முதல் பக்கம்

Dec 6, 2011

கூடங்குளம் அணுமின்நிலையம்- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பார்வை:

கூடங்குளம் அணுமின் உற்பத்தி தொடங்கவுள்ள நிலையில் அணுசக்தி பற்றியும், அணு உலைகள் பற்றியும் பலவிதப்பட்ட கருத்துகள் வெளிடப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நீண்டகாலம் அறிவியல் பரப்புதல் மற்றும் அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைச் செய்துவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கீழ்க்காணும் விஷயங்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.
  • புகுசிமா அணுமின் விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்கள் குறித்த அச்சம் அதிகரித்துள்ளதால், புகுசிமாவை விட எந்த விதத்தில் மேம்பட்டது, பாதுகாப்பானது, இயற்கைப்பேரிடர்களைத் தாங்கவல்லது என்பதை மக்களுக்குப் புரியும்படியும் நம்பும்படியும் மத்திய அரசு விளக்கிக்கூறவேண்டும். அதுவரை புதிய அணு உலைகளை நிறுவக்கூடாது.
  • அணுமின்சக்தி தேவை என்றும், தேவை இல்லை என்றும் இருவிதமான கருத்துகள் உள்ளன. அணுசக்தியை ஆக்கத்திற்கு மனிதகுலம் பயன்படுத்த முடியும் என்பதற்கு அணு மின்சாரமே சிறந்த சான்று. அணுமின் தொழில்நுட்பம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உயர்ந்த வடிவம். பருவநிலை மாற்றம் குறித்த அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. அணுசக்தி சூழல் மாசுபாடு அற்ற தூய எரிசக்தி என்பது நிரூபனமான உண்மை. எனவே அணுசக்தி தேவையும் நன்மையும் குறைத்து மதிப்பிட முடியாது.
  • சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க நிலையான எரிசக்தி வளங்கள் போன்றவைதான் மாற்று எரிசக்தி வளங்களாக எதிர்காலத்தில் கூடுதலாக இருக்க வேண்டும். எனவே, இத்தகைய எரிசக்தி வளங்களை மேம்படுத்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான முதலீடுகள் பொதுத்துறையின் மூலம் அதிக அளவில் மேற்கொள்ளப் படவேண்டும்.
  • இந்திய நாட்டின் எரிசக்தி தற்சார்பை முன்வைத்து உருவாக்கப்பட்ட மூன்றடுக்கு மின்திட்டத்தை மட்டும் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு மாறாக, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்சார்புக்கு எதிரான அணுசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது.
  • ‘ஜெய்தாபூர் அணு உலை என்பது முற்றிலும் புதியதும் பரிசோதித்துப் பார்க்கப்படாத தொழில்நுட்பம். எனவே அதை நடைமுறைப்படுத்தக்கூடாது.
  • ’இந்திய அணு உலைகள், அவற்றின் பாதுகாதுப்பு குறித்து வல்லுநர்களைக் கொண்டு அறிவியல் பூர்வமாகத் தணிக்கை செய்து தகவல்களை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
  • “அணுமின் திட்டங்களை செயல்படுத்தும் போது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பெருக்குவதிலும் முன்னுரிமை அளித்து அவற்றை அமல்படுத்துவதில் உரிய கவனம் செலுத்தப்படவேண்டும்.
அறிவியல் வணக்கங்களுடன்..
தே.சுந்தர்
மாவட்டச்செயலாளர்

No comments:

Post a Comment