முதல் பக்கம்

Sep 8, 2013

விநாயகர் சதுர்த்தியும் சுற்றுச்சூழலும்



விநாயகர் சதுர்த்தி, இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகை. குறிப்பாக இந்தியாவின் மகாராட்டிரம், தமிழ்நாடு, கோவா, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் அதிகமாகக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்தியா மட்டுமல்லாமல், நேபாளம், கனடா, மொரீசியஸ், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், பிஜி தீவுகள், டிரினிடாட் மற்றும் டொபகோ போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

சத்ரபதி சிவாஜிதான் இந்த விழாவை ஒரு சமூக விழாவாக உருவாக்கினார் என ஒரு சாராரும், சுதந்திர போராட்டத்திற்கென மக்களை ஒருங்கிணைப்பதற்காக பாலகங்காதர திலகர் தான் சமூகத் திருவிழாவாக உருவாக்கினார் (பொதுமக்கள் கூடுவதற்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்திருந்த காலம்) என இன்னொரு சாராரும், பிராமணர்களையும், பிராமணர் அல்லாதவர்களையும் இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட சமூகத் திருவிழா என பிரிதொரு சாராரும் கூறி வருகிறார்கள். விநாகர் சதுர்த்தியை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடிவிட்டுப் போகட்டும். அது அவரவர் விருப்பம். ஆனால் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் ஒரு திருவிழாவாக இருக்கக்கூடாது என்பதே அறிவியல் ஆர்வலர்களின் விருப்பம்.

விநாயகர் சிலைகள் எவற்றால் உருவாக்கப்படுகிறது. விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகள் நம் சுற்றுச் சூழலில் ஏற்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

முன்பெல்லாம் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டது. கண்களுக்கு மட்டும் குன்றிமணி விதைகள் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் களிமண் தட்டுப்பாட்டின் காரணமாகவும், சிலை மண் விலை அதிகமானதாலும் வெவ்வேறு கச்சாப் பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டன. இப்பொதெல்லாம் விநாயகர் பொம்மைகள் சாக் பொடிகளாலும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற வேதிப்பொருட்களாலும் உருவாக்கப்படுகிறது. மூன்று நாட்கள் ( வட நாடுகளில் பத்து நாட்கள் கொண்ட விழாவாக கொண்டாடப்படுகிறது) கழித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள நீர் நிலைகளான ஆற்றிலோ, கண்மாயிலோ, குளங்களிலோ, ஓடைகளிலோ அல்லது கடலிலோ கரைக்கப்படும்.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஃ: ஜிப்சத்திலிருந்து பெறப்பட்ட கால்சியம் சல்ஃபேட் ஹெமி ஹைட்ரேட்டே பிளாஸ்டர் ஆஃப் பாரிஃ ஆகும். தாது ஜிப்சத்தை வெப்பப்படுத்துவதன் மூலம் அதிலுள்ள ஈரத்தன்மையை நீக்கி உருவாக்கப்படுவதுதான் இந்த பிளாஃடர் ஆஃப் பாரிஸ். பாரிஸூக்கு அருகில் முதன் முதலாக எடுக்கப்பட்டு பயன்படுத்தி வந்ததால் இந்த பெயர் வந்திருக்கலாம். இவை தோலில் பட்டால் கொப்புளமாகி விடும். இவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சுலபத்தில் கரைவதில்லை. சில மாதங்களிலிருந்து சில வருடங்கள் கூட ஆகலாம். அது மட்டுமல்ல இவை நீர்நிலைகளின் அமிலத்தன்மையை கூட்டிவிடும். அதோடு நீரில் கரைந்துள்ள துகள்களின் அளவையும் 100 சதவீதமாக மாற்றிவிடும் அபாயமுள்ளது.
சாக் பவுடர்: சாக் பொடி என்பது கால்சியம் கார்பனேட் என்ற வேதிமப் பொருளாகும். இவற்றால் செய்யப்படும் விநாயகர் சிலைகளைத் தண்ணீரில் கரைக்கும்போது, கார்பானிக் அமிலமாகவும், கால்சியிம் ஹைட்ராக்ஸைடுகளாகவும் உருமாறிவிடும். அதனால் நீரின் அமிலத் தன்மை அதிகரிக்கும். சார்ந்த உயிரினங்களின் பல்லுயிர்த்தன்மை பாதிக்கப்படும்.

விநாயகர் சிலைகளுக்கு பூசப்படும் வண்ணங்கள்:

வண்ணங்களைக் கொண்டு அழகு படுத்தும் போது, அவற்றிலுள்ள மெர்குரியும், காட்மியமும் நீரில் கலக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு தெர்மாமீட்டரில் (வெப்பமானி) உள்ள மெர்குரி ஒரு பெரிய ஏரியையே பாழ்படுத்திவிடும். மெர்குரி மாசுவினால் ஜப்பானில் "மினமேட்டா" என்ற நோயினால் பாதிக்கப்பட்டு ஏராளமான மீன்கள் இறந்து போயின. பல்லுயிர் வளம் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. அது மட்டுமல்லாமல், உயிர்ப்பெருக்கத்தின் வாயிலாக அந்த மீன்களை நாம் உண்ணும்போது நமக்கும் மெர்குரிக் கசடுகள் நம் உடலிலும் தங்கி உபாதைகளை ஏற்படுத்தும்.

பொதுவாக நம் உடலில் காட்மியத்தின் அளவு அதிகரிக்கும்போது, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, சில சமயம் எலும்பு முறிவு, மலட்டுத்தன்மை, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பலமிழந்த செயல்பாடு, மரபணுச்சேதம் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

அதேபோல் மெர்குறி நமது நரம்பு மண்டலத்தையும், மூளையையும் பதம் பார்க்கும். தோல்புண், தலைவலி மற்றும் மரபணுச் சேதம் ஆகிய பக்க விளைவுகளையும், ஆண்களுக்கு விந்தணுக் குறைவும், பெண்களுக்கு கருச்சிதைவும் ஏற்பட வாய்ப்புண்டு. பத்து நாட்களென்ன வருடம் முழுவதும் கூட கொண்டாடுங்கள். ஆனால் சூழலை மாசுபடுதுதவது என்பது நம்மை மட்டுமல்ல நம் சந்ததியினரையும் கூட பாதிக்கும். ஏற்கனவே நம் நீர் நிலைகள் பல்வேறு மாசுக்களால் பாழ்பட்டுக்கொண்டே வருகின்றன. மழை அளவும் குறைந்து விட்டது. இருக்கும் நீர் நிலைகளையும் இதுபோல் மாசுபடுத்தினால் நம் ஆரோக்கியம் என்ன ஆகும்? சற்றே சிந்திப்பீர்!

கடலில் கரைக்கப்படும் சிலைகளும், கடலின் அமிலத் தன்மையை அதிகரித்து விடுகின்றன. ஆதலால் கடல் சார்ந்த பல்லுயில் வளம் குறையும். ஏற்கனவே புவி வெப்பமடைதலால் கடலின் அமிலத்தன்மை கூடியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கடலின் அமிலத்தன்மையை மேலும் கூட்டிவிடும். ஆகையால் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதைத் தவிர்ப்போம்! சுற்றுச் சூழல் காப்போம்!

எஸ்.தினகரன்- மதுரை
thanks:VINGANASIRAGU-SEP.2013

No comments:

Post a Comment