உலகம் பிறந்தது எனக்காக.?
இந்த பூமி, சூரிய குடும்பத்தின் மூன்றாவது கோள். பாறைக்கோள்களுள் மிகவும் பெரியது. உயிரினங்கள் வாழும் இடமாகவும், இதன் 71 % பரப்புக்கு மேல் கடலின் உப்பு நீர் இருப்பதாலும் இதனை நீலக்கோள் என்று அழைக்கின்றனர். பூமியின் மீதிப்பகுதியில் கண்டங்களும், தீவுகளும், பெரிய ஏரிகளும் உள்ளன. இந்த உலகம் உருவாகி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனுக்கும் இதே வயதுதான். இந்த கோளில் மட்டும்தான் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. இங்கே ஆக்சிஜன் சுவாசிக்காத உயிரினங்களும் உண்டு. அதே போல கொதிக்கும் நீரிலும், கரிக்கும் உப்பிலும், உறையும் பனியிலும் கூட வாழும் உயிரினங்கள் உண்டு. நாம், மனித இனம் வாழ்வதற்காகத்தான் இந்த உலகம் உருவானதா..! அப்படி எல்லாம் இல்லை. நாம் இந்த பூமியில் வழிப்போக்கர்கள்தான்.அனாலும் கூட, நாம்தான் இந்த புவியின் இயற்கையில் சேட்டை பண்ணி. பூமிக்கு கெடுதல் செய்து கொண்டிருக்கிறோம்.
புவியின் வெள்ளைத் தொப்பி.!
பூமியின் இரு துருவங்களும் ஒரு பனிக் குல்லாயை மாட்டிக் கொண்டு திரிகிறது.ஆனால் இதன் உள்ளே, மையப்பகுதி இரும்பு நிக்கல் கலந்த குழம்பினால் கொதித்துக் கொண்டு இருக்கிறது .பூமியின் வட துருவம் ஆர்க்டிக் என்றும், தென் துருவம் அண்டார்டிக் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஏராளமான தாது வளங்களும், அதன் விளைவாய் உருவான உயிரினங்களும், இன்று மனித சமுதாயத்துக்கு பெரிது உதவுகின்றன.
முதல் உயிரி& பிராண வாயு பரிணாமம்.!
பூமியின் ஆற்றல் மிகுந்த வேதியல் பரிணாமத்தால், சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் தானாகவே இரட்டிப்பான ஒரு மூலக்கூறின் மூலம் உலகின் போது மூதாதையரான ஓர் உயிரி உருவானது. அதன் பின், உயிரினங்களின் துவக்க கால பரிணாமம் முதல் ஒளிச் சேர்க்கை உயிரி வந்த பின்னரே துவங்கியது. எனவே ஒளிச் சேர்க்கையின் வயது 350 கோடி ஆண்டுகள். அதற்கு முன் வாழ்ந்த உயிரிகள் எல்லாம் ஹைடிரஜன்/ஹைடிரன் சல்பைடை பயன்படுத்தி உயிர் வாழ்ந்தன.சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன் வந்த சயனோபாக்டீரியா (Cyanobacteria)என்ற நீலப்பச்சை பாசி தான் , இந்த உலகை ஆக்சிஜன் நிறைந்த உலகாக, ஆக்சிஜன் உள்ள வளிமண்டலமாக, என உலகின் முகவமைப்பையே மாற்றிய ஜாம்பவான். ஆக்சிஜன் நிறைந்த உலகை உருவாக்கிய பெருமை இந்த நீலப் பச்சை பாசிக்கு உண்டு. இதற்கு அப்புறம் உயிரின பரிணாமம் சக்கைப் போடு போட்டது. அது போல, 350 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூமியின் காந்தப் புலன்/பரப்பு உருவாயிற்று. அதன் ஈர்ர்ப்பு விசையால்தான் வளிமண்டலம் ஓடிப்போகாமல் காப்பாற்றப் பட்டுள்ளது.
அழிந்து..அழிந்து.மீண்டு வரும் பூமி.!
உலகம் உருவானதிலிருந்து ஏராளமான பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. அதில் மிகப் பெரியவை என்று 5 ஒட்டு மொத்த உயிரின அழிவுகள் உண்டாகி உள்ளன. இதுவரை உருவான உயிரினங்களில் சுமார் 98 % இந்த பேரழிவுகளால் அழிந்துவிட்டன. அதுவும் பேர்மியன் காலத்தில்தான், பெரும் சாவு (Great Dying) நிறைந்த பேரழிவு என்று அழைக்கப்படுகிறது. இந்த மகா அழிவு சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. அதில் 96 % கடல் வாழ் உயிரிகளும் மற்றும் 70 % நில ஜீவன்களும் ஒட்டு மொத்தமாய் இந்த உலகை விட்டு சென்றுவிட்டன.பூச்சிகளையும் இந்த ஆழிப்பேரலை /அழிவு விட்டு வைக்கவில்லை. அழிந்து போனவைகளில் முக்கியமானவை, பாலூட்டிகள் போலிருந்த ஊர்வன. இந்த அழிவுக்குப் பின் சுமார் 30 கோடி ஆண்டுகளுக்குப் பின்தான் முதுகெலும்பிகள் தங்களின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தன.
பனிக்காலங்கள்..!
பனி ஊழிக்காலமும், வெப்பம் மிகுந்த காலமும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. இதனைக் கவனித்தால், இந்த பனியூழிக்காலம் சுமார் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் வந்தது. பனிக்காலம் 30 ,00,000 ஆண்டுகளுக்கு முன் இது மிக அதிகமாக பிளிச்ட்டோசீன் (Pleistocene) காலத்தில் காணப்பட்டது. அதிக அட்சரேகை உள்ள இடங்களில் பனிப்பாறை நகர்வுகள் அதிகம், அடிக்கடி நடந்தன. இது சுமார் 40 - 100 ,000 ஆண்டுகள் தொடர்ந்தன. எனவே கடந்த கண்டங்களின் பனிக்காலம் என்பது சுமார் 10 ,000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுதான்.
இன்றைய உயிரிகள்...!
இதை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த பின் இன்று உலகில், லைக்கன்ஸ், காளான்கள், பாக்டீரியா என அனைத்து தாவர, விலங்கினங்களை உள்ளடக்கி சுமார் 1 .13 கோடி உயிரின வகைகள் இந்த புவியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பூச்சிகள் மட்டுமே சுமார் 50,000,000 இனங்கள் உள்ளன. ம். அம்மாடியோவ்! முதுகெலும்பில்லாதவை : 6,755,830 இனங்கள். முதுகெலும்பிகள்:80,500 வகைகள்,தாவரங்கள்: 3,52,000 இனங்கள்.மொத்த தாவரங்கள்:390,700
துருவங்கள்...!
பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் என்று அழைக்கப்படுகிறது.ஆர்க்டிக் எனபது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். வடதுருவ கரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப் பட்டது . அந்த இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது. அதற்கு மேல் நீங்கள் எங்கும் போகமுடியாது. இந்த ஆர்க்டிக் பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல், கனடா நாட்டின் சில பகுதிகள், ரஷ்யா கிரீன்லாந்து, வட அமெரிக்கா(அலாஸ்கா ), நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஏராளமான பனி மூடிய பெருங்கடல்கள் காணப்படுகின்றன. ஆனால் அங்கே மரம் என்ற ஒன்று இல்லாத நிரந்தர உறைபனிப் பகுதியாகவே உள்ளது.தரைக்கு கீழும் கூட பனி வடக்கில் 66.33 அட்ச ரேகைப் பகுதிதான் ஆர்க்டிக் வட்டம் எனப்படுகிறது. இங்கு ஓர் அதிசயமும் காணலாம். நடு இரவு..பேய்கள் உலாவும் எனலாமா? இரவே வராவிட்டால் எப்படி பேய்கள் வரமுடியும்? நடு நிசி நேரத்திளும் சூரியன் பளபளவென்று ஒளி வீசி அந்தப் பகுதியையே கொளுத்தி, பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பார்.இது ஜூலை மாதம் நடக்கும். ஆனாலும் கூட அப்போது அங்கு வெப்பமே அதிகபட்சம் 10 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும்.( நம்ம ஊர் குளிர் காலமே 20 டிகிரி இருக்கும்). ஆர்க்டிக் வட்டப் பகுதிக்குள் குளிர் காலத்தில் 24 மணி நேரமும் இரவாகவும் / அடுத்து கோடையில் 24 மணி நேரமும் சூரியன் உள்ள/மறையாத பகலும் காணப்படும்.
நாள் முழுவதும் சூரியன் .!
வட, தென் துருவ வட்டத்தைச் சுற்றி சுமார் 90 கி.மீ வரையிலும் கோடையில் நடு இரவிலும் சூரியன் காணப்படும்.இங்கே சூரியன் ஒரு வட்டத் தட்டு போலத் தெரியும்.
பின்லாந்தின் கால்பகுதி வட ஆர்க்டிக் வட்டத்தில் உள்ளது. எனவே, அதன் வடக்கு முனையில், கோடையில் 60 நாட்கள் சூரியன் மறையவே மாட்டார். நார்வேயின் சவால்பார்ட் (Svalbard) என்ற இடத்தில், ஏப்ரல் 13 முதல் ஆகஸ்ட் 23 வரை (5 மாதங்கள், 10 naatkal) பகலவன் மறையாமலே காட்சி அளிப்பார். அதற்கும் மேல் உள்ள பகுதிகளில் வருடத்தில் பாதி மாதங்கள் சூரியன் நாள் முழுவதும் காட்சி கொடுக்கும். அப்போது அப்பகுதியில் இரவே இருக்காது. நம் ஊரில் அப்படி ஒரு நிலைமையை/ சூரியன் மறையவே மறையாத நாளைக் கற்பனை செய்து பாருங்களேன். ஆனால் குளிர் காலத்தில் எதிர்மறை நிலைதான். சூரியன் நாள் முழுவதும் தொடுவானுக்கு 6 டிகிரி கீழேதான் காணப்படும். எனவே அப்போது வெளிச்சம் இருக்கும். படிக்க கூட செய்யலாம்.
தூக்கப் பிரச்சினை .!
துருவப்பகுதிகளில், 60 டிகிரி அட்ச ரேகைகளுக்கு மேல் போய்விட்டால், அதாவது ஆர்க்டிக் கு தெற்கே/அண்டார்க்டிக்காவுக்கு வடக்கே, அந்திமாலை ஒளியைத் தரும். வெளிச்சம் இருக்கும். மின் விளக்கு இன்றி படிக்கலாம். இந்த தினங்களை செயின்ட் பீட்ச்பர்க் மற்றும் ரஷ்யாவில் வெள்ளி இரவு தினங்கள் என ஜூன் 11 - ஜூலை 2 வரை, இந்த நாட்களில் எல்லாம், கலாச்சார விழாக்கள் கொண்டாடுவார்கள்.ஆனால் இங்கு புதிதாக வருபவர்களுக்கு, இரவில் சூரியன் தெரிவதால் உறங்க செல்ல கொஞ்சம் பிரச்சினை ஆக இருக்கும்.
மரமற்ற ஆர்க்டிக்.!
ஆர்க்டிக் பகுதிகளில் பெரிய மரம் செடி கொடிகள் கிடையாது. ஏதோ கொஞ்சம் குற்றுச் செடிகள், பூண்டுகள், சின்ன சின்ன மூலிகைகள், லைக்கன்ஸ் மற்றும் பாசிகள் நிறைய உண்டு. இவைகள் இணைந்ததுதான் துந்திரா பிரதேசம். வடக்கே செல்லச் செல்ல, தாவரங்களைப் பராமரிக்க வேண்டிய வெப்பம் மிகக் குறைவு. அதன் அளவு, அடர்வு, உற்பத்தி, வகைகள் என அனைத்தையும் குளிர் குறைத்துவிடுகிறது. இங்கு வளரும் குற்றுச் செடிகளும் கூட அதிக பட்சம் 2 மீ உயரம் வரைதான் இருக்கும். லைக்கன்ஸ் மற்றும் பாசிகள்தான் அடர்வாக உருவாகின்றன. அதன் பெயர் செட்ஜ்ஜஸ்(sedges).ரொம்ப குளிரான பகுதிகளில், தரை மொட்டையாய் இருக்கும் சில புற்கள் இருக்கலாம். ஆர்க்டிக் பாப்பி என்ற மஞ்சள் நிற பூ பூக்கும் செடி உண்டு.
பனிப் பிரதேசத்தின் சொந்தக்காரர்கள்!
ஆர்க்டிக் பரப்பில் ஏராளமான கனிம வளங்கள் உண்டு. ஆர்க்டிக் பகுதியில் எஸ்கிமோக்கள் வசிக்கின்றனர். அவர்களின் வீட்டுக்கு இக்ளூ என்று பெயர்.
பம்பரமாய் இயங்கும் துந்திரவாசிகள்..!
துந்திரா பகுதியில் தாவர உண்ணிகளும் உண்டு. துருவ முயல்,லெம்மிங், புனுகு எருது, கலைமான்கள் உண்டு. துருவ முயல் குளிர் அதிகமாகும் காலங்களில் தரைக்கு அடியில் குழிபறித்து உறங்கும். காது மட்டும் கொஞ்சம் நீளமாக இருக்கும். புனுகு எருதின் உடலிலிருந்து புனுகு வாசனை வரும். இந்த வாசனை பெண்ணைக் கவருவதற்காகவே . ஆனால் இந்த விலங்குகளை எல்லாம், ஆர்க்டிக் நரியும், ஓநாயும் வேட்டையாடி உண்ணும். துருவக்கரடியும் கூட மற்ற விலங்குகளை அடித்து உண்ணும்.ஆனாளும் கூட பொதுவாக துருவக்கரடிக்கு, கடல் வாழ் விலங்கினங்களின் மேல்தான் கொள்ளைப் பிரியம். பனிப்பகுதிக்குள் நுழைந்தே வேட்டையாடும்.
வயிறு காய்ந்தால் குதிரை வைக்கோல் தின்னுமா? தின்னுமே.!
ஆர்க்டிக் நரி வெள்ளையாகவே இருக்கும். பொதுவாக ஆர்க்டிக் பகுதியில் வாழும் அனைத்து விலங்குகளும் வெள்ளையாகத்தான் இருக்கின்றன. துருவ நரிக்கு அடர்த்தியான தோலும், அதன் கீழே கொழுப்பும், தோலின் மேல் அடர்வான நீண்ட முடியும், குளிர் மற்றும் பனிக்குப் பாதுகாப்பாக உண்டு. , இது பொதுவாக லெம்மிங்(lemming),வோல் என்னும் சிறிய கொரிப்பான், முட்டைகள், போன்றவற்றை சாப்பிடும். சமயத்தில் தாவரங்களையும், பெர்ரியையும் விதைகளையும் உண்ணும். உணவு அதிகம் கிடைத்தால் பணித் தரையில் பாதுகாப்பாக வைத்திருந்து உண்ணும். அதே சமயம் உணவுத் தட்டுப்பாடு என்றால், மற்ற விலங்குகள் விட்டுச் சென்ற உணவையும், பெரிய விலங்குகளின் கழிவுப் பொருட்களையும்/மலத்தையும் கூட சாப்பிடும்.
ஆர்க்டிக்கின் விலங்குகள்.!
ஆர்க்டிக்கில் வாழும் லெம்மிங் என்னும் கொரிப்பான் சிறியது. 30 -110 கிராம் எடைதான் இருக்கும். 7 -15 செ.மீ நீளம் இதன் உடல். உடல் சிறிதாக வால் நம்ம பிள்ளைகள் போல நீ நீள..ள மானதாக இருக்கும்.இவை தாவர உண்ணிகள். மற்ற துந்திர விலங்குகள் போல இவை குளிர்கால உறக்கம் மேற்கொள்வதில்லை.எந்த நீர்மும் துர்ருதுருதான். புல்லைப் பறித்து முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆர்க்டிக் பகுதியில் பறவைகளும் காணப்படுகின்றன. இங்குள்ள கடல் வாழ் விலங்குகள் இப்பகுதிகளுக்கு மட்டுமே உரித்தானவை. வேறு எந்த பகுதியிலும் காணப்படுவதில்லை. சீல்,(கடல் பசு ) வால்ரஸ்(கடல் சிங்கம்) , பலீன் திமிங்கலம், வெள்ளைத் திமிங்கலம் நீலத் திமிங்கலம் என்ற பெரிய கொலைகார திமிங்கலம் மற்றும் மேல்தாடை நீண்டு தந்தமான நார் திமிங்கலம் என ஏராளமான விலங்குகள் ஆர்க்டிக் கடலில் வாழ்கின்றன. நார்த்திமிங்கலத்தின் உடல் 5 மீ நீளம். ஆனால் இதன் தந்தம் சுமார் 3 மீ நீளம் உள்ளது.
பற, பற. உலகைக் கட..!
இங்குள்ள ஆர்க்டிக் டெர்ன் (Artic Tern) என்ற குட்டிப் பறவைதான் உலகிலேயே அதிக தூரம் வலசை வரும பறவையாகும். இது ஆர்க்டிக்கின் வட்டமான துந்திராவில்தான் இனப்பெருக்கம்தான் செய்கிறது. எங்கிருந்து எங்கு வலசை போகிறது தெரியுமா? வட ஆர்க்டிக்கிலிருந்து தென்அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் பறந்து ஓடி விடுகிறது. இதன் தூரம் எவ்வளவு என்று சொன்னால் மயக்கம் போட்டுவிடுவீர்கள். சுமார் 35,000 கி.மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டததட்ட உலகை சுற்றி வரும் தூரம் இது. ஆனால் இந்த பறவை சுமார் ஒரு அடி நீளம்தான் இருக்கும். இந்த அற்புத பறவை, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது.
வலசை வரும் நேரங்களில் உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4 ,000 கி.மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது.
தென்கோடி உலகம்.!
கொஞ்சம் சாய்ந்து வெளி நீட்டிக் கொண்டிருப்பது போன்ற உலகின் தென்கோடியைப் பார்த்திருக்கீர்களா? அதுதான் அண்டார்க்டிக் என்ற பனிக்கண்டம். இது தென்பகுதி உலகின் அண்டார்க்டிக் வட்டத்தை தன் வசம் வைத்துள்ளது. இதனைச் சுற்றி தென் பெருங்கடல் உள்ளது.1 .4 கோடி ச கி.மீ பரப்பு கொண்ட அண்டார்க்டிக் பகுதி உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகும். இது ஆஸ்திரேலியாவைவிட இரண்டு மடங்கு பெரியது. அன்டார்க்டிக்காவின் 98 % பகுதி பனியால் மூடப்பட்டுள்ளது. தரைமேல் சுமார் 1 .6 மீ உயரத்திற்குபனிப்பாளம் உள்ளது.
அண்டார்க்டிகாவின் குணமும் நிறமும்..!
அன்டார்க்டிகா பொதுவாக உலகிலேயே மிகவும் குளிர்ந்த , உலர்ந்த, காற்று அதிகம் உள்ள கண்டம். அது மட்டுமல்ல அனைத்து கண்டங்களுக்கும் மிக உயரத்தில் இருப்பதும் அண்டார்க்டிகா மட்டுமே. இங்கு அதிகம் தாவரங்கள் இல்லாததால் இது பனிப் பாலைவனம் என்றே அழைக்கப்படுகிறது.வருடத்தில் வெறும் 200 மி.மீ (8 இன்ச்தான் )மட்டுமே மழைப் பொழிவு உண்டு. ஆனால் இங்கு குளிர் குடலை உருவி விடும்.ஆமாம், இதன் வெப்பநிலை - 89 டிகிரி செல்சியஸ். அதனால் இங்கு மனித வாழ்க்கையே/ வாடையே கிடையாது. ஆனாலும் கூட, அப்பகுதியில் அண்டார்க்டிகா பற்றி ஆராய தொடர்ந்து சுமார் 1000 -5000 மக்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றனர். இங்கு குளிரைத் தாக்கு பிடிக்கும் உயிரினங்கள் மட்டுமே வாழ்கின்றன. அவை ஆல்காக்கள், பாக்டீரியா ,பூஞ்சைகள், விலங்குகளில் உண்ணிகள், தட்டைபுழுக்கள், சீல்,மற்றும் இராணுவ வீரர்கள் போல் அணிவகுப்பு நடத்தும் பெங்குவின்கள் இந்த குளிர்ப் பரப்பில், பனிப்பாளத்தை ரசித்து மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருகின்றன.இங்கு பனிக்கரடியோ எஸ்கிமோக்களோ கிடையாது.
சூரியக் கதிரை விரட்டும் பனிப்பாறை!
அண்டார்க்டிகா பற்றி கிரேக்கர்கள் சொல்லி இருக்கின்றனர். ஆனால் 1820 வரை அந்தப் பனிக்கண்டத்தை யாரும் பார்த்ததில்லை.முதன் முதல் 1821 ல் தான் அண்டார்க்டிகா பகுதிக்குச் சென்றனர். அன்டார்க்டிக்காவின் பனிப் பாறை 5 கி.மீ உயரம் வரை இருக்கும். இதில் உலகின் 70 % நல்ல நீரைப் பெற்று விட முடியும். ஒருக்கால் இவை கரைந்தால், கடல் மட்டம் 50 - 60 மீ. உயரம் வரை உயரும். அண்டார்க்டிகாவின் பனிப்பாறைகள் மிகப் பெரிய பனியாறுகள்தான். ,இவை மிக மிக மெதுவாக கடலை நோக்கி செல்கின்றன. பணித் தொப்பியைப் போட்டிருப்பதால், இந்த கண்டம், கடல் மட்டத்திலிருந்து சுமார்
2,300 மீ உயரமாக உள்ளது. மேலும் அண்டார்க்டிகா மிகவும் குளிராக இருப்பதன் காரணம் என்ன தெரியுமா? சூரியனிலிருந்து வரும் சூரியக் கதிரை இதன் பனிப் பாறைகள் சுமார் 80 % திருப்பி அனுப்பி விடுகின்றன. மீதமுள்ள 20 % சூரிய வெப்பம் வளிமண்டலம் மற்றும் மேகங்களால் உட்கிரகிக்கப்படுகின்றன.
உலகின் மிக நுணுக்கமான ஆய்வகம்.!
அண்டார்க்டிகாவில் ஏராளமான கனிமங்கள் உள்ளன. அங்கே எண்ணெய் வளமும் ஆழ்ந்து கிடக்கிறது. உலகின் அற்புதமான ஆய்வகம் அன்டார்க்டிகாதான். உலகின் பல பகுதிகளிலிருந்து விஞ்ஞானிகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றனர். இங்கு அறியப்படாமல் இருக்கும் வளங்கள், உயிரிகள் போன்றவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இதன் மாசு படாத சூழலைக் கணக்கில் கொண்டு, வெப்ப நிலை மாற்றத்திற்கும், பிரபஞ்ச உருவாகத்திற்கான காரணங்களையும் இங்குதான் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆக்சிசனை அப்படியே முழுங்குவேன்.!
அண்டார்க்டிகாவில் வாழும் வளர்ந்த நீலத் திமிங்கலம் சாப்பிடத் துவங்கினால் ஒரு நாளில் சுமார் 3 .6 - 4 டன் உணவு உட்கொள்ளும். தொடர்ந்து 6 மாதம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் 6 மாதம் பட்டினி கிடக்கும். இது ஒரு நாளில் உண்பதை, ஒரு மனிதன் 4ஆண்டுகள் நிறைவாக உண்ண முடியும். இங்கு ஒரு வினோதமான மீன் உள்ளது. அதன் பெயர் ஐஸ் மீன் ( Ice Fish). இதன் இரத்தத்தில் சிவப்பணு கிடையாது. இங்குள்ள குளிர் சூழலில் எளிதில் நீரிலேயே ஆக்சிஜன் கரைந்து விடுவதால் அப்படியே ஆக்சிஜனை இந்த மீன் எடுத்துக் கொள்கிறது. இது மனத்தைக் கொள்ளை கொள்ளும் வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் செவுள் கூட வெள்ளைதான் போங்க..அண்டார்க்டிகாவின் தரை விலங்கில் மிகப் பெரியது என்று சொல்லிக்கொள்ளக் கூடியது ஒரு பூச்சிதான்.அதன் அளவு 1 .3 செ.மீ தான்.அதனால் பறக்க முடியாது. அன்டார்க்டிக்காவில் எல்லா விலங்கினங்களும் கடலில்தான் வசிக்கின்றன.
விலங்கினங்கள்.!
அன்டார்க்டிக்காவில் 17 வகை பென்குவின்களும், 35 வகை பறவைகளும், 11 வகை டால்பின்களும், 6 வகை சீல்களும், 8 வகை திமிங்கலங்களும் கடலில் வாழ்கின்றன.இந்த விலங்குகள் எல்லாவற்றையும் நீங்கள் அருகில் போய் பார்க்கலாம். மனிதனைப் பார்த்து பயந்து ஓடிவிடாது. அன்டார்க்டிக்கவை ௨௯ நாடுகள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அதன் அறிவியல் ஆராய்ச்சி செய்வதற்காகத்தான். ஆனால் துரதிருஷ்ட வசமாக, இதன் பெரும்பகுதி உலக வெப்பமயமாக்கலால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனைப் போய் பார்ப்பதற்கு உகந்த நேரம் டிசம்பர், ஜனவரி மாதங்கள் தான். கடற்கரை ஓரங்களில் திமிங்கலங்கள் அணிவகுத்து நிற்கும். சீல்கள் பார்க்கவும் இதுதான் சரியான தருணம். இப்போதுதான் பெங்குவின்கள் முட்டையிட்டு, அடை காத்து குஞ்சு பொரிக்கும். பேபி பென்குவினை, அது ஓடி விளையாடுவதை வசந்த காலத்தில் (பிப்ரவரி , மார்ச் ) பார்க்கலாம். இவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு மாதிரி அண்டார்க்டிகா அழகாக காட்சி அளிக்கும். ஒரு நாளில் கூட, ஒவ்வொரு மணி நேரமும் வேறு வேறு வகையில் அழகு கொப்பளிக்கும்.
பேரா.சோ.மோகனா
No comments:
Post a Comment