முதல் பக்கம்

Aug 27, 2011

19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011

குழந்தைகளிடையே இயல்பாக உள்ள அறிவியல் மனப்பான்மையினையும் படைப்புத்திறனையும் வெளிக்கொண்டுவரும் விதமாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 1993ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப் பட்டுவருகிறது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை,தேசிய அறிவியல் தொழில்நுட்பம்,தகவல் பரிமாற்றக்குழு ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 18 ஆண்டுகளாக மாநில அளவில் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறது.

இந்த ஆண்டு 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. நிலவளம்-வளத்திற்காக பயன்படுத்துவொம், வருங்காலத்திற்கும் பாதுகாப்போம் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தலைப்புகளாக நிலத்தை அறிவோம்,நிலத்தின் செயல்பாடுகள், நிலத்தின் தரம்,நிலத்தில் மனிதனால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள், நிலவளத்தின் நிலைத்தகு பயன்பாடு, நிலத்தைப் பயன்படுத்துவது பற்றிய சமுக அறிவு ஆகியன அறிவிக்கப் பட்டுள்ளன.

மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பதுறைச் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த ஆய்வு புரிந்த குழந்தைகளுக்கு குழந்தை விஞ்ஞானியர் விருது இந்திய அரசின் குடியரசுத்தலைவர் அவர்களால் வழங்கப்படும்.தேர்வுசெய்யப்படும் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இரண்டாவது வாரம் நடைபெறும் இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளலாம். அண்மையில் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தேசியக் கலைத்திட்டத்தில் கூட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குழந்தைகள் அறிவியல் கற்பதற்கான சிறந்த மேடை எனப் பாராட்டியுள்ளது.

மாவட்ட அளவிலான மாநாடு அக்டோபர் மாதம் பெரியகுளத்திலும் மாநில அளவிலான மாநாடு நவம்பர் மாதம் விருதுநகரிலும் தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27-31 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிற்கான விதிமுறைகள்:

 
  • தேசிய அளவிலும் உலக அளவிலும் பாராட்டிப் பேசப்படும் இம்மாநாட்டில் 10முதல் 17 வயது வரையிலான குழந்தைகள் பங்கேற்கலாம்.
  • ஆய்வு செய்யும் குழந்தைகளின் வயது டிசம்பர்,31 அன்று என்ன வயதோ அதுவே கணக்கில் கொள்ளப்படும்.ஆய்வுக்குழு உறுப்பினர்களின் அதிகபட்ச வயதின் அடிப்படையில் எந்தப்பிரிவென முடிவு செய்யப்படும்.
  • 10முதல்13 வயதினர் வரை இளநிலை/கீழ்நிலை என்றும் 14 முதல் 17 வயது வரை முதுநிலை/மேல்நிலை என்றும் கருதப்படும்.
  • பள்ளியில் பயில்வோர் மட்டுமின்றி இடைநின்ற குழந்தைகள்,குழந்தைத் தொழிலாளர்கள்,இரவுப்பள்ளிகள் மற்றும் துளீர் இல்லக் குழந்தைகளும் பங்கேற்கலாம்.
  • இக்குழந்தைகளுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களாக பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்,கல்லூரி மாணவர்,அறிவியல் இயக்க ஆர்வலர்கள் என ஆர்வமுள்ள நண்பர்கள் செயல்படலாம்.
  • வழிகாட்டும் ஆசிரியர்களாக செயல்படும் நண்பர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கதின் சார்பில் பயிற்சியளிக்கப்படும்.தேனி மாவட்டதில் இதற்கான பயிற்சி முகாம் செப்டம்பர் மாதம் 2வது வாரம் தேனியில் நடைபெறவுள்ளது.
  • இளநிலை மாணவர்கள் 2500 வார்த்தைகளிலும்,முதுநிலை மாணவர்கள் 3500 வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆய்வு பதிவு செய்த உடனே சுமார் ஒரு பக்க அளவில் ஆய்வுச்சுருக்கம் எழுதி மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.
  • குழந்தைகள் கட்டாயமாக மூன்று முதல் ஐந்து பேர் கொண்ட குழுவாகத்தான் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.தனிநபராக ஆய்வு செய்தல் கூடாது.
  • பொதுவாக சோதனை முறையில் ஆய்வு செய்வதானால் அறிவியல் முறைப்படி செய்தல்வேண்டும்.
  • ஆய்வின் கருத்து புதியதாக,எளியதாக,செயல்முறையுடன் கூடியதாக,கூட்டுச் செயல்பாட்டுடன் கூடியதாக இருக்கவேண்டும்.
  • மேற்கொள்ளும் ஆய்வானது உள்ளூர் பிரச்சனைகளை மையமாக வைத்து தகவல்கள்,கணக்கெடுப்பு,சோதனைகள் போன்றவற்றை தங்களின் மாவட்டத்திற்கு உள்ளேயே செய்துகொண்டு வரவேண்டும்.மாவட்ட எல்லை தாண்டக்கூடாது.
  • தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்கவேண்டும்.
  • புள்ளி விபரங்கள் போதுமானதாக இருக்கவேண்டும்.
  • புள்ளிவிபரம்,கணக்கெடுப்பு,நேர்காணலுக்கான வினாத்தாள் தயாரிக்கும்போது குறைந்தபட்சம் 20 வினாக்கள் இருக்கவேண்டும்.
  • ஆய்வுக்காக நேர்காணல் செய்யும்போது குறைந்தபட்சம் 50 நபர்களையாவது சந்திக்கவேண்டும்.
  • மனிதனின் மீதோ,மனிதன் குடிக்கும்,உண்ணும் எந்தப்பொருளின் மீதோ எவ்வித ஆய்வும் மேற்கொள்ளக் கூடாது.
  • மருத்துவம்,மருந்துகள்,வியாதிகள் தொடர்பாகவும் எவ்வித ஆய்வும் மேற்கொள்ளக்கூடாது.
  • ஆய்வறிக்கைக்காக இணையதளத்திலிருந்து தகவல்களை டவுன்லோடு செய்துகொண்டுவரக்கூடாது.
  • ஆய்வறிக்கையை கையில் எழுதியோ,தட்டச்சு செய்தோ கொண்டுவரலாம்.
  • ஆய்வறிக்கையில் அதிகபட்சமாக நான்கு புகைப்படங்கள்/அட்டைகள்/ விளக்கப்படங்கள் இருக்கலாம். கூடுதலான படங்களுக்கு எவ்வித கூடுதல் மதிப்பெண்களும் கிடையாது.
  • கட்டாயமாக வி.சி.டி. அனுமதி கிடையாது.
  • ஆய்வறிக்கைக்கான செலவு அதிகபட்சமாக ரூ.250 ஐ தாண்டக்கூடாது.
  • ஆய்வறிக்கைக்காக தினசரி நாட்குறிப்பு பேணவேண்டும்.மாநாட்டின்போது சமர்ப்பிக்கவேண்டும்.
  • ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 8 நிமிடங்கள் மட்டுமே.
அறிவியல் பரப்புவதில் பல்வேறு புதுமைகளைச் செய்துவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்புவாய்ந்த இம்மாநாட்டிற்கு ஆர்வமுள்ள குழந்தைகளையும் ஆசிரியர்களையும் பங்கேற்க அழைக்கிறது..


மேலும் விபரங்களுக்கு...
தே.சுந்தர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2011
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
எண்,8. தளம்,2., ஸ்மார்ட் மொபைல்ஸ் மாடி
மோகனசுந்தரம் மருத்துவமனை அருகில்
குட்டியாபிள்ளைத்தெரு,கம்பம்-625516
அலைபேசி-9488011128,9944094428
மின்னஞ்சல்-sundar.tnsf@gmail.com
வலைப்பக்கம்-www.tnsftheni.blogspot.com

No comments:

Post a Comment