முதல் பக்கம்

Aug 28, 2011

2011,ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தினப் போட்டிகளில் வெற்றிபெற்றோர் விபரம்

நண்பர்களே..
     நமது தேனி மாவட்டத்தில் 2011ம் ஆண்டிற்கான ஹிரோஷிமா நாகசாகி நினைவு தின நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.ஆண்டிபட்டி,பெரியகுளம்,தேனி,போடிநாயக்கனூர்,கம்பம் ஆகிய ஐந்து கிளைகளின் சார்பில் நடைபெற்ற 4 பேரணிகள்,2 மனிதசங்கிலி இயக்கங்கள், 9 கருத்துரைகள்,ஒன்றிய மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் உள்ளிட்ட 19 நிகழ்ச்சிகளில் சுமார் 45 பள்ளிகள்,5 கல்லூரிகள்,95 ஆசிரியர்கள்,3750 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.மாவட்டந்தழுவிய அளவில் மிகச்சிறப்பாக நடைபெற்ற பேரியக்கமாக ஹிரோஷிமா-நாகசாகி நினைவு தின நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.


    அறிவியல் அமைதிக்கே என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை அறிவித்திருந்தது.6,7,8 வகுப்பு மாணவர்களுக்கான போரின் பிடியில் பிஞ்சுகள் என்ற தலைப்பிலான ஓவியப் போட்டியில் போடி,சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.காயத்ரி முதல் இடத்தையும் இராயப்பன்பட்டி புனித ஆக்ன்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.மதுவர்ஷா இரண்டாம் இடத்தையும் ஆண்டிபட்டி இலங்கை அகதிகள் முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மாணவர் க.கிஷோர்குமார் மற்றும் காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவி டி.திவ்யா ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.


     9முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இதுபோல் துயரம் இனிமேல் வேண்டாம் கட்டுரைப்போட்டியில் கூடலூர் என்.எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளியின் மாணவர் க.தினேஸ்குமார் முதல் இடத்தையும் கம்பம் இலாஹி ஓரியண்டல் அரபிக் உயர்நிலைப்பள்ளியின் மாணவர் பி.முகம்மது இத்ரிஸ் மற்றும் கூடலூர், விக்ரம்சாராபாய் துளிர் இல்ல மாணவன் மு.கெளதம் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவி எம்.கார்த்திகாதேவி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.


    கல்லூரி மாணவர்களுக்கான அன்னை பூமியில் அமைதி தவழட்டும் கவிதைப்போட்டியில் எஸ்.என்.கல்லூரி மாணவர் பி.எஸ்.கார்த்திகேயன் (பெரியகுளம்) முதல் இடத்தையும் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவியர் சி.யுவராணி, ந.சுகன்யாதேவி ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.


    ஆசிரியர்களுக்கான அணு ஆயுத போட்டியும் மானுடத்தின் தலைக்குனிவும் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் தேவாரம் அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எம்.பொட்டியம்மாள் முதல் இடத்தையும் மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி.மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ம.சீனிவாசன் இரண்டாம் இடத்தையும் தேனி கலை அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர் பி.சங்கரநாராயணன் மற்றும் காமயகவுண்டன்பட்டி விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் டி.கற்பகம் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.பங்கேற்ற,பரிசுகள் பெற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


    தமிழ்நாடு அறிவியல் நடத்திய இந்த போட்டிகள் பாராட்டுச் சான்றிதழ்களுக்காகவும் பரிசுகளுக்காகவும் மட்டுமல்ல என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள்.. மிக நாகரிகமடைந்த ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சநிலையை அடைந்துவிட்ட நாம்,அல்லது அப்படி நினைத்துக்கொண்டிருக்கின்ற நாம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான வழிமுறைகளை இன்னும் கண்டறியவில்லை,அல்லது கடைப்பிடிக்கவில்லை.இந்நொடிப்பொழுதில் உலகின் பல்வேறு பகுதிகளில் உரிய மருத்துவ வசதியின்றி,சுகாதாரமின்றி, சத்தான உணவின்றி பச்சிளம் குழந்தைகள்,பெண்கள் என பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வறுமைக்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். மின்சார வசதிகளோ,பேருந்துகளோ,மருத்துவமனைகளோ,பள்ளிகளோ, தொலைக்காட்சிகளோ,விதவிதமாக நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற செல்போன்களோ எட்டிப்பார்க்காத கிராமங்கள் எத்தனையோ இருக்கின்றன.. இந்தச் சூழ்நிலையில்தான் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கல்விக்காக,சுகாதாரத்திற்காக,மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்காக அன்றி பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஆயுதங்களைச் செய்து குவிப்பதற்காகவும்,வளமிக்க நாடுகளை அடிமைப்படுத்தவும்,பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்திற்கும் ஒதுக்குகின்றன.


   எனவே ஆயுதங்களுக்காகவும்,போர்களுக்காகவும் செலவிடுகின்ற தொகையை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தினால் இந்த பூமி அனைத்து மக்களுக்குமான சொர்க்கமாக மாறும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது இல்லையா?


போர்களுக்கெதிராகவும் அணு ஆயுதங்களுக்கெதிராகவும் ஒன்றிணைவோம்..


அன்னை பூமியின் அழகை,அற்புதங்களை நேசிப்போம்.. அழியாது காப்போம்..


அறிவியல் ஆக்கத்திற்கே..அறிவியல் அமைதிக்கே..அறிவியல் உலகஒற்றுமைக்கே என்பதை உரத்துச்சொல்வோம்..


                                                             வருங்காலச் சந்ததி வாழட்டும் நிம்மதியாய்...


                                                                                               அன்புடன் தே.சுந்தர்.

                                                                                                       9488011128

No comments:

Post a Comment