முதல் பக்கம்

Mar 21, 2012

நான் படிச்ச புத்தகம்-2


மகளிர் தின வாழ்த்துச்சொல்லி அறிவியல் இயக்க நண்பர் ஒருவர் புத்தகம் ஒன்றை பரிசளித்தார். எங்களது பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் மட்டுமில்லாமல் பயிற்சி ஆசிரியைகளுக்கும் வழங்கப்பட்ட அந்தப் புத்தகத்தின் தலைப்பு.. நமக்கான குடும்பம்!

தலைப்பே ஆர்வத்தைத் தூண்ட, சரி நமக்கான குடும்பத்தில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள், பார்ப்போம் என முதல் பக்கத்தினை திருப்பினேன். ஆரம்பமே அமர்க்களம்.. ஒரு ஆண் எதற்காக திருமணம் செய்து கொள்கிறான்? ஒரு பெண் எதற்காக திருமணம் செய்து கொள்கிறாள்? என்ற கேள்விகள் மேலும் ஆர்வத்தைத் தூண்ட வேகம் கூடியது.. தமிழகம் அறிந்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் இந்த புத்தகத்தினை படிக்கவும் முடிக்கவும் நாம் திட்டமிடத் தேவையில்லை. முடித்தபிறகுதான் நம்மால் வைக்கவே முடியும்..

நாம் பெண்களாய் பொறந்துவிட்டோம்.. இப்படித்தான் இருக்கவேண்டும்-என பெண்களே ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று? என்ற ஆசிரியரின் கேள்வி நம்மை இன்னும் விரைவாகப் படிக்கச் செய்கிறது. சிந்திக்க தூண்டுகிறது.. ஒவ்வொரு மதமும் கூட பெண்கள் ஆணுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதை நியாயப்படுத்துவதை எண்ணும்போது நம்முள் எழுகின்ற கோபத்திற்கு அணைபோட முடியவில்லைதான்..

நாடாளுமன்றத்திற்கு முதன்முதலாக ஒரு பிரெஞ்ச்ப் பெண் போட்டியிடுகிறார். அவரை அந்தச் சமூகம் பழித்தது. ஒரு பெண் எப்படி அரசியல் வேலை செய்யமுடியும்? என்று ஏசினர். அந்தப்பெண் அமைதியாகக் கேட்டார். பெண்ணாக நான் பயன்படுத்த முடியாத ஆணின் எந்த உறுப்பைக் கொண்டு அரசியல் வேலை நடக்கிறது என்பதை விளக்குங்கள்.. நான் ஒதுங்கிக் கொள்கிறேன்..- இக்கேள்வி பிரெஞ்சு சமூகத்திற்கு மட்டுமல்ல, பெண் என்பவள் ஆண்களுக்குப் பிறகுதான் என்று எண்ணுகின்ற அத்தனை ஆண்களுக்கும் ஒரு சவுக்கடியாக இருந்திருக்கும் என்பதை நாம் இந்த இடத்தில் விளக்கவேண்டியதில்லை..

ஒரு பெண் திருமணம் என்று வரும்போது வரதட்சனையோடு வந்தால் மட்டுமே விரும்பப்படுபவளாக மாறுவது எதனால்? ஆணுக்குச் சமமாக பல சமயம் கூடுதலாகவே பெண் படித்து வேலைக்குப் போய் சம்பாத்தியம் செய்தாலும் பெண்ணுக்கே உரிய கடமைகளில் இருந்து விடுதலையே இல்லை.. ஏன்? இப்படி இந்தப் புத்தகம் முழுவதும் நிறைந்துகிடக்கும் கேள்விகள் நம் மண்டைக்குள் வண்டு நுழைந்தது போல குடைந்துகொண்டே இருக்கின்றன.. நீங்களும் அவசியம் படியுங்கள்! படிக்கச் செய்யுங்கள்!! (பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.. விலை.ரூ.5 மட்டுமே..)
-பிரியா

No comments:

Post a Comment