முதல் பக்கம்

Mar 22, 2011

எங்க போச்சு?



தொடர்ந்த வேலைகளுக்கிடையேயும் அலுவலகத்தில் அம்மாவின் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது அவனுக்கு. நான்கைந்து வருடங்களாக வராத அம்மா நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களை சம்மதிக்க வைத்து இந்த நகரத்திற்கு அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமையானபடியால் கூடவே இருந்து அம்மாவை கவனித்துக் கொள்ள முடிந்தது. இன்று அவனும், அவளும் அவரவர் அலுவலகங்களுக்கு கிளம்ப, குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டிருந்தனர். வீட்டைப் பூட்டிக்கொள்ளவும், சமைத்திருந்த மதிய உணவையும், ஃபிளாஸ்கில் போட்டு வைத்திருந்த டீயைப் பற்றியும் அம்மாவிடம்  சொல்லப்பட்டு இருந்தது. ரிமோட்டை இயக்கி எப்படி டி.வி பார்ப்பது என்றும், எந்தெந்த நம்பர்களில் எந்தெந்த சானல் என்றும் கூட விளக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் தவிப்பாய் இருந்தது. வீட்டில் போன் இருந்தாலாவது அம்மாவிடம் இரண்டு வார்த்தை பேசிக் கொள்ளலாம் எனத் தோன்றியது. ஊரில் பேசவும், பழகவும் வீடுசுற்றி மனிதர்கள் இருப்பார்கள். தனியாய், உள்ளே பூட்டிக்கொண்ட வீட்டில் அம்மா என்ன செய்வார்களோ என உறுத்திக் கொண்டே இருந்தது.
சாயங்காலம் அலுவலகம் முடிந்ததும், நேரே வீட்டிற்கு போனான். குழந்தைகள் வந்திருந்தனர். அம்மா வாசலருகே சேர் போட்டு உட்கார்ந்திருந்தார்கள். எதையும் காட்டிக்கொள்ளாமல் “என்னம்மா, எப்படியிருந்தீங்க.... என்ன சீரியல் பாத்தீங்க” என்றான் சிரித்தவாறு.
“எய்யா... முன்னால் எல்லாம் ஒங்க வீட்டுல எவ்வளவு சிட்டுக்குருவி உண்டு. ஜன்னல் வழியா அதுபாட்டுக்கு உள்ளே வந்து போகும். துணிக் காயப்போட்டு இருக்குற கொடியில வரிசையா உக்காந்து கத்தும். இந்த புங்க மரத்துல எப்பப் பாத்தாலும் அடைஞ்சு கிடக்கும். இப்ப ஒன்னையும் காணம். எங்க போச்சு?” என்றார்கள் வருத்தமாக.

No comments:

Post a Comment