முதல் பக்கம்

Mar 10, 2012

உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்..



அன்று எங்கள் பள்ளியில் கம்பம் பகுதியில் பிரபலமான கண் மருத்துவமனை ஒன்றின் சார்பில் கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது..

வழக்கம்போல ஊசிபோடத்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைத்து ஒன்று மற்றும்  இரண்டாம் வகுப்புகளுக்குள் ஒரே கலவரம்.. அழுகையால் பள்ளியே அல்லோல கல்லோலப் பட்டது.

சார்.. எனக்கு காய்ச்சல் இல்ல சார்.. கழுத்தக்கூட தொட்டுப்பாருங்க சார்.. இருமல் போயிருச்சு சார்.. மூக்கு ஒழுகல சார்.. ஊசிக்குப் பயந்த குட்டீஸ்கள் ஒரே கலாட்டா..

ஒருவழியாக ஊசிபோட வரல. கண் செக்கப் தான்னு சொல்லி சமாதானப் படுத்தி ஒவ்வொரு வகுப்பாக அனுப்பினோம்.

அடுத்து என்னுடைய மூன்றாம் வகுப்பு மாணவர்கள். ஒவ்வொருத்தராக அழைக்கப்பட்டனர். போர்டில் 1.. 2.. 3.. என 9 வரையிலான எண்கள் பல அளவுகளில் எழுதப்பட்டு மாணவர்களைப் பத்து அடி தூரத்தில் நிறுத்தி கேட்கும் எண்களைச் சரியாகச் சொல்கின்றனரா எனப் பரிசோதனை செய்யப்பட்டனர். சரியாகச் சொல்லி விட்டால் கண்பார்வையில் ஒரு பிரச்சனையுமில்லை..

பெரும்பாலான மாணவர்கள் சரியாகச் சொல்லிவிட்ட மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தனர். ஆனால் நானும் என்னோடு பணிபுரியும் சக நண்பரும் ஒரு மாணவனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம்.. ஆமாம். அவன் பெயர் சங்கிலி மாசானம்.

நாங்கள் சுருக்கமாக அவனை சங்கிலி என்று கூப்பிடுவோம். மனவளர்ச்சி குன்றிய மாணவன். சங்கிலியோடு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள் எல்லாம் இப்போது ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கின்றனர்.

நம்மாளு இப்பதான் மூன்றாம் வகுப்பைத் தொட்டிருக்கிறான். ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடங்கள்.. வெரி ஸ்ட்ராங் பவுண்டேசன்.. ஆனால் ஆளப்பார்த்தால் மூன்றாம் வகுப்பு மாணவனுக்கே உரிய வளர்ச்சிதான். சின்ன முகம். சிறுத்த உடல்..


பேசுவான். மாணவ ட்ரான்ஸ்-லேட்டர்களைப் பயன்படுத்திப் புரிந்து கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் அவனே தனது கோரிக்கைகளை விளக்கிப்பேச கூட ஒருத்தனைக் கூப்பிட்டு வருவான்.

இப்ப என்ன பிரச்சனை என்றால்.. சங்கிலிக்கு கண் சரியாகவே தெரிந்தாலும் 1,2,3-எண்கள் தெரிந்தால் தானே..! சங்கிலி என்ன சொல்லப்போகிறான் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தோம். ஆர்வமிகுதியில் எங்களோடு இன்னொரு நண்பரும் சேர்ந்து கொண்டார்.

சங்கிலி வந்தான். முதலில் வலது கண்ணை ஒருகையால் மூடிக்கொண்டு இடது கண்ணில் பார்த்தும் அடுத்து இடது  கண்ணை மூடிக்கொண்டு வலது கண்ணில் பார்த்தும் எண்களைச் சரியாகச் சொல்ல வேண்டும்..

சங்கிலி சொல்லியே விட்டான். அதுவும் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட கண்களைத் தேய்த்துக் கொண்டும் உற்றுப் பார்த்துக்கொண்டும் சில எண்களைச் சொன்னார்கள்.. ஆனால் சங்கிலி டக்டக்`கென யோசிக்காமல் சொன்னான்.

சொன்னவன் அப்படியே போகாமல் எனக்கு நேரே வந்தான். “சார்.. நெறைய பேரு நான் நம்பரச் சொல்லமாட்டேன்னு நெனச்சாங்க சார். ஆனா கரெக்டா சொல்லிட்டேன் சார்..எனச் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே போய்விட்டான்.. அவனுடைய அந்தச் சிரிப்பில் மனவளர்ச்சி குன்றியவன் நான் மட்டும்தானா? என்ற கேள்விகளும் அர்த்தங்களும் நிறைந்திருந்தது.
-தேனி.தே.சுந்தர்

நன்றி: விழுது(ஆசிரியர் இணைய இருமாத இதழ்-ஜனவரி-பிப்ரவரி,2012)


No comments:

Post a Comment