First Published : 09 Sep 2011 12:09:49 PM IST
கம்பம், செப். 8: தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் புதன்கிழமை பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் மாநிலம் முழுவதிலிருந்தும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் சார்பில், பருவ நிலை மாற்றத்தினால் காடுகளின் இன்றைய நிலை என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் ஆட்சிமன்ற குழுத் தலைவர் மு. ஷேக் மைதீன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான மு. தர்வீஸ் மைதீன் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் மு. ஹவுது முகைதீன் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் எஸ். மோகனா சிறப்புரையாற்றினார். எஸ்.மோகனா பேசியதாவது: உலக அளவில் பருவநிலை மாற்றங்களில் காடுகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. 2005-10 ஆகிய கால கட்டத்தில் இந்திய காடுகளின் தூரம் 750 சதுர கிலோ மீட்டர் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், நமது நாட்டில் மட்டும் காடுகளின் பரப்பு அதிகரித்திருப்பது நன்மை ஏற்படக் கூடியதே, இருப்பினும், இன்றைய சூழலில் இந்த வளர்ச்சி போதாது, இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றார். கருத்தரங்கில், கம்பம் ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரி, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, போடி சி.பி.ஏ கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.