முதல் பக்கம்

Sep 8, 2013

21ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அறிவிப்பு-2013


 வணக்கம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை (DST, Govt. of India), தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு (NCSTC-Network, New Delhi) ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) கடந்த 20 ஆண்டுகளாக இளம் விஞ்ஞானியர் விருதிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாநில அளவில் ஒருங்கிணைத்து வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ அமைப்பு. கல்லாமையைப் போக்க தமிழகம் முழுவதும் அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்தது முதலாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள், புத்தகக் கண்காட்சிகள், போஸ்டர் கண்காட்சிகள் என ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

மாநாட்டின் நோக்கம்:
குழந்தைகள் பள்ளியில் படிக்கின்ற அறிவியலை வாழ்வியல் நடைமுறையோடு பொருத்திப் பார்த்து அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள உதவுகின்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இந்தியா முழுவதுமாக சுமார் 9 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று தங்களது ஆய்வுகளைச் சமர்ப்பித்து வருகின்றனர். தேசிய அளவிலான மாநாட்டில் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்கின்ற குழந்தைகளுக்கு நமது நாட்டின் குடியரசுத்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு  இளம் விஞ்ஞானி விருது வழங்கிச் சிறப்புச்செய்வது பொதுவான நடைமுறையாகும்.

மாநாட்டின் மையக்கருத்து:
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சார்பில் உலகின் அன்றைய சூழல் மற்றும் தேவையை ஒட்டி ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாட்டிற்கான மையக்கருத்து அறிவிக்கப்படுகிறது. 1993ஆம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்ட தலைப்புக்கள் விபரம் பின்வருமாறு:

ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் & பாதுகாத்தல்:
ந்த ஆண்டு 21ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான  பொதுத்தலைப்பாக ஆற்றல்: தேடல், கையகப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 1. ஆற்றல் வளங்கள் 2. ஆற்றல் அமைப்புகள், 3. ஆற்றலும் சமூகமும் 4. ஆற்றலும் சுற்றுச்சூழலும் 5. ஆற்றல் மேலாண்மை மற்றும் சேமிப்பு 6. ஆற்றல் திட்டமிடலும் மாதிரிகளும் ஆகியவை துணைத்தலைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தலைப்புக்களின் கீழ் குழந்தைகள் ஆய்வு மேற்கொண்டு மாநாட்டின்போது சமப்பிக்கவேண்டும்.

பங்கேற்க தகுதியுடையவர்கள்:
இந்தியா முழுவதும் உள்ள 10 முதல் 17 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் பங்கேற்கலாம். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், இரவுப்பள்ளிகள், துளிர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் என எங்கிருந்தும் குழந்தைகள் பங்கேற்கலாம். பள்ளிசாராக்குழந்தைகளும் இடைநின்ற குழந்தைகளும் கூட பங்கேற்கலாம்.  பங்கேற்பதற்கான ஒரே தகுதி வயது மட்டுமே.

மாநாட்டிற்கான சில விதிமுறைகள்:
மாநாட்டில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள் தங்கள் ஆய்வை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். (பதிவு செய்யக் கடைசி நாள்: செப்டம்பர்,15)
3 முதல் 5 குழந்தைகள் இணைந்து குழுவாக மட்டுமே ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
10 முதல் 13 வயது வரை இளநிலையாகவும் 14 முதல் 17 வயது வரை முதுநிலையாகவும் கருதப்படும்.
இளநிலை மாணவர்கள் 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் முதுநிலை மாணவர்கள் 3500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை தயாரித்தல் வேண்டும்.
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கலாம்.
ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.
தேர்ந்தெடுத்த தலைப்பு குறித்து மூன்று மாதகாலம் ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.
ஆய்வுகள் எப்போதும் உள்ளூர் பிரச்சினைகள், தகவல்கள், செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளவேண்டும்.
ஆய்வாளர் அடுத்த மாவட்ட தகவல்களைக்கொண்டு ஆய்வு செய்தல் கூடாது.
இணையதளத்தில் இருந்து தகவல்களை பதிவிறக்கம் செய்துகொண்டு வரக்கூடாது.
தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்கவேண்டும்.
ஆய்விற்கான செலவினம் ரூ.250க்குள் இருக்கவேண்டும்.

வழிகாட்டி பயிற்சி முகாம்கள்:
 இம்மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள், அறிவியல் ஆர்வலர்கள், பெற்றோர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள் வழிகாட்டி ஆசிரியர்களாகச் செயல்படலாம். அவர்களுக்காக மாவட்ட அளவிலான பயிற்சி முகாமினை செப்டம்பர்,6 அன்று பெரியகுளத்தில் நடத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் / ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சி முகாமில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் கலந்துகொண்டு ஆய்வு வழிமுறைகளை விளக்குகின்றனர். மேலும் ஆய்விற்கான விளக்கக் கையேடுகளும் பதிவுப்படிவங்களும் வழங்கப்படும்.

மாநாட்டிற்கான முக்கிய தேதிகள்:
மாவட்ட அளவிலான மாநாடு நவம்பர் முதல்வாரம் தேனியிலும் மாநில அளவிலான மாநாடு நவம்பர் 29,30 மற்றும் டிசம்பர் 1 தேதிகளில் திருப்பூரிலும் நடைபெறும். தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27-31 தேதிகளில் வாரணாசியில் நடைபெறுகிறது.

மாநாட்டில் தேனி மாவட்டத்தின் சாதனைகள்:
நமது தேனி மாவட்டத்தில் கடந்து 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆய்வுகள் குழந்தைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டில் ஆர்.நிவேதா என்ற மாணவி நாகலாந்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2009ஆம் ஆண்டில் ஷெரின் பர்கானா என்ற மாணவி குஜராத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் 2010ஆம் ஆண்டில் செல்லத்துரை என்ற மாணவன் சென்னையில் நடைபெற்ற மாநாட்டிலும் 2011ஆம் ஆண்டில் பொ.சுரேந்தர் என்ற மாணவன் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாநாட்டிலும் 2012 ஆம் ஆண்டில் பெரியகுளம் மாணவி ஜெனிபர் பாத்திமா வாரணாசி இந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் கலந்துகொண்டு இளம் விஞ்ஞானியர் விருது பெற்றுள்ளனர். தேனி மாவட்டம் சார்பில் மாணவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளாக விருதுபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரங்களுக்கு:
               மாநாடு தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு திரு.வி.வெங்கட்ராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எண்.8, குட்டியாபிள்ளைத்தெரு, கம்பம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி: 9488683929 / 9942112203 / 9789529655

No comments:

Post a Comment