முதல் பக்கம்

Mar 21, 2012

நான் படிச்ச புத்தகம்-1


சமீபத்தில் ஒரு புத்தகம் வாசித்தேன்.. எடுத்தவுடன் உள்ளடக்கத்தினை பார்த்தேன்.. வித்தியாசமாக இருந்தது. நோஞ்சானும் புத்தகமும்-இது முதல் தலைப்பு. அடுத்து அடிமைக்குழந்தை, அதிக பிரசங்கி, நேரக்கஞ்சன், வெண்டைக்காய்ப் பிரியன் இப்படி பத்து தலைப்புகள்..

சரி, அந்த நோஞ்சான் யாரெனப் பார்ப்போம் என அதைப் படித்தேன். வேறு யாருமல்ல, நம்ம நியூட்டன் தான். புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்து சொன்னார் அல்லவா, அதே நியூட்டன். மிக நோஞ்சானாக இருந்த அவர் ஒருநாள் தன்னிடம் வம்பிழுத்த முரட்டுப்பையனை ஒரே அடியில் நிலைகுலையச் செய்து பள்ளி முழுவதும் கதாநாயகனாக அறிமுகமாகிறார். புத்தகங்களில் இன்று எதை வாசித்தோம், நாளை எதை வாசிக்கவேண்டும் எனக் குறிப்பெடுத்து படிக்கும் பழக்கம் அவருக்கு சிறுவயதிலேயே இருந்ததை அறியும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வகுப்பறையில் குழந்தைகளின் தோற்றம் மற்றும் உடலமைப்பை வைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது என்ற சிந்தனையும் நம்முள் எழுகிறது.

அடிமைக்குழந்தை என்ற தலைப்பில் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற விஞ்ஞானியின் கதையைப் படித்தபோது பிறப்பு தரித்தரமானாலும் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அவரைச் சொல்லலாம் எனத்தோன்றியது. உருவ அமைப்பினைக் காரணமாகக் காட்டி அவருக்கு கல்லூரியில் சேர்க்கை மறுக்கப்பட்ட தகவல் நம்மைக் கலங்க வைக்கிறது.

அதிகப் பிரசங்கி என்ற தலைப்பில் ஒரு கதை. டிஸ்லெக்சியா என்ற நோயால் கற்றலில் பின்தங்கிய ஒரு சிறுவன். ஆசிரியர்களால் மக்கு, மரமண்டை எனத் துரத்தப்பட்ட அந்தச் சிறுவன்தான் இன்று உலகமே போற்றுகின்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். என்னே நம் கல்விக்கூடங்களின் தொலைநோக்குப் பார்வை! கணிப்பு!

இப்படி நேரக்கஞ்சனாக விளங்கிய பெஞ்சமின் பிராங்ளின், ஐந்து வயது வரை பேச்சு வராத குழந்தையாக இருந்து பின்னாளில் கணிதமேதையாக திகழ்ந்த சீனிவாச இராமானுஜம்-இப்படி பத்து விஞ்ஞானிகளின் கதைகளை குழந்தைகள், ஏன் ஆசிரியர்களும் கூட விரும்பிப் படிக்கும் வகையில் வெளிவந்துள்ள புத்தகம் இளம் பருவத்தில் விஞ்ஞானிகள். 

இந்தப் புத்தகத்தினை வாசித்து முடிக்கும் போது முயற்சி தவறினாலும் நாம் ஒருபோதும் முயற்சிக்கத் தவறக்கூடாது என்ற உத்வேகம் நமக்குள் நிச்சயம் உருவாகும். எழுத்தாளர்.மொ.பாண்டியராஜன் அவர்களால் மிக அருமையாக எழுதப்பட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
-பிரியா

No comments:

Post a Comment