக்கும். சந்தையில் ஐந்து வயது சிறுவர், சிறுமிகளுக்கு இடம் இருக்க முடியுமா? அல்லது கம்பூன்றி நடக்கும் வயதானவர்களுக்கு இடம் இருக்குமா? வயதானவரை தெருவில் பார்த்தால் ஒதுங்கி நடப்போம். ஆனால் சந்தையில் “சந்தையில இடிக்கிறதெல்லாம் சகஜம்” என்று போய் விடுவார்கள். பாக்கெட்டில் பணமில்லாதவனுக்கு சந்தையில் இடமிருக்குமா? கன்னிப் பெண்களுக்கு அங்கு இடமிருக்குமா? சந்தை என்பது வாங்குவதற்கான இடமே தவிர அங்கு மனித உறவுகள் மலராது. சிறைச்சாலைகளில் கூட மனித உறவுகள் மலரும். மருத்துவ மனைகளில் கூட மனித உறவுகள் மலரும். நான் ஒரு மாதம் மருத்துவ மனையில் இருந்தேன். பக்கத்து அறையில் இருந்தவர்களெல்லாம் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் சந்தையில் “அஞ்சால் விற்றால் லாபம் என்றால் அஞ்சால் விற்போம். நஞ்சை விற்றால் லாபம் என்றால் நஞ்சை விற்போம்”. இது சந்தையின் தன்மை. உலகமயமாக்கலை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். அறிஞர்கள் எதிர்க்கிறார்கள். என்னைப் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்களும் எதிர்க்கிறோம். ஏனென்றால் இது ஒரு பண்பாட்டு படையெடுப்பு. நமது பண்பாட்டை குலைப்பதற்கான முயற்சி. இதை பண்பாட்டுத் தாக்குதல் என்றும் கூறலாம்.

பண்பாடு என்பது பொருள் உற்பத்தியில் தொடங்குகிறது. ஒரு குழந்தை இலையில் தனக்கான பீப்பியை செய்து கொள்கிறது. தனக்கான வண்டியை செய்து கொள்கிறது. தனக்கான காகிதப்பையை செய்து கொள்கிறது. இப்படி தனக்காக செய்து கொள்கிறபோதுதான் கலாச்சாரம் பிறக்கிறது. பொருள் உற்பத்தியில்தான் உறவுகள் மலரும். பொருள் உற்பத்தி செய்கிற போது மனிதன் கலாசாரம் உடையவன் ஆகிறான். அது வாடுகிற போது கலாச்சாரமும் செத்து போய் விடுகிறது. உலகமயமாக்கம் என்ற பெயரில் இவர்கள் உலகையே சந்தையாக்க முயல்கிறார்கள். சந்தையில் எதைவிற்றால் லாபம் கிடைக்கும் என்பதைத்தான் பார்ப்பார்கள். அங்கு மனிதர்களின் உணர்வுகளுக்கு இடமிருக்காது. மரபு வழியான அறிவுச்செல்வத்தைத் (இதைத்தான் மார்க்ஸ் ‘’தொகுக்கப்படாத விஞ்ஞானம்’’ என்றார்) திட்டமிட்டுக் கொள்ளையடிப்பது உலகமயமாக்கம்.. நம்முடைய பாரம்பரிய மருத்துவ அறிவுகளை கொள்ளையடிப்பது உலகமயமாக்கம். கால்ல புண்ணு வந்தா மஞ்சளையும் வெங்காயத்தையும் அரைச்சுப் போடுவோம். இனி எதாவது ப்ரெஞ்ச் கம்பெனியோ, கனடா கம்பெனியோ மஞ்சள், வெங்காயத்தையெல்லாம் நான்தான் கண்டுபிடிச்சேன்னு காப்பிரைட் வாங்கி வச்சுகிருவான். அப்புறம் வெங்காயம், மஞ்சளப் பயன்படுத்த நாம அவன்ட்ட அனுமதி கேட்கணும். பணம் கட்டணும். இப்படி மரபுரீதியான அறிவுச் செல்வத்தை திட்டமிட்டே கொள்ளையடிக்கிறார்கள். அறிவு என்பது 19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழிற்புரட்சியில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. நமக்கு அறிவு பற்றிய சரியான பார்வை இல்லை. பி.எஸ்.சி ரசாயனம் படிக்கும் மாணவனைப் பார்த்து ரசாயனம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை. சொல்லிக் கொடுத்தால்தானே அவன் சொல்வான். மனிதன் வேட்டையாடியபோது உணவு மீதம் ஆகி டிஹைட்ரேட் ஆகி நாளை பயன்படுத்தலாம் என்ற போதே ரசாயனம் தொடங்கிவிட்டது. அதில் உப்பைச் சேர்க்கும் போது இன்னும் கொஞ்சநாள் பயன்படுத்தலாம் என்ற போது ரசாயணம் வளரத்தொடங்கியது.

மனிதகுல வரலாறு தெரியாத கல்வி முறையில் வளரும் இன்றைய தலைமுறையில் பண்பாடு பற்றி பேசுவதெல்லாம் பைத்தியகாரத்தனம். உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்று சொல்லிச்சொல்லியே நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
“ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று கேட்கும் போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். அதை ஒரு தலைவர் சொன்ன போது ஊரே திரண்டது. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று சொன்னால் சைவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இது திருமூலரின் திருமந்திரம். “ஒன்றே குலம், ஒருவனே தேவன் – அவன்தான் இராமன்” என்னும் போது தான் பிரச்சனை வெடிக்கிறது. எல்லா பிரம்மாண்டங்களும் மனித விரோதமானவை. ஜனங்களின் வாழ்வுக்கு பிரமாண்டம் தேவையில்லை. பிரமாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும். 60 மாடி, 70 மாடின்னு கட்டடம் கட்ற போது தானே பின்லேடன் வர்றான். உலகின் அறிவுச் செல்வங்களை கொள்ளையடிக்கவே உலகமயமாக்கம் பயன்படுகிறது. ஆப்ரிக்காவில் உள்ள காடுகளிலும், கடற்கரையோரங்களிலும் இருந்த தாதுக்களைக் கண்டுபிடித்து கொள்ளையடிக்கிறாங்களே அது தான் இன்பஃர்மேசன். இது தான் இன்பஃர்மேசன் டெக்னாலஜி. எதற்கும் பயன்படாத தேரிக்காடு. அங்கே கல்லுமுள்ளும் ஓணானும் குடிகொண்டு இருக்கும். அங்கே தோரியம் இருக்குன்னு சொல்றானே அது இன்பஃர்மேசன். அங்கே பெரிய கம்பெனிக்காரன் வர்றானே அது உலகமயமாக்கம். எல்லா இடத்திலும் கையவச்சுட்டு இப்ப சமையலுக்குள்ளயே வந்து கையவச்சுட்டாங்க. பீட்ஸான்னு ஒரு இத இப்ப திங்க கொடுக்கிறாங்க. அதுல என்னா இருக்குன்னு நமக்கு தெரியுமா? நம்ம வீட்ல செய்த பண்டத்துல என்னா இருக்குன்னு நமக்கு தெரியும். “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”. நம்ம உணவுச் செல்வங்களை இன்னொருத்தன் கொள்ளையடிக்கிறானே அது உலகமயமாக்கம். நிலத்தையும் உணவையும் கூட காக்க முடியாத சமுதாயம் வாழ்வதற்கு லாயக்கில்லாதது. திருமலைநாயக்கர் மகாலும், மீனாட்சியம்மன் கோயிலும் மட்டும் நமது முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்து அல்ல. தூய நீரும், காற்றும் நமது சொத்தில்லையா? எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்பது தான் உலகமயமாக்கம். விற்க முடியாத பொருள் மனிதனிடம் இருக்கிறது.
நாம் இங்கு திருவள்ளுவரையே விற்றுக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் “எற்றிற்கு உரியர் கயவர்?’’ என்கிறார். திருக்குறளுக்கு உயிர் இருக்கிறது. அதை எழுதியவனுக்கு ஆன்மா இருக்கிறது. அதனால் தான் எழுதியவனுக்குச் சாவு இல்லை என்கிறோம். வடநாட்டில் வியாசர் மகாபாரதத்தைச் சொல்ல அதை விநாயகர் தன் கொம்பை உடைத்து எழுதியதாக மரபு இருக்கிறது. ஆனால், இதைவிடச் சீரிய மரபு தென்னாட்டில் இருக்கிறது. விநாயகருடைய அப்பா சிவனே திருவாசகம் எழுதியதாக கூறப்படுகிறது. திருவாசகம் காணாமல் போய் அனைவரும் தேடுகிறார்கள். காணவில்லை. ஒரு புத்தகத்தை காணாமல் ஆக்குவது தேசத்துரோகம். அதை தொலைத்தவர்களுக்குத்தான் தெரியும். திருவாசகம் இறுதியில் சிதம்பரத்தில் இருந்தது. சிவபெருமான் கையிலே இருந்தது. சிவபெருமானிடம் கேட்டால் இது என் பெர்சனல் காப்பி என்கிறார். என்னவென்றால் அந்தப் புத்தகத்தில் திருவாதவூர் மாணிக்கவாசகன் சொல்ல உடையார் திருச்சிற்றம்பலமுடையார் எழுத்து என்று அதில் இருக்கிறது. இதை ஏன் சிவன் வைத்திருந்தார் எனப் பின்னால் வந்த அறிவியலாளர் தத்துவப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சொல்கிறார்: “உலகைப் படைத்து காத்து அழித்து பிறகு மீண்டும் உலகை படைக்கும் முன் உள்ள ஒரு லன்ச் பிரேக்கில் படிக்க ஒரு புத்தகம் வேண்டும் அல்லவா? அதற்குத்தான் போரடிக்காமல் இருக்க சிவன் திருவாசகத்தை வைத்திருந்தார்’’ என கூறுகிறார் தன் மனோன்மணியத்தில். இவ்வாறு கடவுளே ஸ்க்ரைப்பாக இருந்திருக்கிறார் நம் நாட்டில்.

ஒன்றைத் திட்டமிட்டே பழசாக்குவது உலகமயமாக்கம். இந்த வருடம் ஒரு இருசக்கர வாகனம் வாங்கினால் அடுத்த வருடம் ஒரு சின்ன மாற்றத்துடன் புதிதாக ஒன்று வரும். இப்படித் திட்டமிட்டுப் பழசாக்கி அடுத்த பொருளை விற்பதுதான் உலகமயமாக்கம். எல்லாவற்றையும் சந்தைப்படுத்திக்கொண்டிருக்கும்போது நாம் இந்த ஏமாளிகளிடம் பண்பாடு பற்றி பேசுவது எல்லாம் முட்டாள்தனம். பண்பாடு பற்றி பேசுவதே நாம் ஏமாளித்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
உலகமயமாக்கம் எழுத்துலகத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது எனப் பார்ப்போம். சென்னை புத்தகத் திருவிழாவில் 10 லட்சம் புத்தகம் விற்றிருக்கிறது என சொன்னார்கள். மகிழ்ச்சி. மனிதன் வாசிக்க தொடங்கிவிட்டான். வாசிக்கும் மனிதன்தான் யோசிக்கிறான். சமூகம் மாற்றம் அடையத் தொடங்கியதா எனப்பார்த்தால் மாற்றம் ஏதுமில்லை. ஏனென்றால் பாதிக்குப் பாதி வாஸ்து புத்தகங்கள்தான் விற்றிருக்கிறது. இங்கு இப்பொழுது விற்கும் புத்தகங்களைவிட பல மடங்கு குருபெயர்ச்சி பலன் புத்தகம் வித்திருக்கும். குருவே வருசம் வருசம் இடம் பெயர்றார்ன்னா நீ உன் சிந்தனையில் இடம் பெயரக்கூடாதா? மாறுதல் ஒன்றே மாறாதது. 15 வருசமா அப்படியே இருக்கீங்கன்னு சொன்னா அது உண்மையில்ல. முடி லேசா நரைச்சுருக்கும். வழுக்கை கூடியிருக்கணும். அப்படியே எதுவும் இருக்க முடியாது. மாற்றங்களை உருவாக்குவது புத்தகங்கள். மார்க்சிம் கார்க்கியுடைய தாய் காவியம் போன்ற புத்தகங்கள் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியவை. அறிந்தும் அறியாமலும் படித்த புத்தகங்கள் தான் நமக்குள் ஒரு மாற்றம் ஏற்பட உதவுகிறது. அதென்ன அறியாமல் படித்த புத்தகம்? கொல்லைப்பக்கம் போட்ட தக்காளி திடீர்ன்னு செடியா முளைப்பது போல. நாம் தெரியாமல் இப்படி வாசித்த புத்தகங்கள் தான் அறியாமல் படித்த புத்தகங்கள்.
மனித மனத்திலும் விழும் விதைகள் முளைக்கத் தவறுவதே இல்லை. நான் எங்க ஊர் மாவட்ட நூலகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு புத்தகம் எடுத்தேன். அது சரித்திரத்தை மாற்றிய “அங்கிள் டாம்” புத்தகம் என்று தெரியாமல் அதன் குழந்தைப் பதிப்பின் தலைப்பைப் பார்த்து எடுத்தேன் – தாமு மாமாவின் கதை. இந்த புத்தகத்தை இப்பொழுது காணவே முடியவில்லை. நாம் அடிமையாகவே இருக்க சம்மதித்துவிட்டோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரின் வரியைப் படிக்கும் போது அங்கிள் டாம் புத்தகம் ஞாபகம் வரும். மேல்மண் கீழ்மண் ஆவதும், கீழ்மண் மேல்மண் ஆவதும் வரலாறு. புரட்சியை ஒரு புத்தகம் எப்பொழுதும் ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது. இப்பொழுது சிலர் தினமும் ஒரு புத்தகம் எழுதுகிறான். என்ன செய்யிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என ஒரே வரியில் அப்போதிருந்த சாதிக்கோட்பாடுகளை உடைத்த வள்ளுவரிடம் இருந்த கலகக்குரலை விடவா இனி எழுத முடியும்? எழுத்துல எதிர்ப்பு இருக்கலாம். கலகக்குரலாய் எழுதலாம். ஆனால், வெறுப்பு இருக்க கூடாது. இப்ப எழுதும் சிலரின் எழுத்த வாசிச்சா வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். கோவம் வரலைன்னா அவன் மனுசனே இல்ல. கடவுள் பற்றி இருக்காரா, இல்லையான்னு எழுதலாம். பேசலாம். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணத்தினால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது.

எதை வேண்டுமானாலும் எழுதலாம், யாரைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? உலகமயமாக்கம் எல்லாவற்றையும் சந்தைப்படுத்த முயல்கிறது. என்னிடம் வந்து ஒரு இளங்கவிஞர் மழை பற்றிய கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு கேட்டார். “தீங்கின்றி நாடெல்லாம்” என்று சொன்னேன். மழையைப் பார்த்தால் ஒவ்வொரு சமயமும் ஒரு வித்தியாசம் காட்டும். ஒரிசா வெள்ளத்தை பார்த்தால் புரியும் “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி” என்ற வரி. அதைப்போலத் தண்ணீர் இல்லாம தவிக்கிறப்ப தெரியும் “நீரின்றி அமையாது” என்ற வரி. வாசிப்பது மூலம் யோசிக்கிறான். யோசிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறான். உலகமயமாக்கலில் எல்லாவற்றையும் சந்தைப்படுத்துகிறோம். திருக்குறளை மட்டுமல்ல. திருவள்ளுவரையே சந்தைப்படுத்துகிறோம். இன்று எல்லாவற்றையும் விற்க தொடங்கிவிட்டோம். நுகர்வுக் கலாசாரம் ரொம்பப் பெருகிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் ஒரு சோப்பு இருந்தது. இப்ப ஆறு பேர் இருக்கிற வீட்ல ஏழு சோப்பு இருக்குது. வெளிநாட்டுக் கம்பெனி எல்லாம் “ஒனக்கு ஒண்ணுந்தெரியாது நான் குடுக்கிறேன் இத சாப்புடு”ன்னு சொல்றான். அதுவும் நம்ம மதுரைல சொல்லலாம்மாங்க? தினம் ஒரு கண்டுபிடிப்பா கண்டுபுடிக்கிற ஊரு. போண்டாக்குள்ள முட்டைய வைச்சு கண்டுபுடிச்ச ஊரு. கென்டகி சிக்கன்னு ஒரு கம்பெனி நான் கோழிக்கறி தர்றேன். அத சமைன்னு சொல்றான். நம்ம ஊருல நம்ம பொண்ணுகளுக்கு கோழிக்கறி சமைக்கத் தெரியாதா? மருத்துவ சம்மந்தமான அறிவுச் செல்வங்களை திட்டமிட்டு பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன. இதற்காகவே ஆராய்ச்சி பண்ண ரொம்ப பேர் இங்கு வந்து இருக்காங்க. இதற்கெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் பணங்கொடுக்கிறார்கள்.
உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற சொல்லிலேயே நாம் ஏமாந்து போகிறோம். “மெய்ப்பொருள் காண்பது அறிவு” யார் என்ன சொன்னாலும் இந்த நுகர்வு கலாச்சாரத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். இப்ப கடன் திருவிழா, லோன் மேளா எல்லாம் நடத்துறாங்க. இந்த திருவிழாவிற்கு எப்ப கொடி ஏத்துவாங்க? எப்ப இறக்குவாங்கன்னு தெரியல. எந்த நாடும் உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்ததாக வரலாறு இல்லை. “மாற்ற முடியாதது எதுவோ அது அறம். மாற்றம் வந்தாலும் அதிக மாறுதல் வராதது பண்பாடு”. உலகமயமாக்கல் என்ற ஆரவாரத்திற்கு நாம் ஏமாந்து போகிறோம். நாம் தினமும் பங்கு சந்தை பார்க்கிறோம். எனக்கு என்னவென்றே புரியவில்லை. இப்பதான் தெரிந்தது அது இரண்டு சதவீத மக்களுக்கான செய்தியென்று. நாம் பிரம்மாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை உண்டு பண்ண வேண்டும். நாயகம் ஜனங்களின் நாயகமாக இருந்தால் அது ஊடகங்களின் நாயகமாக இருக்க முடியாது. ஒரு நாள் அறிஞனை முட்டாளாகக் காட்டும். பண்பாடு பற்றியெல்லாம் வாசிக்கிறவங்க கொறச்சல். இதப்பத்தி யோசிக்கிறவங்க ரொம்பக் கொறச்சல். பேசுறவங்க கொறச்சல். எழுதுறவங்க ரொம்ப கொறச்சல். எனக்கு ஒரு இங்கிலீஸ் படம் ஞாபகத்துக்கு வருது. ஆண்டவர் கொடுத்த பல கட்டளைகளை மோசஸ் தொலைத்து விட்டு கடைசியாக உள்ளவற்றைத்தான் கடவுள் கொடுத்தார் என சாதிப்பார். அது போல நாம் எதை இழந்தோம் என்பதைக்கூட மறந்து விட்டோம். “இழந்தோம் என்பதைவிட இழக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறோம்” என வருத்தப்படுகிறார் ஆழ்வார். இதை பாரதி “கஞ்சி குடிப்பதற் கிலார் – அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்” என்கிறார். நாம் எப்போதும் மேற்கேதான் பார்ப்போம். கிழக்கே சீனா, ஜப்பானை எல்லாம் பார்க்க மாட்டோம். எத்தனை பேருக்கு மோஸி என்ற அறிஞரைத் தெரியும்?
இறுதியாக வாசிப்பு என்பது யோசிப்பை தரும். யோசிப்பது மூலம் சமூக மாற்றம் ஏற்படுத்த வேண்டும். நாம் யோசிப்பதன் மூலம் ஜனங்களின் நிலையை மாற்ற வேண்டும். பாரம்பரியமான அறிவுச் செல்வத்தை நாம் தக்க வைத்துக்கொள்ளப் போராட வேண்டும். எதையும் விற்கலாம், ஒன்றை திட்டமிட்டுப் பழசாக்கி புதியதைச் சந்தைப்படுத்தலாம் என்பது போன்ற பிரம்மாண்டங்களுக்கு எதிராக சிந்திக்கும் கலகக்குரல் நமக்கு வேண்டும். பண்பாடு என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேண்டும். நன்றி’’

தொ.பரமசிவன் அய்யாவின் உரையை வாசித்து மற்றவர்களிடம் இதைக் குறித்து பேசுங்கள், எழுதுங்கள். பிரம்மாண்டங்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். மேலும் தொ.பரமசிவன் அய்யாவின் கட்டுரைகளை படிக்கக் கீற்று வலைத்தளத்தை பார்க்கவும். மேலும் இவரது புத்தகங்கள்பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயம், சமயங்களின் அரசியல்வாசியுங்கள். தொ.பரமசிவன் அய்யாவிற்கு நன்றிகள் பல!
நன்றி-ஹரிஸ்

கல்விச் சிந்தனைகள்

” அறிவு நமக்கு ஆற்றலை அளிக்கிறது. அன்பு நம்மை முழுமையடையச் செய்கிறது”- டாக்டர். ராதாகிருஷ்ணன் முன்னாள் குடியரசு தலைவர்

நமது இந்தியாவில் 504 பல்கலைக் கழகங்கள் உள்ளன. மொத்தக் கல்லூரிகள் 25,951. இதில் மகளீர் கல்லூரிகள் 2565. இக் கல்லூரிகளில் படிக்கம் மாணவர்களின் எண்ணிக்கை 1.36 கோடி. இதில் பெண்கள் 56.49 லட்சம்.

” கல்வி என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த கருவி. உலகை மாற்றுவதற்கு அதைப் பயன்படுத்த முடியும்” -நெல்சன் மண்டேலா

” அடிப்படை அறிவை வளர்க்கின்ற கல்வியைப் புகட்ட நினைக்காமல், பட்டதாரிகளை உற்பத்தி செய்வது பல்கலைக் கழகங்களின் நோக்கமாக இருக்கக்கூடாது. - ஜவஹர்லால் நேரு.

” அனைத்து குழந்தைகளும் ஓவியர்களே, பிரச்சனை என்னவென்றால்  வளர்ந்த பிறகும் எப்படி ஓவியராகவே இருப்பது என்பதுதான்” - பிக்காஸோ

”ஒரு மாணவனுக்கு உண்மையான பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியர்தான்” - மஹாத்மா காந்தி

”வீட்டுக்கொரு புத்தகசாலை வேண்டும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருட்களுக்கும், போக போக்கியப் பொருட்களுக்கும் தரப்படும் நிலை மாறி, புத்தகச் சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை அடிப்படை தேவை. அந்த தேவையை பூர்த்தி செய்ததானதும் முதல் இடம் புத்தகச் சாலைக்கே தரப்படவேண்டும்.  - அண்ணாத்துரை

“நான் நிலவு வரை செல்வதற்கு உதவியது தாய்மொழி தமிழ்தான்.”   - மயில்சாமி அண்ணாத்துரை

” இயல்பிலேயே எதையும் கற்கும் ஆற்றல் குழந்தைகளிடம் உண்டு, மாணவர்களுக்கு எந்த ஆசிரியரும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் கற்றுகொள்கிற வாய்ப்பை மகிழ்ச்சிக்குரியதாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் ஏற்படுத்தித் தருவது மட்டும்தான்.” - ஜே. ஷாஜஹான்

கல்வியில் தோல்விக்கு இடமில்லை, அனுமதியில்லை என்ற நிலை கொணருவது பெரும் புரட்சிதான். - டாக்டர். ஆர். ராமானுஜம்

”மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பழைய நிலைமைகளை நியாயப்படுத்தினால் எந்த மாற்றமும் கல்வியில் வரமுடியாது”  - எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க

”கூட்டாக சேர்ந்து கற்பது சிறந்த அரசியல். தனியாகக் கற்பது சுயநலம் என்று புரிந்துகொண்டோம்.” - பார்பியானா மாணவர்கள்

” அவர் பிரதமாராக இருக்கும்போது லிப்டில் வந்தார். திடீரென்று லிப்ட் பழுதாகிவிட்டது. 20 நிமிடங்கள் போராடி லிப்டைத் திறந்தனர். வெளியே வந்த அவர் அதிகாரிகளை அழைத்தார். ஓர் ஆலோசனை சொன்னார். ”லிப்டில் சிறியதாய் ஒரு நூலகம் அமைக்கலாம்” என்றார்” - ஜவஹர்லால் நேரு

மொ.பாண்டியராஜன். மதுரை

உலகின்..முதல்..பெண்..மகப்பேறியல் ..மருத்துவர்..அக்னோடைஸ்..!- பேரா.மோகனா

ஏதென்ஸின்..பெருமை ..!

கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் .இது பல குன்றுகளுக்கு இடையே அற்புதமாய் அமைந்துள்ளது.கி.மு 7,000 த்திலேயே புதிய கற்காலத்திலிருந்தே , அங்கு மனிதர்கள் அங்கு வாழ்ந்தனராம்.ஆனால் கி.மு 1400 களிலிருந்தே, மைசீனிய நாகரிகம் காணப்பட்டது. கி.மு 900 த்தில் உலகில், ஏதன்ஸ் என்றால் அது சுதந்திரம், கலை மற்றும் ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது. அறிவு மற்றும் மதிகூர்மையின் பெண்கடவுளான, ஏதெனாவின் பெயரிலேயே, அந்த நகரின் தலைநகர் ஏதென்ஸ் என்று அழைக்கப்படுகிறது.இன்றுவரை ஏதென்ஸ் என்றால் அதன் நினைவுகளும், சிறப்பும் வரலாற்றாளர்களால் இன்றும் நினைவுகூரப்படுகின்றன. அப்பகுதி மேற்கத்திய நாகரிகத்தின் தொட்டில் என்றும் அழைக்கப் படுகிறது.
பெண்களின்..படிப்புக்கு..சட்டப்படி..தடை..!

ஏதென்ஸின் உயர் குடும்பத்தில் கி.மு 300 ல் பிறந்தவர் அக்னோடைஸ் என்ற பெண். அக்னோடைசின் குடும்பம், சொந்த வாழ்க்கை பற்றி ஏதும் தெரியவில்லை. கி.பி 100 ல் வாழ்ந்த லத்தீன் சரித்திர ஆசிரியர் ஹைஜினஸ்,எழுதிய குறிப்புகளிலிருந்தே , அக்னோடைஸ் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன . கி.மு 400 -300 களில், பெண்கள், பிரசவத்திற்கு தாதியாகவும், காயத்திற்கு கட்டுப் போடவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். உலகின் புகழ் பெற்ற மருத்துவரான, ஹிப்போகிரடசும் கூட, அவரின் முதன்மை மருத்துவ பள்ளியில் பெண்களை, மருத்துவம் பயில அனுமதிக்க வில்லை. ஆசியா மைனரில் உள்ள பள்ளியில், மகப்பேறியலும், பெண்களின் நோயியல் பற்றி மட்டுமே பயில அனுமதித்தார். அதன் பின், அந்த கால கட்டத்தில் ஏதென்ஸ் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாலும், பெண்கள் படிக்கவும், பணி புரியவும் சட்டப்படி தடை இருந்தது. இந்த தடையை மீறுபவர்களுக்கு, தண்டனை.. கொலைதான். .! மேலும் அப்போது, ஆண் மருத்துவர்களிடம், மருத்துவம் பெற நிறைய பெண்கள் விரும்பாததால், பெண்களின் இறப்பு விகிதமும் அதிகரித்தது. 
கல்விக்காக...ஆண் வேடம்..தரித்த..அக்னோடைஸ்..!

பெண்கள் கல்வி பெறமுடியாத ,அரசியல் மற்றும் சமூக சூழலில்தான், ஓர் உயர் குடும்பத்தில் அக்னோடைசும் பிறந்தார்..ஏதென்சில்..! கல்விஞானம் பெற விரும்பிய அக்னோடைஸ் ஏதென்சில் உள்ள சட்டதிட்டங்கள் அறிந்து, மனம் வெறுத்துப் போனார்.அக்னோடைசுக்கு கல்வியின் மேலுள்ள ஆர்வத்தை அறிந்த, அக்னோடைசின் தந்தை, எப்படியாவது அவருக்கு படிப்பு ஏற்பாடு செய்வேன் என உறுதி அளித்தார். அக்னோடைஸ் படிக்க விரும்பியதோ..மருத்துவம். ! எனவே, அக்னோடைஸ், தந்தையின் ஆதரவுடனும். உதவியுடனும், மற்றவர்களுக்கு தெரியாமலும், மருத்துவம் பயின்றார். சட்டப்படி உள்ள தடையை மீறி எப்படி படித்தார் என்கிறீர்களா? அதுதான், துணிச்சலான, ஆச்சரியமான ஒன்று. தந்தையின் உந்துதலால், அக்னோடைஸ் தலைமுடியை ஆணைப்போல் வெட்டினார்.! ஆணைப் போலவே உடை அணிந்து, மருத்துவ வகுப்புக்குச் சென்று வந்தார் அக்னோடைஸ். அக்னோடைஸ் அலெக்சாண்டரியாவின் புகழ் பெற்ற , உலகின் முதல் உடற்கூறியல் மருத்துவரான, ஹீரோபிலசிடம் மருத்துவம் பயின்றார்.இவர்தான் முறையாக மனித உடலை அறுத்து மருத்துவம் பயின்றார். ஹீரோபிலஸ்தான், மனிதனின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றி படித்து ஆராய்ந்தவர். 9 புத்தகங்களும் எழுதியுள்ளார். ! மனிதனின் அறிவு மூலையில் உள்ளது, இதயத்தில் அல்ல என்று முதலில் கூறியவரும் இவரே .! .

ஏதென்ஸின்.. புகழ்.. பெற்ற.. மருத்துவர்..!

அக்னோடைஸ் கி.மு 280 ,ஜூன் 3 ம் நாள், அக்னோடைஸ் மருத்துவ படிப்பினை முடித்தார் என்று சொல்லப்படுகிறது. அவருடன் படித்தவர்களிலேயே, மிக அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ சோதனை படிப்பில் மருத்துவரானாராம். . இருப்பினும் தான் ஒரு பெண் என்பதை மறைத்தே இருந்தார். மருத்துவப் படிப்பு முடிந்தபின், தெருக்களில் நடந்து திரிவாராம். அப்போது ஒரு பெண், பிரசவ வேதனையில் அளவுவத்தைக் கேட்டு, அந்த வீட்டில் நுழைந்து அந்தப் பெண்ணின், குழந்தை பிறப்புக்கு உதவத் துவங்கினார்.ஆனால், அக்னோடைசின் ஆணுடையையும், தலை முடியையும் பார்த்த அந்த பெண், இவரிடம் மருத்துவம் பார்க்க மறுத்துவிட்டார். அதன் பின்னரே,அக்னோடைஸ் தானும் ஒரு பெண்தான் என்பதை, குழந்தைப் பேறு கால பெண்ணிடம் தெரிவித்து, பிரசவம் பார்த்து, மகவை எடுத்துத் தந்தார். அதன்பின், அகனோடைசிடம், அவர் பெண் என்பதாலும், அவரது மருத்துவத் திறமையாலும், ஏராளமான பெண்கள் சிகிச்சைக்கும், பிரசவத்துக்கும் வந்தனர். அவரின் புகழ் ஏதென்ஸ் முழுவதும் பரவியது. அக்னோடைசுக்கு..கொலை.. தண்டனை..!

அக்னோடைஸ் பெண் என நிரூபித்தல்..

அக்னோடைஸ் மருத்துவமும், மகப்பேறும் பார்க்கத் துவங்கியதால், ஆண் மருத்துவர்களிடம், பெண்கள் செல்வதே இல்லை. அவர்களின் பெருமையும் குறைந்தது. இதனால், அக்னோடைசின் மேல் பொறாமை கொண்டனர். அக்னோடைஸ் மணமான பெண் நோயாளிகளை தவறான பாதைக்கு இட்டு செல்கிறார்,இரண்டு பெண் நோயாளிகளை பாலியல் தொந்தரவு செய்தார் என அவர் மேல் குற்றம் சுமத்தினர். அக்னோடைஸ் பற்றி அவதூறான வதந்திகளைப் பரப்பினர். ஏதென்ஸ் நகரில், அக்ரோபோலிசின் வடமேற்கில் உள்ள கொலை தண்டனை நிறைவேற்றப்படும் ஆரோபகஸ் என்ற சிறப்பு நீதிமன்றத்துக்கு அக்னோடைசை கொண்டு சென்றனர். அங்கு சென்றதும், உயிர் தப்புவதற்காக,தான் பெண் என்பதை அனைவர் முன்னிலையிலும் நிரூபிக்க வேண்டியதாயிற்று. அக்னோடைஸ் பெண் எனத் தெரிந்ததும்,குற்றம் சுமத்திய ஆண் மருத்துவர்களும், நீதியரசர்களும் மிகுந்த கோபம் கொண்டனர். அதனால், சினமுற்று, அரசின் தடையை மீறி மருத்துவம் படித்தார் என, அவரை மீண்டும் கொல்ல ஆணையிட்டனர்.

அக்னோடைசை..காப்பாற்றிய...மருத்துவர்களின்..மனைவிகள் ..!

ஏதென்ஸின் , சிறப்பு நீதிமன்றத்தில், ஆண் மருத்துவரின் மனைவிகளும், அதென்ஸ் பெண்களும் கூடிவிட்டனர். அக்னோடைசை கொல்ல நீதிமன்றம் ஆணையிட்டதை ஒத்துக் கொள்ள மறுத்தனர். இந்த ஆண்கள் எங்களின் எதிரிகள், அக்நோடைச்தான், எங்களைக் காப்பாற்றியவர். அவரை கொல்லக் கூடாது என்றும், அவர் தொடர்ந்து மருத்துவ பணியினை செய்யவேண்டும் என நீதியரசர்களிடம்,வாதாடினர். அப்படி இன்றி, அவர் கொல்லப்பட்டால், நாங்கள் அனைவரும் செத்துப் போவோம் என்றனர். அனைத்துப் பெண்களின் வேண்டுகோளுக்கிணங்க ,அக்னோடைஸ் விடுதலை செய்யப்பட்டார்.அவர் மீண்டும் மருத்துவம் பார்க்கலாம் என்றும் சொல்லப்பட்டது. அதன்பின், பெண்களும் படிக்கலாம், மருத்துவமும் படிக்கலாம், மருத்துவப் பணி புரியலாம்,என்றும் சட்டம் இயற்றப்பட்டது. அவரது காலம் பற்றி தெளிவாக தகவல்கள் இல்லை என்றாலும், கி.மு 300 களில்தான் வாழ்ந்தார் என்பது தெரிகிறது. திருமணமே செய்து கொள்ளாமல்,தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு மருத்துவப் பணி செய்தே வாழ்ந்தார் அக்னோடைஸ்..

நான் வளர்கிறேனே மம்மி..அயொடின்.! _பேரா.மோகனா


உங்கள் வளர்ச்சியில்.. அயொடின்!
  
  

நான் வளர்கிறேனே மம்மி..என்று உங்கள் அம்மாவிடம் தமிழில் கொஞ்சினாலும், கொஞ்சாவிட்டாலும், உங்களின் வளர்ச்சிக்கு அயொடின் அவசியத் தேவை.சார். நீங்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வளர்கின்றன. வளர்ச்சிதான் உயிரோடு இருப்பதை நினைவூட்டும் விஷயம். அந்த வளர்ச்சிக்கு தூண்டுகோல் எது தெரியுமா? அயோடின்தான்உயிருக்குஉயிரான முக்கிய கனிமம். ஆனால் பூமியில் கிடைக்கும் தனிமங்களில் மிகவும் அரிதானதும்,அதிக கனமானதும் இதுதான் .ஆனால் இது பொதுவாக கடல் உணவிலும் சில காய்கறிகளும் உள்ளது. இருப்பினும் அயொடின் உயிரிகளின் உயிர்வாழ்தலுக்கும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் மிக மிக இன்றியமையாதது. அது மட்டுமல்ல. இது உடல்நிலை வெப்பம் தக்கவைக்கவும், முடி, தோல், பல் மற்றும் நகங்களை நல்ல நிலையில் பாதுகாக்கவும் உதவுகிறது.
   எங்கெங்கு அயொடின் உள்ளது.? 
   
      
    நம் உடலில் கழுத்துப்பகுதியில் தைராய்டு என்ற சுரப்பி ஒன்று இருக்கிறது. அதுதான் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணி. தைராய்டு சுரப்பில் சுரக்கும் தைராய்டு ஹார்மோன்தான் வளர்ச்சியைத் தூண்டுகிறது.தைராய்டு ஹார்மோனின் அடிப்படைப் பொருள் அயொடின் (Iodine). 15 -20 மி.கி அயோடின் தைராய்டு சுரப்பியிலும், மீதி 65 % உடலின் அனைத்து திசுக்களிலும் உள்ளன.உடலின் தற்காப்புத் திறன் உருவாக மிகவும் அயொடின் உதவுகிறது. அயொடின் பல தளங்களிலிருந்து கிடைத்தாலும் கூட, எளிதில் கிடைக்குமிடம் உப்பு மட்டுமே. அயொடின் ரொட்டி, கடல் உணவு மற்றும் கடல் தாவரங்களின் திசுவுடன் பிரிக்க முடியாத இணைப்பாக உள்ளது.

    அயொடின் என்றால் என்ன? 
  
  அயோடின் ஒரு வேதியல் தனிமம். இதன் குறியீடு "I". அயோடின் என்ற சொல் கிரேக்கத்துக்கு சொந்தமானது.ஐயோடேஸ் (Iyodes)என்ற கிரேக்க சொல்லுக்கு வயலட்/கருநீலம் நிறம் உள்ளது என்று பொருள். இதன் நிறத்தை ஒட்டியே அயொடின் எனற பெயர் இதற்கு சூட்டப்பட்டது..சூரிய குடும்பத்திலேயே இது ஓர் அரிதான தனிமம். இதன் அணு எண் 16 .அதன் அணு எடை:126.9045 g.mol -1இது புவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் 47 வது இடத்தில் உள்ளது . இது 114 °C யில் உருகும். ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப் போய்விடும். இதற்கு பதங்கமாதல் நிகழ்வு என்று பெயர்.இதன் உப்புக்கள் நீரில் கரையக்கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.

அயொடினின் குணங்கள்.! 
  அயொடின் ஒரு கலப்பில்லாத அலோகத் (non-metallic)த்னிமம். இது கருஞ்சாம்பல்/கரு நீலம் கலந்த பளபளப்பான வனப்புமிகு அலோகத் தனிமம்..இது ஹாலோஜன் (halogen) குடும்பத்தைச் சேர்ந்தது. இது பல உலோகங்களுடன் இணைந்து காணப்படுகிறது.இது இயல்பாகவே காற்று, நீர் மற்றும் நிலத்தில் காணப்படுகிறது. அயொடின் நச்சுத்தன்மை வாய்ந்தது. இதன் வாயு கண்ணையும் நுரையீரலையும் எரிச்சலடையச் செய்யும். ஆனால் முக்கியமாக அதிக அளவு அயொடின் பெருங்கடலில்தான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உத்தேசமாக, 400.000 டன்கள் அயொடின் அயோடைடு,ஹைடிரோ குளோரிக் அமிலம் மற்றும் மீத்தைல் அயொடைடு என்று கடல் உயிரிகள் மூலம் உற்பத்தியாகை கடலில் பரவிக்கிடக்கிறது. இவற்றில் பெரும்பான்மையானவை அங்கேயே நிலத்தில் படிந்து உயிர்ச்சுழற்சியின் பிரிக்க முடியா பங்காளியாகி விடுகிறது. அயொடின் 131 என்ற அதன் ரேடியோநியூக்ளிடைடுகள் (radionuclides) வான்வெளியில் வெடிக்கும் அணு ஆயுதகருவிகள் உறபத்தியில் பங்குபெறுகின்றன. அதன் பயன்பாடு 1945,ல் துவங்கி 1980 ல் சீனா சோதனை செய்ததுடன் அதன் சரித்திரம் முடிந்துவிட்டது. அயொடின் 131 புற்றுநோய் அபாயத்தை அதிரிகரிக்கிறது.

அயொடின் கண்டுபிடிப்பு.ம் பயனும்.! 

 
       பூமிலிருந்து அயோடின் கிடைத்தாலும், முதன் முதலில் இந்த தனிமத்தைக் கண்டறிந்தவர் பிரெஞ்சு விஞ்ஞானியான பெர்னார்டு கூர்டாய்ஸ்(Bernard Courtois ) என்பவர் தான். பெர்னாட்ர்டு கடல் பாசியுடன் கந்தக அமிலத்துடன்க் கடல்பாசி சாம்பலைக் கலந்தபோது,1811 ம ஆண்டு இந்த தனிமத்தைக் கண்டுபிடித்தார்.உலர்ந்த கடல் பாசிகள், குறிப்பாக, லிமினரியா (Liminaria) குடும்பத்தைச் சேர்ந்தவைகளில் அதிகம் அயொடின் உள்ளது. . இதில் ௦. 0.45 % அயொடின் உள்ளது.அயொடின் மருத்துவத்துறையிலும், புகைப்படக்கலையிலும், சாயம் தோய்க்கவும் பெரிதும் பயன்படுகிறது. அயொடின் இயற்கையாக, கடல்நீரில் சூழலுட்ன் இணைந்து கரைந்த நிலையில் உள்ளது.சிலசமயம் இது சில தாது உப்புக்களுடன் கலந்து நிலத்திலிருந்தும் கிடைக்கும்.

     அயொடின் சொல்லும் கதை..! 

 
    

ஒவ்வொரு தனிமத்தின் கண்டுபிடிப்பும் சுவை நிரம்பியதும்,,கதைநிரம்பியதும்தான். ஒருக்கால் அப்போது நோபல் பரிசு இருந்திருந்தால், பெர்னார்டு நிச்சயம் இரண்டு நோபல பரிசினை வாங்கி

இருப்பார். இதிலுள்ள கூத்து என்னவென்றால் மனிதனைக் கொல்வதற்கான வெடிமருந்து செய்துகொண்டிருந்த கூர்டாய்ஸ், மனிதனின் உயிரைக் காப்பாற்றும் அருமருந்தான அயொடினைக் கண்டு பிடிக்க நேர்ந்தது ஒரு எதிர்பாராத விபத்துதான். பிரெஞ்சு இளைஞரான விஞ்ஞானி பெர்னார்டு கூர்டாயஸ் பாரிஸிலுள்ள தன் ஆய்வக்த்தில் பணி புரிந்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு புது வகையான தனிமம் தன் செயல்பாட்டில் குறுக்கிட்டதைப் பார்த்து அசந்து பிரமித்து போனார்.. அவரது குடும்ப பண்ணையினர் நெப்போலியனின் போருக்காக சால்ட் பீட்டர் என்னும் வேதிப்பொருளைத் தயாரித்தனர்.இது துப்பாக்கி மருந்துக்கானது. சால்ட் பீட்டர் என்பது பொட்டாசியம் நைட்டிரேட் (potassium nitrate)ஆகும். அப்போது மரச்சாம்பலையே சால்ட் பீட்டர் தயாரிப்புக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் அது போர்க்காலமாகையால், மரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
    எதிர்பாராத கண்டுபிடிப்பான அயொடின்..!

  
   பிரான்சில் சால்ட் பீட்டர் தயாரிக்க, மரத்திற்கு மாற்று தேடினர். அப்போது கிடைத்ததுதான் பிரான்சின் வடக்குக் கடற்கரையில் ஏராளமாய் மண்டிக்கிடக்கும் கடல் பாசிகள். இந்த கடல்பாசியை எரித்து அந்த சாம்பலுடன், அடர்கந்தக அமிலத்தையும் சேர்த்தனர். அடர் கந்தக அமிலம், கடல்பாசி சாம்பல் துகளுடன் இணைந்த மாத்திரத்திலேயே, கூர்டாய்ஸ் ஓர் அற்புதமான அபார நிகழ்வைச் சந்தித்தார்..எதிர்பாராவிதமாக, கருநீலவண்ணத்தில் ஒரு புகை அதிலிருந்து எழுந்தது. அது செம்பு குடுவைகளின் ஓரத்தில் படிகமாகப் படிந்தது. அது மட்டுமல்ல. செம்பு பாத்திரத்தை அரிக்கவும் செய்தது. இதனைப் பார்த்து வியந்து போய், ஆச்சரியத்தில் பேசக்கூட மற்ந்துபோனார் கூர்டாய்ஸ். பின்னர் தான் கண்டுபிடித்த அதிசயப் பொருளை பாட்டிலில் அடைத்து,இதன் குணங்களை அறிய தனது நண்பர்களான நிக்கொலஸ் கிளமெண்ட்(F .Nicolas Clement (1779–1841) மற்றும் பெர்னார்டு டெசோர்மெஸ்ஸுக்கு (J. Benard Desormes(1777–1862)க்கும் அனுப்பினார். பின்னர் அதனை நிரூபணம் செய்ய ஜோசப் கே லூஸ்ஸாக் (Joseph Gay-Lussac) என்பவரின் தலைசிறந்த ஒரு வேதிநிறுவனத்திற்கும் இந்த புதிய பொருளை அனுப்பி வைததார். அதனையே, இயற்பியலாளார் ஆண்ட்ரே மேரி ஆம்பியருக்கும் (physicst Andre-Marie Ampere (1775–1836) அனுப்பினார். அனைவருமே . இந்த தனிமத்தின் பெயர் அயொடைடு/அயொடின் எனறு சொன்னார்கள். கூர்டாய்ஸ் கண்டுபிடித்த புது பொருளுக்கு கிரேக்க வழியிலேயே அயொடின் (அயோடின்) என்ற பெயரும் சூட்டப்பட்டது.கிளமெண்ட்டும், டெசோர்ஸஸும் கூர்டாய்ஸ்தான் அயொடினின் கண்டுபிடிப்பாளார் என 1813,நவம்பர் 29 அன்று கூர்டாய்ஸின் கண்டுபிடிப்பை உலகறிய அறிவித்தனர். 

  அயொடினின் ஆபத்திலிருந்து தப்பித்த கூர்டாய்ஸ்.!

   
    இளைஞரான கூர்டாய்ஸ் கொஞ்சம் ரொம்பத்தான் புதிய தனிமத்துடன் விளையாடிப்பார்த்தார். ஆனால் அவர் அதன் மூலம் அதிர்ச்சி அடைந்ததுதான் மிச்சம். இந்த அயொடினை அம்மோனியாவுடன் சேர்த்துப் பார்த்தார். விளைவு? ஒரு சாக்லெட் வண்ண திடப்பொருள் கிடைத்தது. அதன்பெயர்தான் நைட்டிரஜன்-டிரை –ஆக்சைடு என்ற வெடிமருந்து. கூர்டாய்ஸ் இப்படி அயொடினுடன் விளயாடிய போது அது பயங்க்ரமாய் அதி வேக சத்தத்துடன் வெடித்தது. அதிர்ஷ்ச வசமாய் குறைந்த காயங்களுடன் தப்பித்துவிட்டார் கூர்டாய்ஸ்.ஆனால் அவரின் சமகாலத்தவரான பியரி டூலாங்(Pierre Dulong) கொஞ்சம் அதிர்ஷடக்கட்டை என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த அயொடின், அம்மோனியா இணைப்பு விளையாட்டில் ஒரு கண்ணையும், கையின் ஒரு பகுதியையும் இழந்தவர். பயங்கரமான வெடிமருந்தின் நீண்ட பலியாளர்கள் பட்டியலின் முதல் போணி பியரி டூலாங்தான்..

   மருத்துவ குணங்கள் மலிந்த அயொடின்..!

   
       அயொடின் மோசமான நச்சு குணம் உடையதுதான். ஆனால் அதன் ஆல்கஹாலுடன் சேர்த்து டிங்க்சர் அயொடின் என்ற மஞ்சள்-பழுப்பு நிற திரவமான கிருமிநாசினி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இது பரவலாகப் பயன்படுத்தவும் படுகிறது.இன்றும் கூட, பெரும்பாலும் பொதுவான நீர் சுத்திகரிக்க அயொடின் அடிப்படையிலான மாத்திரைகளே பயன் படுகின்றன. அயொடின் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே, இது மிகவும் முன்னேறிய வேதி தொழில்நுட்பத்தில்பரவலாகப் பயன்படுகிறது.

தினமும், நமக்கு வேண்டிய அயொடின்: 

  • ஆண்களுக்கு ............. 150.. பெணகளுக்கு................. 120 மைக்ரோ கிராம்
  • தாய்மையுற்ற பெண்கள்:... 150..மைக்ரோ கிராம்
  • பாலூட்டும் பெண்ட்களுக்கு.. 170 மைக்ரோ கிராம்
  • குழந்தைகளுக்கு.............. 70-150....... மைக்ரோ கிராம்
  • சின்ன குழ்ந்தைகளுக்கு  50-60   மைக்ரோ கிராம்
அள்வுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.


  • அயொடின் அளவு அதிகரித்தாலும் கூட முன்கழுத்து கழலை நோய் வரும்.
  • அயொடின் பாதிப்பு உள்ளவர்கள் தினம் 300 மைக்ரோகிராம்அயொடின் உட்கொள்ள வேண்டும்.
  • கிராம் கடல்உணவில் உள்ள் அயொடின் 60 மைக்ரோ கிராம்
  • ஒரு தேக்கரண்டி அயொடின் கலந்த உப்பில் 150..மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது.
  • 100கிராம் காய்கறி/மாமிசம்/முட்டையில் உள்ள் அயொடின் 25 மைக்ரோ கிராம்
  • 100கிராம் பால்பொருள்/ரொட்டி/தானியத்தில் மைக்ரோ கிராம் அயொடின் உள்ளது
Table 1: Recommended Dietary Allowances (RDAs) for Iodine]
Age..........................Male.................Female...........Pregnancy........Lactation
Birth to 6 months......110 mcg*..........110 mcg*
7–12 months.............130 mcg*..........130 mcg*
1–3 years..................90 mcg..............90 mcg
4–8 years..................90 mcg..............90 mcg
9–13 years...............120 mcg.............120 mcg
14–18 years.............150 mcg.............150 mcg.............220 mcg............290 mcg
19+ years.................150 mcg.............150 mcg............220 mcg.............290 mcg

Table 2: Selected Food Sources of Iodine
 Food.............................Appr.mcg per serving............Percent DV*
Seaweed, whole or sheet, 1 g.......16 to 2,984 ...............11% to 1,989%
Cod, baked, 3 ounces..................99  .............................66%
Yogurt, plain, low-fat, 1 cup............75  ............................50%
Iodized salt, 1.5 g (approx. 1/4 teaspoon)..71...................47%
Milk, reduced fat, 1 cup..................56 .............................37%
Fish sticks, 3 ounces......................54 ..............................36%
Bread, white, enriched, 2 slices.........45 ...........................30%
Fruit cocktail in heavy syrup, canned, 1/2 cup...42............28%
Shrimp, 3 ounces.........................35 ................................23%
Ice cream, chocolate, 1/2 cup .........30 .............................20%
Macaroni, enriched, boiled, 1 cup......27............................18%
Egg, 1 large ..............................24  ..................................16%
Tuna, canned in oil, drained, 3 ounces...17  .......................11%
Corn, cream style, canned, 1/2 cup....14 ............................9%
Prunes, dried, 5 prunes...................13 ...............................9%
Cheese, cheddar, 1 ounce................12 ..............................8%
Raisin bran cereal, 1 cup..................11 ..............................7%
Lima beans, mature, boiled, 1/2 cup.....8 ............................5%
Apple juice, 1 cup..........................7  .................................5%
Green peas, frozen, boiled, 1/2 cup....3  ..............................2%
Banana, 1 medium........................3 .....................................2%

அயொடின் பாதிப்பால்...!

   

 உடலில் அயொடின் குறைபாடு இருந்தால், முன்கழுத்துக்கழலை (goiter)என்ற நோய் வரும், குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. உலக நலன் கருதும் நிபுணர்கள், அயொடின் போதாமை என்பது தடுக்கக்கூடியதுதான். ஆனால், அயொடின் போதாமையால், உலகம் முழுவதும் சுமார் 1,500,000,000 மக்கள் மூளை பாதிப்பு அடையும் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கின்றனர்.அதே போல உலகம் முழுவதும் 50,000,000 குழந்தைகள் அயொடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கருவுற்ற பெண்களுக்கு அயொடின் போதவில்லை என்றால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இருக்காது. கருச்சிதைவு ஏற்படும். மிகக் குறைவான அயொடின் பற்றாக்குறை கூட, குழந்தைகளின் அறிவுத்திறனைப் பாதிக்கும்; மூளை வளர்ச்சியையும், கற்றல் திறனையும் அழிக்கிறது..   



 

Dec 14, 2011

ராஜ நாகம்.


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது 100 %உண்மைதான்   நண்பா! . உங்களுக்குத் தெரியுமா, பாம்புகள் உலகின் காலில்லாத பல்லிகள். அவ்வளவே. ! சில பாம்புக்கள்   விடம் உள்ளவை. இவைகளுக்கு கண் இமையும், வெளிக்காதும் கூட  கிடையாது,வெளி வெப்ப நிலைக்குத் தகுந்தாற்  போல தன உடல் வெப்பத்தை வைத்திருப்பவை இவைகளுக்கு தாடையில் எலும்பு கிடையாது. எனவே எவ்வளவு பெரிய உணவானாலும் விழுங்க முடியும்.இன்னொரு முக்கியான விஷயம். நமக்கு ஜோடி ஜோடியாக உள்ள அனைத்து உறுப்புகளும் இவைகளுக்கு ஒத்தையாகவே உள்ளன. முதன்மையாக ஒரே  ஒரு நுரையிரல் மட்டுமே உண்டு.அன்டார்டிகாவிலும், ஐஸ்லாந்து, அயர்லாந்து மற்றும் நியுசிலாந்து தவிர, உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழ்கின்றன .    
    .   உலகில் எத்தனை வகை பாம்புகள் உள்ளன? பாம்பில் 15 குடும்பங்களும்  2 ,900  ௦௦இனங்களும் உள்ளன. இவற்றில் 10 செ.மீ உள்ள நூல் பாம்பிலிருந்து, 7 .9 மீ நீளமுள்ள அனகோண்டா வரை உண்டு. இதுவரை உலகில் வாழ்ந்த பாம்புகளில் மிகப் பெரியது.58 -60 மில்லியன்ஆண்டுகளுக்கு  முன்  வாழ்ந்த டைடானிக் போயா தான். இதன் நீளம்12-15 மீ ஒரு மீட்டர்.  விட்டம்1 மீ. , .எடை, 1385 கிலோ. 
    உலகிலுள்ள பாம்பு இனங்களில் ஒரே ஒரு பாம்பு மட்டும் பறவை போல கூடு கட்டும் .அதில் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும். அதுதான் ராஜ நாகம். இதன் நீளம் 5 .5 மீ.ராஜ நாகத்திலே  200 இனங்கள் உள்ளன. இவை மற்ற நாகப் பாம்புகளை விட புத்திசாலித்தனம் நிறைந்தவை. இவை இணை சேரும் சமயத்தில், இணையைக் கண்டு பிடிப்பதற்காகவே, ஒருவித வாசனையை காற்றில் கலக்க விடும். ஆண் பெண் இரு பாம்புகளுமே, புனுகு வாசனையை வெளிவிடும். கிராமத்தில் , நாகப் பாம்பு இருந்தால்,உளுந்து வாசனை அடிக்கும் என்று சொல்வார்கள். அது இதுதானோ.!
   இணை சேர்ந்த 2 மாதம் கழித்து, ராணி நாகம் முட்டை இடும்.பின் இரண்டு மாதம் சென்ற பின் அவை பொரிக்கும். முட்டையை ராணி நாகம் இலை, செத்தை,மரக்  குப்பைகள் போட்டு கூடு கட்டும், அடை காக்கும். தந்தை முட்டையையும் அம்மாவையும் காவல் காக்கும்.  இது20 ௦-40 முட்டைகள் இடும்ஆண் அடை காக்கும் பெண் பாம்பையும் முட்டையையும் சேர்த்து பாதுகாக்கும் . பெண் பாம்புதான் ஆண் பாம்புடன் சேர்ந்து  முட்டையை தரையில் அடை   காக்கும். அடைகாக்கும் காலம்  60-90 நாட்கள் .  முட்டையிலிருந்து  வெளிவரும்  குஞ்சுகள்   50 செ.மீ நீளத்தில் இருக்கும். முட்டையிலிருந்து குழந்தை ராஜநாகம் வெளி வந்ததும் ராணி விலகிப் போய் தன பணிகளை பார்க்க போய்விடும். குட்டிகள் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.அதனுடைய விடமும் கூட முதிர்ந்த பாம்பின் நஞ்சு போலவே வீரியம் மிக்கது
         நாகப்பாம்புக்கு நன்றாக கண் தெரியும் , இரவிலும் கூட. !ராஜநாகத்தின் கண் பார்வை மற்ற பாம்புகளைவிட கூர்மையானது.தன் எதிரில் உள்ள பொருளை 330 அடி தூரத்திலேயே நன்றாக கவனித்து விடும்  ராஜ நாகம் மற்ற பாம்புகளையே உணவாகக் கொள்ளும்.பாம்புகள் கிடைக்காவிட்டால் இவை, ஓணான், பறவைகள், அணில் போன்றவற்றையும் உண்ணும்.  பாம்புகள் மிக மெலிதான வெப்ப மாறு பாட்டைக்   கூட உணரும் தன்மை பெற்றவை. இதற்காகத்தான் அது அடிக்கடி நாக்கை வெளியில் நீட்டு கிறது.குட்டியூண்டு உறுப்பான ஜகோப்சன் உறுப்பு இதன் மேல் தாடையில் உள்ளது. அதன் மூலம் இது வெப்பத்தை உணருகிறது. மற்ற பாம்புகள் போலவே, இதுவும் பிளவுபட்ட  நாக்கின் மூலம் இரையின் வாசனை உணர்ந்து அது  இருக்கும் திசையையும் அறிகிறது. இந்த பிளவுபட்ட நாக்கு ஸ்டீரியோ போல செயல்படுகிறது.மேலும், இதன் உதவியால்தான் பாம்பு இரவிலும் தன் இரையைப் பிடிக்கிறது.ராஜ நாகம் மற்ற பாம்புகள் போல் இரையை அரைத்து உண்ணாது. அப்படியே முழுங்கிவிடும். 
       ராஜநாகம் மூர்க்க குணம் உள்ளது. நாகப்பாம்பின் நஞ்சுநேரடியாக  நரம்பு மண்டலத்தைத்தான் தாக்கும்.அனைத்து பாம்புகளின் நஞ்சும் புரதம் தான். ராஜ நாகம் கடித்ததும், அந்த கடி சுமார் 1 .5 செ.மீ ஆழமான காயத்தை நம் உடம்பில் உண்டுபண்ணும்.விடம் நேரடியாக மைய நரம்பு மண்டலத்தை தாக்கும். உடனே கடுமையான வலி ஏற்படும். அதைத் தொடர்ந்து கண் பார்வை குறைந்து, தலை சுற்றி, உடனடியாக பக்கவாதம் உண்டாகும்.இதய இரத்த குழாய்கள் சிதைந்து, கோமா நிலை ஏற்படும். பிறகு மூச்சு திணறலால் இறப்பு நிகழும்.  ராஜ நாகத்தின்  நஞ்சு மிகவும் வீரியமுள்ளது அல்ல. ஆனால் ஒரே கொத்துதான் அதிலேயே ஒரு யானை கூட வீழ்ந்து , இறந்தும் போகும். அந்த  அளவுக்கானஅதிக நஞ்சை ஒரு போடு
போடும்போதே, செலுத்தி விடும் .ஒரு கடியில் சுமார் 7 மி.லி விடத்தை செலுத்தும்.ஒரு முறை கொத்தும்போது 20 பேரை கொல்லும் அளவுக்கு   அதில்  நஞ்சு உள்ளதாம்.  அதில் இருக்கிறது.பொதுவாக ராஜ நாகம்   கடித்தால் ஒருவர் அதிகபட்சம்  15 நிமிடத்துக்குள் இறந்து விடுவார்பெரும்பாலும் ராஜ நாகம் கடித்தால் 80 % இறப்புதான். உடனடியாக பாம்பின் எதிர் நஞ்சு செலுத்தினால் , சிகிச்சைக்குத் தகுந்தாற்போல் காப்பாற்றப்பட  வாய்ப்பு உண்டு..இதுவரை ராஜ நாகம் கடித்து ஒருவர் தான் பிழைத்துள்ளார். அவரும் இதனை பற்றி ஆராய்ச்சி செய்யும்போது, கடித்ததால், உடனே பாம்பின் எதிர் நஞ்சு ஒரு நிமிடத்திற்குள் செலுத்தப் பட்டதால் , காப்பாற்றப் பட்டார். 
           பொதுவாக நாகப் பாம்பு மற்றவர்கள் எதிரில் வரவே வெட்கப்படும். மனிதர்களைக் கண்டால் ஓடிப்போய் புதர், மரம், மறைவான இடத்திற்குப் போய் ஒளிந்து கொல்லும். ஆனால் ராஜநாகம்   மனிதர்களை   எதிர்த்து நின்று தரையி லிருந்து   சுமார் 6 அடி உயரம்       எழும்பி படமெடுக்கும். பாம்புகள் புத்திசாலித்தனம் நிறைந்தவை. ஆபத்தான பகுதியை தவிர்த்து விடும்.,ராஜநாகம் இந்தியா , மலேசியா ,தென்சீனா, வியட் நாம் போன்ற தெற்கு ஆசியப் பகுதிகளிலும்வடக்கு ஆப்பிரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும்  காணப் படுகிறது. 

ராஜ நாகத்தின் சீறும் சத்தம், நாய் உறுமும் சத்தம் போலவே கேட்கும்.பாம்பின் உடல் வளர்ந்தவுடன்ராஜநாகம் வருடத்தில் 4 -6 முறை தன் தோலை உறிக்கும். ஆனால் குட்டி பாம்புகள் மாதம் ஒரு முறை தோல் உறிக்கும்.தோல் உறிக்கும் காலகட்டத்தில், பாம்பு தான் பழைய தோலை உறிப்பதற்காக   ஏராளமாய் தண்ணீர் குடிக்கும்.ராஜநாகம் மற்ற பாம்புகளைவிட ரொம்பவும் சாதுரியமனவை. ராஜநாகம் பொதுவாக, தான் சுற்றிவளைக்கப் பட்டாலும் கூட , தப்பித்து ஓடவே முயற்சி பண்ணும்.  , தப்பிக்க வழியில்லை என்றால்,அல்லது முட்டைகள் தாக்குதலுக்கு உட்பட்டால் மட்டுமே தாக்கும்/கொத்தும். இது ராஜநாகத்துக்கு மட்டுமல்ல எல்லா பாம்புகளுக்கும் பொருந்தும். எந்த பாம்பும் பொதுவாக மனிதர்களை/ விலங்குகளை தேடித் போய் தாக்குவதில்லை. தான் தாக்கப்படும்./ பாதிக்கக்கபடும் நிலை ஏற்பட்டாலேயே, பிறர் மேல் தாக்குதல் நிகழ்த்துகின்றன. பாம்பின் விடம் என்பது தன் இரையை, உணர்விழக்கச் செய்வதற்காக, இயற்கை அளித்த சொத்து.    ராஜ நாகத்தின் இயற்கை எதிரி கீரிதான். இதற்கு பாம்பின், நரம்புநஞ்சை முறிக்கும் தன்மை இயற்கையாகவே அமைந்துள்ளது.  பொதுவாக ராஜ நாகம்  காடுகளில்தான்   வாழுகின்றன  . நீர்நிலைகளில்  நிரந்தர   வெப்பம்     உள்ள    இடத்தில்  வாழும் . இவைகளின்  வாழிடம்  பாதிப்பு  உள்ளாவதாலேயே   , இவை ஊருக்குள்  வருகின்றன .  .  
 பேரா.மோகனா