இந்த உலகம் நமக்கு முன்பும் இருந்தது. நமக்குப் பிறகும் இருக்கும். அப்படியிருக்க நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் இந்த உலகை நாளை நம் குழந்தைகள் கையிலும் பேரப்பிள்ளைகள் கையிலும் எப்படி ஒப்படைக்கவிருக்கிறோம். இயற்கைச் சமநிலையைப் பற்றி,, சுற்றுச்சுழல் சீர்கேட்டைப் பற்றி,, இயற்கையின் மார்பறுத்து இரத்தம் உறிஞ்சும் மனிதனின் இலாப வேட்டை பற்றி,, சிறிதும் கவலைகொள்ளாத நாம் எதைச்சேர்த்து வைக்க நாளும் ஓடுகிறோம்?
2011 ஆம் ஆண்டை சர்வதேச காடுகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. உலக அளவில் காடுகளின் பரப்பளவு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 33%மாக இருந்த இந்தியக் காடுகள் தற்போது 19.5%மாக குறைந்திருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. உயிர்வளி உற்பத்தித் தொழிற்சாலைகளான காடுகளை அழித்து விட்டு எத்தகைய தொழிற்புரட்சிக்கு வித்திடப்போகிறான் மனிதன் என்பது புரிந்தபாடில்லை.
காடுகள் பாதுகாப்பு என்றவுடன் நம்மில் பெரும்பாலானோர் மரங்களைத் தாண்டி சிந்திக்க மறந்துவிடுகிறோம். காட்டுயிர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சியினங்கள் என காடுகளுக்குள் இருக்கும் ஒரு உயிர்ப்பின்னலை நாம் நினைத்துப்பார்ப்பதில்லை. சொல்லப்போனால் காடுகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த உயிர்ப்பின்னல்தான். எனவே காடுகள் பாதுகாப்பு என்பதில் மேற்குறிப்பிட்ட உயிர்ப்பின்னலை பாதுகாப்பது குறித்தும் கட்டாயம் பேசியாக வேண்டும்.
கல்வாரியா என்னும் ஒரு வகை மரம் தற்போது இல்லை. டோட்டோ எனும் ஒரு வகை பறவை இனமும் தற்போது இல்லை. (மனுசப் பய அழிச்சுட்டானப்பா அப்படின்றத தான் இப்படி சுத்தி வளச்சு சொல்ல வேண்டியிருக்கு). இவ்விரு அழிவுகளுக்கும் தொடர்பு உண்டு. கல்வாரியா மர விதைகளின் உறையானது கடினமானது. இம்மரத்தின் பழங்களை டோட்டோ பறைவைகள் உண்ணும். திறன் மிகுந்த அப்பறவையின் ஜீரண மண்டலம் அவ்விதையின் உறையை சிதைத்து விடும். பின்னர் கழிவோடு விதை வெளியேறும் போது புதிய கல்வாரியா மரம் முளைக்கத் துவங்கும். எனவே இம் மரங்களின் உற்பத்தியானது டோட்டோ பறவையைச் சார்ந்தே இருந்தது. டோட்டோ பறவையின் அழிவுக்குப் பிறகு கல்வாரியா மரங்களின் உற்பத்தியும் முடிவுக்கு வந்தது. மனிதனை நம்பி அல்லது சார்ந்து எந்த உயிரினமும் இல்லை ஆனால் எல்லா உயிரினங்களையும் சார்ந்தே மனிதன் இருக்கிறான். இந்த உண்மையை மனித இனத்திற்குப் புரியும் படி ஊதும் வி
கடந்த 60 ஆண்களுக்கு முன் 40,000 புலிகள் இருந்த இந்தியாவில் இன்று வெறும் 2,000 புலிகள் மட்டுமே உள்ளன. காடுகள் என்றாலே சிங்கம் புலி எல்லாம் ஒன்றாக இருக்கும் என நினைக்கும் நமக்கு இந்தியாவில் குஜராத்தின் கிர் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் உள்ளன அதுவும் வெறும் 300 சிங்கங்களே உள்ளன என்ற தகவல் அதிர்வைத் தரும் செய்தியாக இருக்கிறது. 1948க்குப் பிறகு சீட்டா (சிவிங்கிப் புலி) இந்தியாவிலிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு விட்டது. அழிந்து வரும் உயிரினங்களின் பெயர்கள் இடம்பெறும் Red Date Bookல் இந்திய உயிரினங்களின் பெய்ர்ப்படியல் நீண்டுகொண்டே செல்கிறது.
மனிதர்களின் பெருக்கத்திற்கேற்ப நகரங்கள் விரிவுசெய்யப்படுகின்றன. அதே போல் காடுகள் விரிவுசெய்யப்படுகின்றனவா. ஒரு யானைக்குட்டி புதிதாகப் பிறந்தால் 1 ஏக்கர் பரப்பளவுள்ள காடு கூடுதலாக தேவை என்று காட்டுயிர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நடைமுறை அப்படி இல்லையே. அதனால் தான் உணவு தேடி அலையும் போது கூட்டம் கூட்டமாக இரயில் தண்டவாளங்களில் அடிபட்டும் காடுகளில் போதுமான உணவின்றியும் யானைகள் அதிக அளவில் இறக்கின்றன.
இவ்வாறான உதாரணங்களும் புள்ளி விவரங்களும் நிறைய உண்டு. நிற்க. திண்ண சோறு செரிமானம் ஆகல போல அதான் கூவுறான் என்பது போலத்தான் இயற்கையைப் பற்றி காடுகளைப் பற்றி பேசுபவர்களை இன்று நம் தமிழ்ச் சமூகம் வேடிக்கை பார்க்கிறது. ச.முகமது அலி, தியோடர் பாஸ்கரன் உள்ளிட்ட விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சிலர் தான் இயற்கைச் சிந்தனையாளர்களாகவும் அதை மையப்படுத்தி எழுதும் எழுத்தாளர்களாகவும் உள்ளனர். என்னுடைய நாவல் தமிழ்நாட்டிலேயே நாலு பேருக்குத்தான் புரியுதாம்னு பாராட்டு விழா மேடைகளில் பேசிக்கொள்ளும் கலை இலக்கிய அதிஅற்புத அறிவுஜீவி எழுத்தாளர்கள் எவரும் நம் பக்கம் நிற்கவோ நம் செயல்களில் களப்பணிகளில் துணைநிற்கவோ தயாரில்லை.
காட்டுயிர்களையும் அதன் வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு நம் காலத்தில் விதைக்கப்பட வேண்டும். நம் பிள்ளைகளிடம்,, நம் உறவினர்களிடம்,, நம் குடும்பத்தில்,, நாம் இது குறித்துப் பேசத் துவங்குவோம். வகுப்பறைகளை இதற்கான களமாக பயன்படுத்துவது சமுகத்தின் மேல் அக்கறை கொண்ட ஒவ்வொரு ஆசிரியரின் கடைமையாகும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் பல்வேறு செயல்பாடுகளின் மூலமாக காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி மக்கள் இயக்கங்களை நடத்தி வருகிறது. நாளைய தலைமுறை குறித்து கவலையோடு சிந்திக்கின்ற ஒவ்வொருவரும் அறிவியல் இயக்கச் செயல்பாடுகளில் தன்னை அர்பணிப்போம்.,,
No comments:
Post a Comment