முதல் பக்கம்

Dec 22, 2010

கல்வி உரிமைச் சட்டம் விழிப்புணர்வுப் பிரச்சாரம்: திட்டமிடல் கூட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்கமும் நமது அறிவியல் இயக்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் கலைக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரம்,பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கு பள்ளிக்கல்வி இயக்குநர்கள், அறிவியல் இயக்க மாநில பொறுப்பாளர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் கலைக்குழு பிரச்சாரத்திற்கான பாடல்,நாடகம் தயாரிப்பிற்காக எழுத்தாளர்களுக்கான பணிமனை ஆகியவை நடந்து முடிந்துள்ளது.

அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் திட்டமிடல் கூட்டம் தேனி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று (டிசம்பர்,21) நடைபெற்றது. கூட்டத்தில் எஸ்.எஸ்.எ. முதன்மைக்கல்வி அலுவலர் ஆண்டிபட்டி,தேனி BRC மேற்பார்வையாளர்கள், உத்தமபாளையம் DIET விரிவுரையாளர், VEC ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் இயக்கத்தின் தலைவர் செந்தில்குமரன் செயலாளர் சுந்தர் செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி,அம்மையப்பன் மற்றும் மாவட்ட கருத்தாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சி முகாம் தேதிகள் இருதரப்பு ஒத்துழைப்பு கலைப்பயணம் குறித்து திட்டமிடப்பட்டது. கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் டிசம்பர் 23,24 மற்றும் டிசம்பர் 27,28 தேதிகளில் தேனி அல்லிநகரம் வட்டார வள மையத்தில் நடைபெறும். அறிவியல் ஆர்வலர்கள் பங்கு பெறலாம். மேலும் விபரங்களுக்கு: 9488011128

Dec 19, 2010

இலவச,கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-விழிப்புணர்வு பிரச்சாரம்.

அனைவருக்கும் கல்வி இயக்கமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் இலவச ஆரம்பக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் ஓவ்வொரு அரசு மற்றும், அரசு உதவிபெறும் பள்ளியிலும் உள்ள கிராமக் கல்விக் குழுவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காக பிரச்சார இயக்கத்தை நடத்த உள்ளோம்.. 

இப்பிரச்சாரத்தின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமக் கல்விக் குழுவின் பொறுப்பு மற்றும் அவசியத்தை ஒவ்வொரு குழுவும் அறிந்து தங்கள் பகுதி அரசு மற்றும், அரசு உதவிபெறும் பள்ளியை மேம்படுத்தவும், அதனை அனைத்து வகை தகுதிகளும் பெற்ற பள்ளியாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ளச் செய்வதுடன் தங்கள் பள்ளிகளை தங்களே முன்வந்து முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்க்கான அனைத்து வகையான வழிகாட்டலும் கிராமக் கல்விக் குழுவிற்கு வழங்கப்பட உள்ளது. 

இதற்காக மாநிலம், மாவட்டம், வட்டார வள மையம் (BRC), பள்ளி தொகுப்பு கலந்தாய்வு மையம் (CRC) அளவிலான பயிற்சிகள் அறிவியல் இயக்க உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், சுய உதவிக்குழுப் பெண்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டார வள மைய பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.. 

எனவே நமது தேனி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரத்திற்கும் மற்றும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள பள்ளி தொகுப்பு கலந்தாய்வு மையம் (57) அளவில் இருந்து ஆர்வலர்கள் (அறிவியல் இயக்க உறுப்பினர்கள், மருத்துவர்கள் வழக்கறிஞர்கள்) தேவை உள்ளது. எனவே தங்கள் பகுதியில் கிளையில் உள்ள ஆர்வமான மேற்கண்ட நபர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.மேலும் இவ்வியக்கத்தை வலுப்படுத்த கலைக் குழுக்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களும் கிராமம் தோறும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். நமது மாவட்டத்தில் மூன்று வட்டாரத்திற்கு ஒன்று என்ற வகையில் 3 கலைக் குழுக்கள் (3 × 12 = 36 கலைஞர்கள்) தேவை. (கலைஞர்களுக்கு மதிப்புதியம் தரப்படும்). எனவே கலை ஆர்வமும், சமுக தாகமும் கொண்ட நண்பர்கள் தொடர்புகொள்ளவும்.
9488011128

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நமது மாவட்டத்தின் சார்பாக தொண்டர்களாக கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அழைப்பு

வருகின்ற 27 முதல் 31 வரை சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நமது மாவட்டத்தின் சார்பாக தொண்டர்களாக கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், கிளை, தகவல் தொடர்பு முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் எந்தெந்த தேதிகளில் கலந்துகொள்ள முடியும் என்பது உட்பட மாவட்ட செயலாளரிடம் (9488011128) தெரிவிக்கலாம்.

பின்பு மாநில செயலாளருக்கு அனுப்பப்பட்டு முன்பதிவு மற்றும் தேவைகளின் அடிப்படையில் தாங்கள் மாநில மையத்தால் அழைக்கப்படலாம் , 

மாநில மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட உத்தேச திட்டங்கள்:

27,28 ,29 மாலை வரையில் ஆய்வறிக்கை சமர்பித்தல்.
27ந்தேதி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள்.
28 - கண்காட்சி
Video conference முறையில் நாட்டிலுள்ள பல்வேறு விஞ்ஞானிகள் உடன் குழந்தை விஞ்ஞானிகள் கலந்துரையாடல் 
30 - அறிவியல் சுற்றுலா அப்துல்கலாம் உடன் கலந்துரையாடல் 
31 - நிறைவு விழா - முதன் முறையாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி (வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள்) பங்கேற்கிறார்.

அறிவியல் இயக்கம்,தேனி.

மாவட்டத்தலைவர்:
பா.செந்தில்குமரன்
_9942112203

மாவட்டச் செயலாளர்:
தே.சுந்தர்
-9488011128

மாவட்டப்பொருளாளர்:
செ.சிவாஜி
-9486258980

மாநிலப் பொதுக்குழு:
திருமிகு.ஹ.ஸ்ரீராமன்
-9443929250

இளைஞர் அறிவியல்
மாநாடு ஒருங்கிணைப்பாளர்:
முனைவர்.ஜி.செல்வராஜ்
-9865073411

குழந்தைகள் அறிவியல்
மாநாடு ஆய்வு ஒருங்கிணைப்பாளர்:
முனைவர்.எஸ்.கண்ணன்
-9442021368

கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர்:
வி.வெங்கட்ராமன்
-8870703929

மாணவர்களுக்கு பாராட்டு விழா

கூடலூர் :  தினமலர்
பதிவு செய்த நாள் : டிசம்பர்,16,2010

கோவையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அண்மையில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தின் சார்பாக கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்ல மாணவர்கள் சந்தியப்பிரவீன், ஹரிபிரசாத், சரத்குமார், கார்த்திக் கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பராட்டு விழா கூடலூர் வீகேன் பயிற்சி மையத்தில் நடந்தது. பொறுப்பாளர் சுரேந்தர் வரவேற்றார். விவசாய அலுவலர் தெய்வேந்திரன், அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீராமன், துளிர் இல்ல ஆலோசகர் பிரகலாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முத்துக்கண்ணன், பாஸ்கரன், வெங்கட்ராமன், ராஜசேகர், ரேணுகாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

Dec 17, 2010

13வது அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு(AIPSN) மாநாடு

இந்திய தேசமெங்கும் அறிவியலின் அற்புதத்தை பின்தங்கிய கிராமங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை மேற்கொண்டுள்ள பல்வேறு அறிவியல் அமைப்புகளும் ஒருங்கிணைந்த அமைப்புதான் AIPSN என்றழைக்கப்படும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு. 

இந்த அமைப்பின் 13வது மாநாடு வருகின்ற டிசம்பர் 27 முதல் 31 வரை கேரள மாநிலம் திருச்சூரில் ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்மாநாடு  கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது. நாடு முழுவதும் 21 மாநிலங்களைச் சேர்ந்த 600 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 

தமிழ்நாட்டிலிருந்து நமது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  சார்பில் 30 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அணுசக்தி வளர்ச்சி முகமையின் முன்னாள் தலைவர் டாக்டர்.எ.கோபாலகிருஷ்ணன் மாநாட்டைத் துவங்கி வைக்கிறார். மாநாட்டிற்கான முன்னோட்டமாக ஆற்றல் சேமிப்பு, பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் உடல்நலம்&சுகாதாரம் ஆகிய பல்வேறு தலைப்புகளில் மக்கள் சந்திப்பு, பிரச்சார இயக்கங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் 27ம்தேதி அறிவியல் சுயசார்புக்கே! மதச்சார்பின்மைக்கே! வளர்ச்சிக்கே! என்ற தலைப்பில் தேசிய அளவிலான மிகப்பெரிய கருத்தரங்கமும் நடந்து முடிந்துள்ளதாகத் தெரிகிறது. டிசம்பர் 27ந்தேதி காலையில் துவக்கவிழா. அதனைத்தொடர்ந்து டிசம்பர் 30 வரை அறிவியல் பரப்புதல், விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல்,பருவகாலமாற்றம்&வளர்ச்சி, அதிகாரப் பரவல், மக்கள் ஜனநாயகம், தொழில்நுட்ப பயன்பாடு, நவீன தொழில்நுட்பங்களும் சுயசார்பும் எனப்பல்வேறு தலைப்புகளில் இணை அமர்வுகள் நடைபெறுகின்றன.

மாலைநேரங்களில் கலைநிகழ்ச்சிகளும் கருத்துரைகளும் இடம்பெறுகின்றன. இறுதிநாளான டிசம்பர் 31 அன்று அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்த விவாதமும் நடைபெறுகின்றது. நமது தேனி மாவட்டத்தின் சார்பாக அறிவியல் இயக்க மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ஹ.ஸ்ரீராமன் கலந்து கொள்கிறார்.

மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் மாநாடு வெற்றி பெறட்டும்! 
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மக்களுக்கெல்லாம்...
அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்
அனைவருக்கும் ஒன்றாய்..."
(பாரதி)

_தேனி சுந்தர்

Dec 16, 2010

பேராசிரியர் மணியின் பள்ளிக்கூடத்தேர்தல் : நியாயமான தேர்தல்

ஊர் ஊராய்.. தெருத்தெருவாய் அவரவர் சக்திக்கேற்ப விருதுகளை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். தினமணி நாளிதழில் சமீபத்தில் வெளிவந்த கட்டுரையொன்றில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வீட்டுக்கொரு விருது வழங்குவதாக எந்தக்கட்சி உறுதியளிக்கிறதோ அந்தக்கட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகக் கிண்டலடித்திருந்தார் கட்டுரையாளர். அந்தளவுக்கு விருது மோகம் வேராக விழுதாக எங்கும் வியாபித்துக்கிடக்கிறது.

அதிலும் பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் துவங்கிய பிறகு வல்லுநர் குழுவே வாயடைத்துப் போகுமளவிற்கு "பட்டங்கள்" ஏராளமாய்த் தாராளமாய் நம் கண்ணில் படுகின்றன. இது எங்கபோய் முடியுமோ தெரியவில்லை!

ஆசிரியர்களைப் பொறுத்தவரை நல்லாசிரியர் விருது ஒன்றுதான் அவர்களது ஒரே மற்றும் உயர்ந்தபட்ச எல்லையும்கூட. மாநில அளவிலான  நல்லாசிரியர் விருது தேசிய அளவிலான  நல்லாசிரியர் விருது என இரண்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதுவும் நாடிநரம்பெல்லாம் அடங்கி ஒடுங்கியபிறகு!

துடிப்பாக பணிபுரிகின்ற காலத்தில் புதுமைகள் படைக்கின்ற காலத்தில் விருது வழங்கினாலாவது ஒரு புண்ணியம். விருது கிடைத்த உத்வேகத்தில் சில காலங்கள் சிறப்பாகப் பணிபுரிவதற்கு ஓரளவு வாய்ப்புள்ளது. ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்கின்றபோது கிடைக்கின்ற விருதும் பரிசும் என்னத்துக்கு? பணிக்காலத்தில் தான்புரிந்த சாதனைக்குச் சான்றாக கிடைத்தது என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு விருதையும் படத்தையும் பொழுதுபோகாத நேரங்களில் தூசி துடைத்துத் தூசி துடைத்துப் பார்த்துக் கொள்வதற்குத்தான் உதவும்.

ஒரு உண்மையைச் சொல்வதென்றால் இப்பொழுதெல்லாம் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவதில்லை. நல்ல விலைக்கு வாங்கப்படுகின்றன. சங்கவாதிகள் யாரேனும் விருது வாங்கிவிட்டால் பாராட்டுகள் குவிவதில்லை. மாறாக அவர் இதுவரை செய்த தியாகங்களும் இழந்த இழப்புகளும் கேள்விக்கு  உள்ளாக்கப் படுகின்றன. சந்தேகிக்கப்படுகின்றனர். இதுதான் நல்லாசிரியர் விருதின் இன்றைய லட்சணம்!

ஆனாலும், எது உண்மையான விருது? எது ஆசிரியர் பணியை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது? எது பணியை நேசிக்கும் ஒரு ஆசிரியருக்கு முழுமையான மனநிறைவைத் தருகிறது? மாணவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும்தான்.  ஒரு ஆசிரியரை நல்ல ஆசிரியர், திறமையானவர் எனத் தீர்ப்பு வழங்கும் தகுதியும் திறமையும் மாணவர்களுக்கு மட்டுமே உண்டு என்பதைப் பறைசாற்றுவதாக உள்ளது பேராசிரியர் மணியின் பள்ளிக்கூடத்தேர்தல் புத்தகம்!

ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பணியனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது வருங்கால இளைய தலைமுறை  ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்குமென்று எனக்கிருந்த கருத்தை இப்பொழுது மாற்றிக்கொண்டேன். நாம் பதிவு செய்ய வேண்டியது ஆசிரியர்களின் கருத்தையல்ல.  அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளான மாணவக் கண்மணிகளின் கருத்தைத்தான் நாம் தேடித்தொகுக்க  வேண்டியுள்ளது. அதைக் காட்டிலும் சிறப்பான ஒரு வழிகாட்டிக் கையேட்டை எந்தக் கொம்பனாலும் தயாரிக்க முடியாது..

பள்ளிக்கூடத்தேர்தல்,ஒவ்வொரு ஆசிரியரும் ஆசிரியப்பயிற்சி மாணவரும் படிக்கவேண்டிய பாதுகாக்க வேண்டிய புத்தகம்! நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரைக்கவேண்டிய புத்தகம்!

இரட்டைக் குவளை முறைக்கு எதிராகப் போராடிய பொன்னுச்சாமி வாத்தியாரும் தன் வகுப்பில் பாடத்தைக் கவனிக்காமல் ஒரு குழந்தை தூங்கினாலும் மனம் வருந்திக் கண்ணீர் விடும் ஆசிரியரும் கண்ணுக்குள் நிற்கின்றனர். பி.டி.ஏ. ஆசிரியராகப் பணிபுரிந்தபோதும் தன்சொந்தப்பணத்தைச் செலவு செய்து பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய அந்த நண்பர் இன்று நிரந்தரப்பணி கிடைத்த பிறகு மாதந்தோறும் தன் சம்பளத்தில் குறுப்பிட்ட தொகையை மாணவர்களுக்காக ஒதுக்குகிறார். நேரில்பார்க்க நெஞ்சம் துடிக்கிறது.

வணக்கம் சொல்லும் குழந்தைகளைத் தோளில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் ஆசிரியர், கண்டிப்புடன் இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர், பெண்டாட்டி மீதான கோபத்தில் மாணவர்களைப் போட்டு அடிக்காத ஆசிரியர், அநீதிகளுக்கு எதிராகப் போராடத் தூண்டிய ஆசிரியர், வெப்பம் அடைதலில் இருந்து புவியைக்காக்க தன்னால் ஆன முயற்சிகளைச் செய்து மாணவர்களையும் தூண்டிய ஆசிரியர், விடுப்பு எடுப்பதற்கு முன் மாணவர்களிடம் அனுமதி வாங்கிய ஆசிரியர் என பலதரப்பினரும் மாணவர்களின் மனம்கவர்ந்த ஆசிரியர்களாய் இன்றும் திகழ்கின்றனர். 

போகிற போக்கில் பேரா.மணி சொல்கிற இந்த வரிகள் மிகவும் ஆழ்ந்து சிந்திக்கவும் விவாதிக்கப்படவும் வேண்டியவை... "மாணவர்கள் விரும்பும் நல்லாசிரியர்கள் தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்தும் பொதுப்புத்தியிலும் பொதுவெளியிலும் ஆசிரியர்களைப் பற்றி உருவாக்கப் பட்டிருக்கும் நீதி நெறிகளை மையமாக வைத்தே தங்களை நல்லாசிரியர்களாக வடித்துக் கொண்டிருக்கிறார்களே அன்றி, அறிவியல் பூர்வமான அணுகுமுறையினால் அல்ல!"

எனவே எவையெல்லாம் மாணவர்களைப் பாதிக்கின்றன, எவையெல்லாம் மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றன என்பதை அறியத்துடிக்கும் ஆசிரிய நண்பர்களுக்கும் மாணவர்/குழந்தைகளின் மனம் கவர்ந்தவர்களாய்த் திகழவிரும்பும் யாவருக்கும் "பள்ளிக்கூடத்தேர்தல்" ஒரு அகராதியாகத் துணைநிற்கும். மாற்றுக்கல்வி குறித்துச் சிந்திக்கும், செயல்படும் அனைத்து நண்பர்களும் படிக்கவேண்டிய... பறைசாற்ற வேண்டிய புத்தகம்! இவ்வரிய புத்தகத்தை நமக்களித்த பேராசிரியர் மணி அவர்களின் தலையில் மணிமகுடம் சூட்டலாம்!
_தேனி சுந்தர்

Dec 13, 2010

டிசம்பர் 13, இரவு வானின் பல வண்ண மத்தாப்பூ .. கொண்டாட்டம்

நண்பர்களே வணக்கம்.
வருடத்தில் 9 முறை விண்கற்கள் பொழிவு
(வானின் வண்ணப்
பட்டாசு கொண்டாட்டம் )
வானில் நடக்கிறது.
இது வால்மீன்கள் விட்டுச் சென்ற
தூசுதான்.
இவை எந்த விண்மீன் படலத்திலிருந்து
தெரிகிறதோ, அந்தப் பெயரை
வைத்து,
அந்த விண்கற்கள் பொழிவை அழைக்கிறோம்.
இன்று தெரியப்போகும்
விண்கற்கள்
பொழிவின் பெயர், ஜெமினியாய்டு விண்கல் பொழிவு.
அனைத்து
விண்கல் பொழிவுகளிலும்
ரொம்பவும், வண்ண மயமாக
காட்சி தரும் விண்கல்
பொழிவு இது.
இவைகளில் 65% வெண்மையாகவும்,
26 % மஞ்சளாகவும்,
மீதி 9 %
சிவப்பு,பச்சை, நீலமாகவும் தெரியும்.
இந்த விண்கல் பொழிவு,
பொதுவாக டிசம்பர் 11 -14 தினங்களில் தெரியும்.
இந்த ஆண்டு, டிசம்பர் 13 ம் நாள்

இரவு, நிறைய, ரொம்ப பிரகாசமாய்,
வானில் வண்ணப் பட்டாசாய் கொட்டும்.
இதனை,
இந்த ஆண்டு, அது தெரியும் நேரத்தில்,
நிலவு மறைந்து விடுவதால்
நாம்
நன்றாக கண்டுகளிக்க முடியும்..
சாதாரணக்கண்களாலேயே..!
வானின் வண்ண
மத்தாப்பு,
ஜெமினி படல விண்மீன்களான
காஸ்டர்,போலக்சிலிருந்து,கண்ணிமைக்கும் நேரத்தில்
வண்ண மயமாக, பல திசைகளுக்கும்

வேகமாகச் சென்று மறையும்.
ஜெமினி விண்மீன்கள்,
ஒரையான்(வேட்டக்காரன்)

விண்மீன் தொகுதியிலிருந்து
வடகிழக்கில் உள்ளது.
இன்று இரவு 10 .30
மணிக்கு
மேல்,வடகிழக்கு வானில், சுமார் 50 டிகிரி
உயரத்தில் தெரியும்.

ஆனால் பின்னிரவில்,சுமார் 2 மணிக்கு
மேல்தான் அதிகமான விண்கற்கள்
கொட்டும்.
நீங்கள் வானின் இந்த வேடிக்கையை,
விடிகாலை வரை பார்த்து
மகிழலாம்.
மணிக்கு 50 விண்கற்கள் எரிந்து விழும்.

_பேரா.சோ.மோகனா

Dec 12, 2010

இளம் விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா

டிசம்பர் 11,2010
கோவை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு கடந்த டிசம்பர் 3,4,5 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லத்தின் மாணவன் சத்தியபிரவீன் தலைமையிலான ஆய்வுக்குழு கலந்து கொண்டது. அம்மாணவர்களுக்கான பாராட்டு விழா வீ.கேன்.பயிற்சி மையத்தில் நடைபெற்றது. பயிற்சி மைய பொறுப்பாளர் திருமிகு.எல்.சுரேந்தர் வரவேற்றார்.வேளாண் அலுவலர் திருமிகு.தெய்வேந்திரன் அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திருமிகு.ஹ.ஸ்ரீராமன் துளிர் இல்ல ஆலோசகர் திருமிகு.பிரகலாதன்,தமிழாசிரியர் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். வழிகாட்டி ஆசிரியர்கள் திருமிகு.க.முத்துக்கண்ணன், திருமிகு.பி.பாஸ்கர் மாநாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். திருமிகு.வி.வெங்கட்ராமன் மற்றும் ராஜசேகர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். திருமிகு.ரேணுகா நன்றி கூறினார்.

Dec 9, 2010

NCSC மாநில மாநாட்டில் பங்கேற்பு

கோவை மாவட்டம் கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் டிசம்பர் 3,4,5 தேதிகளில் மாநில அளவிலான 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் தேனி மாவட்ட மாநாட்டில் தேர்வுசெய்யப்பட்ட  ஆண்டிபட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேனி மேரிமாதா மற்றும் கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் கோம்பை எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி மற்றும் கூடலூர் விக்ரம்சாராபாய் துளிர் இல்லத்தைச் சேர்ந்த ஆறு ஆய்வுக்குழுக்கள் [28 குழந்தைகள், 8ஆசிரியர்கள்] கலந்துகொண்டன.
 
நமது மாவட்டச்செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு.க.முத்துக்கண்ணன் திருமிகு.பி.பாஸ்கர் ஆகியோர் கருத்தாளர்களாகக் கலந்து கொண்டனர். நமது மாவட்டத்திலிருந்து கோம்பை எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானி விருதிற்குத் தேர்வுசெய்யப்பட்டனர். தேசிய அளவிலான மாநாடு டிசம்பர் 27 முதல் 31 வரை சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல்கலாம் நோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அறிஞர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு : கோவையில் நாளை துவக்கம்

தினமலர்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2010,02:23 IST
கோவை :
மாநில அளவிலான, 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, கோவையில் நாளை துவங்குகிறது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், அறிவியல் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் நடராஜன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவால் இணைந்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இப்பணிகளை ஒருங்கிணைக்கிறது.

இந்த ஆண்டுக்கான மாநில மாநாடு, கோவை அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் வரும் 3, 4, 5 தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் கருப்பொருள், "நிலவளம்-வளமைக்காக பயன்படுத்துவோம்; வரும் தலைமுறைக்காகவும் பாதுகாப்போம்' என்பதாகும்.

தமிழகம் முழுவதும் இருந்து வரும் 2,000 ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 160 முதல் 200 ஆய்வுக் கட்டுரைகள், மாநில மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. 1,200 மாணவர்கள், 200 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். 13 அரங்குகளில் சமர்ப்பிக்கப்படும் 30 ஆய்வுகள், தேசிய மாநாட்டுக்காக தேர்வு செய்யப்படும்.

மாநாட்டில் பங்கேற்கும் அறிவியலாளர்கள், சாதனையாளர்களுடன் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். எளிய அறிவியல் பரிசோதனைகள், கணித விளையாட்டுக்கள், அறிவியல் போஸ்டர் கண்காட்சி, அறிவியல் விளையாட்டுக்களும் உண்டு.

ஊரக தொழில் துறை அமைச்சர் பழனிச்சாமி, கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத், கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலை துணைவேந்தர் கருணாகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலர் பேராசிரியர் மணி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இவ்வாறு, நடராஜன் தெரிவித்தார்.

நிலவளத்தில் வெட்டி வேரின் பங்கு: மாணவர் ஆய்வு கட்டுரை தேர்வு

கம்பம் :தினமலர்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2010

இளம் விஞ்ஞானிகளுக்கான
ஆய்வு கட்டுரை போட்டியில்
கோம்பை பள்ளி மாணவர்கள்
ஆய்வு தேர்வு செய்யப்பட்டது.
அறிவியல் இயக்கம் சார்பில்
ஒவ்வொரு ஆண்டும்
இளம் விஞ்ஞானிகள் ஆய்வு கட்டுரை
போட்டி நடத்தப்படும்.
கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு,
அகில இந்திய அறிவியல் மாநாட்டில்
சமர்ப்பிக்கப்படும்.
அங்கு தேர்வு செய்யப்படும்
ஆய்வு கட்டுரைகளுக்கு,
சம்பந்தப்பட்டவர்களுக்கு இளம் விஞ்ஞானி
என்ற விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டிற்கான
ஆய்வு கட்டுரை போட்டி
கோவை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில்
நடந்தது.
தேனி மாவட்டம் கோம்பை கன்னிகாபரமேஸ்வரி
மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்லத்துரை
சமர்ப்பித்த "நிலவளத்தில் வெட்டி வேரின் பங்கு'
என்ற கட்டுரை தேர்வு செய்யப்பட்டது.
9 ம் வகுப்பு மாணவர்கள் செல்லத்துரை
தலைமையில் மகேந்திரன், வசந்த்,
காவேரி, அஜித்குமார் ஆகியோர்
கொண்ட மாணவர்கள் குழு தயாரித்துள்ளது.

Dec 6, 2010

அறிவியல் மாநாட்டு தலைப்பு அறிவியல் இயக்கம் அறிவிப்பு

கம்பம் :தினமலர்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010

இளைஞர் அறிவியல் மாநாட்டிற்கான
தலைப்புகளை தேனி மாவட்ட
அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பு:
இவ்வியக்க அறிவியல் மாநாடு
பிப். 28ல் மதுரையில் நடக்கிறது.
இதில் இயற்கை, அறிவியல் மற்றும் சமூகம்
ஆகிய பொது தலைப்பில்
ஆய்வுகள் சமர்ப்பிக்கலாம்.
அறிவியல் தொழில்நுட்ப
வளர்ச்சியின் விளைவுகள்,
மக்கள் வாழ்வும், மூட நம்பிக்கைகளும்
- அதற்கான தீர்வுகளும்,
அறிவியல் பரப்புதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு,
பெண்கள் மேம்பாடு,
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்,
ஊரக மேம்பாடு, நகர மயமாதல் மற்றும்
தொழில் மயமாதல் ஆகியவை துணை தலைப்புகளாகும்.

17 முதல் 30 வயதிற்குட்பட்ட
கலை, அறிவியல், பொறியியல்,
மருத்துவம் உட்பட
அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.
ஒவ்வொரு ஆய்வும் 2 முதல் 4 மாணவர்கள்
குழுவாக இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
பேராசிரியர், ஆசிரியர், அறிவியல் ஆர்வலர்
ஒருவரை வழிகாட்டியாக கொண்டிருக்க வேண்டும்.
தமிழ் அல்லது ஆங்கில மொழியில் சமர்ப்பிக்கலாம்.
ஆய்வு சுருக்கங்களை டிச. 24க்குள்ளும்,
முழுமையான ஆய்வுகளை ஜன.12க்குள்ளும்
தேனி மாவட்ட அறிவியல் இயக்கத்திற்கு
அனுப்ப வேண்டும்.
இவ்வாறு இவ்வியக்க செயலாளர் சுந்தர்
தெரிவித்துள்ளார்.(மொபைல் எண்-94880 11128)

Nov 30, 2010

மாநில அளவிலான தேசியகுழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான அறிவிப்புகள்

நவம்பர் 29,2010

அன்புடையீர் வணக்கம்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பக
நடைபெற்ற மாவட்ட அளவிலான
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்
பரிந்துரைக்கப்பட்டு மாநில அளவிலான
மாநாட்டில் சிறப்பாக ஆய்வு கட்டுரை
சமர்பிக்க வாழ்த்துக்கள்,
மாநிலமாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ள
ஆய்வுகளுக்கான முன்மதிப்பீடு
ஏற்கனவே திட்டமிட்டபடி
20 மற்றும் 21 நவம்பர் தேதிகளில்
கோவை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில்
நடைபெற்று முடிந்துள்ளது.

மாநில மாநாடு 3, 4, 5 டிசம்பர் 2010 ல்
கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில்
ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும்.

மாநாட்டிற்கான வரைவு திட்டம் வருமாறு-
முதல் நாள்: 
டிசம்பர் 3 - பிற்பகல் 3 மணிமுதல் 5 மணி வரை பதிவு
7.00 - 9.00 விஞ்ஞானிகள் சந்திப்பு. 1
9.00 மணி இரவு உணவு.

இரண்டம் நாள்:
டிசம்பர் 4 - 9.00 மணிக்கு
18 ஆவது ஆண்டை குறிக்கும்
வகையில் கல்லூரியின் 18 இடங்களில்
18 மரங்கள் நடும் விழா குழந்தைகள்
மாவட்ட வாரியாக ஊர்வலமாகச்
சென்று மரங்கள் நடவேண்டும்.
(இதற்கானதிட்டம் முந்தைய நாள் இரவு பகிர்ந்துகொள்ளப்ப்படும்.)

காலை 10.00 - 12.00 துவக்க விழா
12.00 - 2.00 மதிய உணவு
2.00 - 5.00 ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் (12 அறைகளில் )
5.00 - 7.00 விஞ்ஞானிகளை சந்தியுங்கள் 2 (மூன்று அரங்கங்கள்)
7.00 - 9.00 கலை நிகழ்ச்சிகள்
9.00 ­- 10.00 இரவு உணவு
10.00 – 12.00 மேகமூட்டம் இல்லாத நிலையில் இரவு வான் நோக்கல்
அல்லது குழந்தைகளுக்கான திரைப்படம்

மூன்றாம் நாள்:
டிசம்பர் 5 - காலை 9.முதல் 12.00 மணி வரை
குழந்தைகளுக்கான 10 வெவ்வேறு இணைஅமர்வுகள்
ஒருங்கிணைப்பு:- திருமிகு அ.அமலராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்.
கல்வி உரிமை சட்டம் மீதான ஆசிரியர்களுக்கான பணிமனை
(இணை & தொகுப்பு அமர்வுகள்)
ஒருங்கிணைப்பு:- திரு சா.சுப்பிரமணி, மாநில செயலாளர்.

மாநாட்டில் கலந்துகொள்ள இதுவரை ஒப்புதல் அளித்துள்ள பிரமுகர்கள் விவரம்
1. முனைவர். D.K பாண்டே , மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, இந்திய அரசு,

2. முனைவர். வின்சென்ட் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தமிழ்நாடு,

3. முனைவர். ஆர். இராமானுஜம், விஞ்ஞானி, கணிதவியல் நிறுவனம், சென்னை,

4. முனைவர். இந்துமதி, விஞ்ஞானி, கணிதவியல் நிறுவனம் சென்னை,

5. பேரா. மாரிமுத்து, தலைவர், உயிரினங்களின் செயல்பாடுகள் துறை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,

6. முனைவர். த.வி. வெங்கடேஸ்வரன், முதன்மை அறிவியல் அலுவலர்,

விஞ்ஞான் பிரசார், புதுடில்லி.

7. முனைவர். கே. கருணாகரன், துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், கோவை.
( தலைவர், ஆலோசகர் குழு, 18 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தமிழ்நாடு )

8. முனைவர். ச. கிருஷ்ணசாமி, தலைவர், உயிர் தொழில்நுட்பத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

இதுதவிர குழந்தை விஞ்ஞானிகளை மதிப்பீடு செய்ய 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் , விஞ்ஞானிகள் வருகை புரிய உள்ளனர்.

வருகை புரிய வாய்ப்புள்ள முக்கிய விருந்தினர்கள்
1. விஞ்ஞானி. அப்துல்கலாம், முன்னாள் ஜனாதிபதி.
2. முனைவர். டி. ராமஸ்வாமி. ஐ.ஏ.எஸ். செயலர், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை.
3. திரு தேவ. ஜோதி. ஜெகராஜன் .ஐ,ஏ,எஸ். முதன்மைச் செயலர், கல்வித்துறை, தமிழ்நாடு.

மாநாடு நடைபெறும் இடம் கோவையிலிருந்து
சுமார் 20 கிமி தொலைவில் அமைந்துள்ளது.
எனவே கோவை ரயில் நிலையம் மற்றும்
பேருந்து நிலையத்திலிருந்து அழைத்து
செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
எனவே 3 ஆம் தேதி பிற்பகல் கோவையை
அடையுமாறு தங்கள் பயணத் திட்டத்தினை
வகுத்துகொள்ளவும்.

கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி அடைவதற்கான வழிகள்

(K.P.R. Institute of Engineering and Technology, S.F.No.204/2 Kollupalayam Village, Arasur, Coimbatore - 641 407, Phone No: 0422 2635600, web site: http://www.kpriet.com/ )
பேருந்தில் வருபவர்கள் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சோமனூர் செல்லும் 20 ஏ பேருந்தில் ஏறி எல்.எம்.டபுள்யூ. எல்.பி.டி நிறுத்தத்தில் இறங்கவும்.
அவினாசி வழியாக வருபவர்கள் கருமத்தம்பட்டியில் இறங்கி, நகரபேருந்தில் ஏறி கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி எல்.எம்.டபுள்யூ. எல்.பி.டி நிறுத்தத்தில் இறங்கி வரவும்.
இரயில் நிலையம் மற்றும் உக்கடம் வழியாக வருபவர்கள் 90, 90 ஏ மற்றும் கருமத்தம்பட்டி , சோமனூர் பேருந்தில் ஏறி வரவும்.

குறிப்பு : மாநாட்டிற்கு எடுத்து செல்ல வேண்டியவைகளில் முக்கியமான சில -
1) தங்கள் ஆய்வுக்கட்டுரை புத்தகம் (Project Book),
2) தினசரி நாட்குறிப்பு (log book),
3) இருபக்கம் மிகாமல் ஆய்வு சுருக்கம் (Abstract) ஆங்கிலத்தில்,
4) ஐந்து பக்கம் மிகாமல் ஆய்வு பெருக்கம் (Abridged version) ஆங்கிலத்தில்,
4) மூன்று எண்ணிக்கைக்கு மிகாமல் அட்டை (chart)
5) ஐந்து எண்ணிக்கைக்கு மிகாமல் ஆய்வை விளக்க புகைப்படம் (Photo),
5) ஆய்வை விளக்க செயல்படும் நிலையில் உள்ள ஆய்வு மாதிரி (Working Model),
6) புள்ளிவிபரம்/கணக்கெடுப்பு /நேர்காணல் கண்ட தாள்கள்….
மேலும் தங்கள் இது

Nov 29, 2010

இளைஞர் அறிவியல் மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் நடைபெறுகிறது .மாணவ ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்ளலாம்

தினத்தந்தி
கம்பம்,நவம்பர் 29

இளைஞர் அறிவியல்
மாநாடு_2010-2011
அடுத்த ஆண்டு பிப்ரவரி
மாதம் 28_ந் தேதி மதுரையில்
நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில்
ஆராய்ச்சியாளர்களாக
உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்
என்று
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
தெரிவித்துள்ளது.

இளைஞர் அறிவியல் மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
ஒருங்கிணைப்பில்
2-வது இளைஞர் அறிவியல் மாநாடு
அடுத்த ஆண்டு(2011) பிப்ரவரி
மாதம் 28_ந் தேதி மதுரையில்
நடைபெறுகிறது.

இளைஞர்களின் படைப்பாற்றல்
மற்றும் திறமைகளை
வெளிக்கொண்டு வரும்
நோக்கத்தில் இந்த மாநாடு
நடத்தப்படுகிறது.

சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு
அறிவியல் அடிப்படையிலான
தீர்வுகளை முன்வைக்கும்
இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது,
பிரச்சினைகளை அறிவியல் பார்வையுடன்
உற்றுநோக்கச் செய்வது,
களச்செயல்பாடு, ஆய்வு
,சோதனைகளின் அடிப்படையில்
நடைமுறை சாத்தியமான
புதிய மாற்றுக்களை உருவாக்குவது
போன்றவையும் மாநாட்டு நோக்கமாக உள்ளது.

ஆய்வுத்தலைப்பு
இயற்கை,அறிவியல் மற்றும் சமூகம்,
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவுகள்,
மக்கள் வாழ்வும் மூடநம்பிக்கைகளும்-
அதன் தீர்வுகளும் ,அறிவியலைப் பரப்புதல்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
பெண்கள் மேம்பாடு,
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்,
ஊரக மேம்பாடு,
நகரமயமாதல், தொழில்மயமாதல்
ஆகியவைகள் துணை தலைப்புகளாக
அறிவிக்கப் பட்டு உள்ளது.

இந்த மாநாட்டில்
17 வயது முதல் 30 வயது வரையிலான
கலை,அறிவியல்,பொறியியல்,
தொழிற்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட
அனைத்துத்துறை மாணவர்களும்
கலந்துகொள்ளலாம்.
உயர்கல்வி தொடர முடியாத
ஆர்வமுள்ள இளைஞர்களும்
இதில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

ஒவ்வொரு ஆய்வும்
2 முதல் 4 மாணவர்கள் -இளைஞர்கள்
குழுவாக இணைந்து மேற்கொள்ள வேண்டும்
. பேராசிரியர்,ஆசிரியர் அல்லது
அறிவியல் ஆர்வலர் ஒருவரை
வழிகாட்டியாகக் கொண்டிருக்கவேண்டும்.

ஆய்வுகள் புதியதாக, எளிமையாக,
நடைமுறைக்கு உகந்ததாகவும்
அன்றாட வாழ்வியல் நடைமுறை சார்ந்ததாகவும்
அறிவியல் அணுகுமுறைகளோடு
தொடர்செயல்பாடுகளைக் கொண்டதாகவும்
ஆய்வுகள் இருக்கவேண்டும்.

மாநில விருது:
ஒவ்வொரு துறையிலிருந்தும்
50 ஆய்வுகள் மாநில மாநாட்டிற்கு
தேர்வு செய்யப்படும்.
அதிலிருந்து துறைவாரியாக
10 ஆய்வுகள் மாநில விருதிற்கு
தேர்வு செய்யப்படும்.
பங்கேற்கும் அனைவருக்கும்
சான்றிதழ் வழங்கப்படும்.
சிறந்த ஆய்வுகளின் தொகுப்பு
புத்தகமாக மாநில மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.
ஆய்வு சுருக்கங்களை
அடுத்த மாதம்(டிசம்பர்) 24ந் தேதிக்குள்
அனுப்பவேண்டும்.
முழுமையான ஆய்வு சுருக்கங்களை
அடுத்த ஆண்டு (2011)
ஜனவரி மாதம் 12ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு
தே.சுந்தர், மாவட்டச்செயலாளர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
அரசினர் கள்ளர் நடுநிலைப்பள்ளி,
சுருளிப்பட்டி, தேனிமாவட்டம்
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற இளைஞர் அறிவியல்
மாநாட்டில் கம்பம் ஆதிசுஞ்சனகிரி
மகளிர் கல்லூரி மாணவி மேற்கொண்ட ஆய்வு
மாநிலத்தில் முதலிடம்
பெற்றது குறிப்பிடத்தக்கது.

Nov 25, 2010

அன்றொரு நாள் 3

அன்று
குட்டீஸ்களுக்கு
சூழ்நிலையியல் பாடம்
நடத்திக் கொண்டிருந்தேன்.
பாடத்தின் தலைப்பு
கவிதாவின் குடும்பம்.

பாடத்தின் நோக்கம்
குழந்தைகளுக்கு
அம்மா,அப்பா,
தாத்தா,பாட்டி,
அக்காள்,அண்ணன்,
தங்கை போன்ற குடும்ப உறவுகளை அறிமுகப் படுத்துவதுதான்.

அதற்காக
அழகழகாய் ஏழெட்டு
படங்களைத் தீட்டியுள்ளனர்.
அவை தொடர்பான
கேள்விகளுக்கு
விடையாய்
அம்மா,அப்பா..
என வரிசையாகக்
குடும்ப உறவுகளைக்
குழந்தைகள் கூறுவார்கள்.
அதன் மூலம் பாடத்திறனை எளிதில் அடையச்செய்யலாம்
என்பது பாடத்திட்ட
வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.
நம்முடையதும் கூட.!

ஆனால் நடந்தது என்ன?
நான் கேட்டேன்..
உங்க வீட்டுல கோலம்
போடுவது யார்?
குழந்தைகள் கோரஸாகச்
சொன்னார்கள்: 'அம்மா'!

அடுத்த கேள்வி.
சமைப்பது யார்?
அம்மா...

பாத்திரங்களைக் கழுவுவது யார்?
அம்மா...

வீட்டில் தண்ணீர் பிடிப்பது? அம்மா...

காய்கறிகள் வாங்கி
வருவது? அம்மா...

காய்கறிகளை நறுக்குவது? அம்மா...

வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்வது? அம்மா...

அழுக்குத்துணிகளைத்
துவைப்பது? அம்மா...

குளிக்க வைப்பது? அம்மா...

இப்படி எல்லாக் கேள்விகளுக்கும்
அம்மா அம்மா அம்மாதான்..!
அவர்களின் பதில்கள்

முற்றுப்புள்ளிகளாய்
அல்லாமல்
அடுத்தடுத்து
பல கேள்விகளை
எழுப்புகிறது.

இன்னுமொரு
கொடுமை என்னவென்றால்..
உங்க வீட்டுல யார் கதை
சொல்வதெனக் கேட்டபோது
வகுப்பறையில் ஒரு
நீண்ண்ண்ண்ட மெளனம்!

முன்பு
நாங்கள் சிறுவயதினராய் இருந்தபோதெல்லாம்
இருட்டிவிட்டால் போதும்
சாப்பிட்டு முடித்ததும்
பாய்,தலகாணிகளோடு
தெருவுக்கு வந்துவிடுவோம்.

எங்கள் வீடு முக்குவீடு.
நான்கு தெருவுகள் சந்திக்கும் இடம்.
பாட்டிகளின் மீட்டிங் அடிக்கடி நடக்கும்.
இரண்டு மூன்று பாய்களை
வரிசையாக விரித்துக் காத்திருப்போம்.
வீட்டு வேலைகளை
முடித்துவிட்டு
கருப்பாயி ஆத்தா
சின்னத்தாயி ஆத்தா
அமராவதி ஆத்தா
என ஒவ்வொருத்தராய்
வருவார்கள்.
பாக்யராஜ்
பாரதிராஜா
மணிரத்னமெல்லாம்
மண்டியிட வேண்டும்.
அவ்வளவு நேர்த்தியாகக்
கதை சொல்லுவார்கள்.
கதைகளென்றால்
கற்பனைக்கதையெல்லாம்
கிடையாது.
விறகுக்குப் போன கதை
புல்லறுக்கப் போன கதை
தண்ணிக்குப் போன கதை
திருவிழாவுக்குப் போன கதை
என எல்லாக்கதைகளுமே
அவர்களது வாழ்க்கை
நிகழ்வுகள்தான்.
அதில்
அங்கங்கே கொஞ்சம்
பிட்டுகளைச் சேர்த்து
புனைவுகளோடு
சொல்வார்கள்.
நகைச்சுவைகளைக்
கேட்டு
வயிறு வலிக்கச் சிரித்ததுமுண்டு.
த்ரில்லிங்கான
பேய்க்கதைகளைக் கேட்டு
பயந்து அழுததுண்டு.
அந்த கதைமாந்தர்களை
கதை நிகழ்வுகளை எண்ணி
கண்களை இறுக்கி மூடி
போர்வையை இழுத்துப்போர்த்தி
பயத்தோடு படுத்த நாட்கள் நிறைய உண்டு.

இன்று
டி.வி. என்னும் குட்டிப்பிசாசு வந்தபிறகு அன்றாட வாழ்வின் பல
அற்புத தருணங்கள்
இல்லாமல் போய்விட்டன.
கதைகளைத் தொலைத்த
கிராமங்களின் நிலை
நம்மைக் கலங்க வைக்கிறது.


விஷயத்திற்கு
வருவோம்!
நம்முன்
தனித்துக்கிடக்கும்
குடும்பங்களில்
என்ன சொல்லி மற்ற உறவுகளை அறிமுகப்படுத்துவது!?

சரி,
நீங்களாவது
சொல்லுங்களேன்..
_சுதேசு

Nov 21, 2010

அறிவியல் திறனறிதல் போட்டி

தினகரன்
கம்பம்_நவம்பர்,19

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக கம்பம்
நகரில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு
2010ம் ஆண்டிற்கான திறனறிதல் போட்டி
அரசு பெண்கள்
மேல்நிலைப் பள்ளியில்
நடந்தது.
6முதல் 8ம் வகுப்பு வரை
உள்ள மாணவ மாணவிகள்
இளநிலை என்றும்
9 முதல் 12ம் வகுப்பு வரை
உள்ள மாணவ மாணவிகள் மேல்நிலை என்றும் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

கூடலூர் மழலையர்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
வ.உ.சி.நடுநிலைப்பள்ளி,
விக்ரம் சாராபாய் துளிர் இல்லம்,
காமயகவுண்டன்பட்டி
கஸ்தூரிபாய் பெண்கள்
மேல்நிலைப்பள்ளி,
உத்தமபாளையம்
பாத்துமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
கம்பம் முத்தையாபிள்ளை
உயர்நிலைப்பள்ளி.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய
பள்ளிகளில் இருந்து
150க்கும் மேற்பட்ட
மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
எழுத்து தேர்வில்
120 நிமிடத்தில் 100 கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் 75 சதவீத
மதிப்பெண் பெறும்
அனைவரும் அறிவியல்
சுற்றுலாவில் பங்கேற்கும் வாய்ப்பு
அளிக்கப்பட உள்ளது.
இப்போட்டியில்
அறிவியல் இயக்க
ஆர்வலர்கள் முத்துக்கண்ணன்,
வெங்கட்ராமன்,
அறிவழகன்,
ஈஸ்வரன்,அருண்பிரசன்னா,
முத்துலட்சுமி ஆகியோர்
மேற்பார்வையாளர்களாக
பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர் செய்திருந்தார்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தினமலர்
உத்தமபாளையம்,நவ.20

தமிழ்நாடு அறிவியல்
இயக்கம் சார்பில்
மாவட்ட அளவிலான
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
உத்தமபாளையம்
கருத்தராவுத்தர் கல்லூரியில் நடந்தது.

மாவட்டத்தலைவர்
செந்தில் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சுந்தர் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர்(பொ)
அமானுல்லா மாநாட்டை துவக்கி வைத்தார்.
குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சுந்தர் அறிமுக உரையாற்றினார்.

மாவட்டம் முழுவதிலிருந்தும்
ஏராளமான மாணவர்கள்
60 குழுக்களாக பல்வேறு
தலைப்புகளில்
ஆய்வுகளை சமர்ப்பித்தனர்.
ஆறு குழுக்கள் மாநில
மாநாட்டிற்கு தேர்வு
செய்யப்பட்டன.

தேர்வான குழுக்களுக்கு
ஆர்.டி.ஓ., ராஜேந்திரன்
சான்றிதழ்கள் வழங்கினார்.
மருத்துவ துறையில்
நானோ தொழில் நுட்பம்
என்ற தலைப்பில் விஞ்ஞானிகள் சந்திப்பு
நடந்தது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் விஞ்ஞானி
முருகபூபதி கருத்துரை
வழங்கினார்.
ஆய்வு ஒருங்கிணைப்பாளர்
கண்ணன் தேர்வான ஆய்வு முடிவுகளை
அறிவித்தார்.
நிறைவு விழா
மாவட்ட துணைத்தலைவர்
செல்வராஜ் தலைமையில்
நடந்தது.

துளிர் அறிவியல் மைய
இயக்குனர் தியாகராஜன்,
இணைச்செயலாளர் ராஜமாணிக்கம் பேசினர்.
மாவட்ட செயற்குழு
உறுப்பினர் முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.
தினகரன்
கம்பம்_நவம்பர்,19

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக கம்பம்
நகரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
2010ம் ஆண்டிற்கான திறனறிதல் போட்டி
அரசு பெண்கள்
மேல்நிலைப் பள்ளியில்
நடந்தது.
6முதல் 8ம் வகுப்பு வரை
உள்ள மாணவ மாணவிகள்
இளநிலை என்றும்
9 முதல் 12ம் வகுப்பு வரை
உள்ள மாணவ மாணவிகள் மேல்நிலை என்றும் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.

கூடலூர் மழலையர்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
வ.உ.சி.நடுநிலைப்பள்ளி,
விக்ரம் சாராபாய் துளிர் இல்லம்,
காமயகவுண்டன்பட்டி
கஸ்தூரிபாய் பெண்கள்
மேல்நிலைப்பள்ளி,
உத்தமபாளையம்
பாத்துமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
கம்பம் முத்தையாபிள்ளை
உயர்நிலைப்பள்ளி.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய
பள்ளிகளில் இருந்து
150க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
எழுத்து தேர்வில்
120 நிமிடத்தில் 100 கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் 75 சதவீத
மதிப்பெண் பெறும்
அனைவரும் அறிவியல்
சுற்றுலாவில் பங்கேற்கும் வாய்ப்பு
அளிக்கப்பட உள்ளது.
இப்போட்டியில்
அறிவியல் இயக்க
ஆர்வலர்கள் முத்துக்கண்ணன்,
வெங்கட்ராமன்,
அறிவழகன், ஈஸ்வரன், அருண்பிரசன்னா,
முத்துலட்சுமி ஆகியோர்
மேற்பார்வையாளர்களாக
பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர் செய்திருந்தார்.

Nov 19, 2010

அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டி

 தினமணி
 கம்பம், நவ. 18:÷
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
சார்பில் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் 
திறனறிதல் போட்டி,
கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
திங்கள்கிழமை நடைபெற்றது.÷
இப் போட்டியில்
கூடலூர் மழலையர் மெட்ரிக். பள்ளி, 
வ.உ.சி நடுநிலைப் பள்ளி, 
விக்ரம் சாரா பாய் துளிர் இல்லம், 
காமயகவுண்டன்பட்டி
கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,
உத்தமபாளையம் பாத்துமா பெண்கள் உயர்நிலைப் பள்ளி, 
கம்பம் முத்தையா பிள்ளை உயர்நிலைப் பள்ளி
மற்றும் 
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச்
சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.÷
மாவட்ட செயலாளர் தே. சுந்தர் கூறியதாவது:÷
துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் 
தேர்வைக் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
தேர்வில் 75 சதவீத மதிப்பெண்களைப் 
பெற்ற மாணவர்களுக்கு 
அறிவியல் சுற்றுலாவில் 
கலந்து கொள்ள வாய்ப்பு அளிப்பதுடன்,
மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில்
பங்கேற்கவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.÷
போட்டிக்கான ஏற்பாடுகளை
மாவட்ட செயலாளர் தே. சுந்தர் தலைமையில் 
அறிவியல் ஆர்வலர்கள் க.முத்துக்கண்ணன், 
வி.வெங்கட்ராமன், ஆர்.அறிவழகன், 
முத்துலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

Nov 17, 2010

துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா

மதுரை
ஜூலை 10, 11-ல் துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா

First Published : 07 Jul 2010 10:29:15 AM IST


மதுரை, ஜூலை 6:   மதுரையில் ஜூலை 10, 11 தேதிகளில் பள்ளிக் குழந்தைகளுக்கான துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைபெற உள்ளது.  இதுகுறித்து அமெரிக்கன் கல்லூரி முதல்வர் டி.சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரித் தொழில் நுட்பத் துறை பேராசிரியர் கிருஷ்ணசாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூறியது:  துளிர் இல்லம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அமெரிக்கன் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த அறிவியல் திருவிழாவை நடத்துகின்றன. ஊராட்சி ஒன்றியப் பள்ளிக் குழந்தைகளும், மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளும் அறிவியலை எளிமையாகக் கற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த விழா நடத்தப்படுகிறது.  அறிவியல் விழாவின்போது மதுரை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவியரும், தேனி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 200 பேரும் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவை அமெரிக்கன் கல்லூரி உணவு விடுதி மூலம் அளிக்கப்படுகிறது.  அறிவியலில் உள்ள தற்கால தொழில் நுட்பங்களான நியூட்ரினோ, உயிரித் தொழில் நுட்பம், பல்லுயிரியம் மற்றும் காலநிலை மாறுபாடு குறித்த தலைப்புகளை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  10-ம் தேதி இரவு விண்வெளி குறித்த தகவல்களையும், வானில் தெரியும் கிரகங்களையும் மாணவர்கள் கண்டுகளிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் தொடங்கி வைக்க உள்ளார்.  சென்னை கணித அறிவியல் மையத்தைச் சேர்ந்த இந்துமதி, பேராசிரியர் கி.முத்துச்செழியன், தொழிலதிபர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.   நிறைவு விழாவில் ஹைடெக் அராய் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.டி.பங்கேரா, குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறார் என்று தெரிவித்தனர்.  பேட்டியின்போது, ஹைடெக் அராய் நிறுவனத்தின் சி.வி.சிதம்பரம், துளிர் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

கொசுவை விரட்ட வேப்பங்கொட்டையில் இருந்து மூலிகை

கூடலூர் :
  Friday 29 Jan 2010 | 


கொசுவை விரட்ட வேப்பங்கொட்டையில் இருந்து மூலிகை மருந்து தயாரித்த கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி மாணவிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் எம்.பில்., பயோகெமிஸ்ட்ரி படிக்கும் மாணவி கிருஷ்ணவேணி. கொசுவை விரட்ட இயற்கை மூலிகை மூலம் மருந்து தயாரிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டார். கல்லூரி ஆய்வுக்கூடத்தில் வேப்பங்கொட்டைகள் மூலம் கொசுவை விரட்ட மூலிகை மருந்தை இம்மாணவி கண்டுபிடித்தார். அண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஈரோட்டில் நடந்த முதலாவது இளைஞர் அறிவியல் விழாவில், கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முதல் பரிசு கிடைத்தது. சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. கிருஷ்ணவேணிக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது.

அறிவியல் திறனறிதல் போட்டி

பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2010
தினமலர்கம்பம் :
துளிர் அறிவியல் திறனறிதல் போட்டிகள்
கம்பத்தில் நடந்தது.
தேனி மாவட்ட அறிவியல் இயக்கம்
சார்பில் துளிர் அறிவியல் போட்டிகள்
ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
6 முதல் 8 ம் வகுப்பு வரை இளநிலை என்றும்,
9 முதல் 12 ம் வகுப்பு வரை முதுநிலை என்றும்
தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகிறது.
  100 நிமிடங்களில் 120 வினாக்களுக்கு
பதிலளிக்கும் வகையில் இந்த அறிவியல்
தேர்வு நடந்தது.
கம்பத்தில் நடந்த தேர்வில்
பல பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான
மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தேர்வில் அறிவியல் இயக்க ஆர்வலர்கள்
முத்துக்கண்ணன், வெங்கட்ராமன்,
அறிவழகன், ஈஸ்வரன், முத்துலட்சுமி
உள்ளிட்ட பலர் மேற்பார்வையாளர்களாக பணியாற்றினர்
. இந்த தேர்வில்
75 மதிப்பெண்கள் வாங்கும்
மாணவ மாணவிகளுக்கு
அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கும்
வாய்ப்பு வழங்கப்படும்
என்று
அறிவியல் இயக்க
மாவட்ட செயலாளர் சுந்தர் தெரிவித்தார்.

Nov 16, 2010

தேசிய புத்தக வாரம்: கருத்தரங்கம் & கண்காட்சி

தேனி,கைலாசபட்டி திரவியம் கல்வியியல் கல்லூரி:
2010 நவம்பர் 16 செவ்வாய்க்கிழமையன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேனி,கைலாசபட்டி திரவியம் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம் மற்றும் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது.திரவியம் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் திருமிகு.ஆர்.அழகுகணேசன் தலைமையேற்றுத் துவக்கிவைத்தார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் வரவேற்று புத்தக வாசிப்பு பற்றிய அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கருத்தாளர் முனைவர்.எஸ்.கண்ணன் (HKRH கல்லூரி, உத்தமபாளையம்) வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் வாசிப்பின் முக்கியத்துவம் வாசிப்பின் நுணுக்கம் மற்றும் பல்வேறு முறைகள் பற்றி கருத்துரையாற்றினார். மதுரை துளிர் அறிவியல் மைய இயக்குநர் திருமிகு.மு.தியாகராஜன் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான எளிய அறிவியல் பரிசோதனைகளைச் செய்துகாட்டினார். திருமிகு.ஆர்.ஆறுமுகம் திருமிகு.பிரபாகரன் உட்பட கல்லூரியின் விரிவுரையாளர்கள் மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்த நிர்வாகத்தினர் மற்றும் கருத்தாளர்களுக்கு திருமிகு.வி.வெங்கட்ராமன் நன்றி கூறினார்.

தேனி_அன்னஞ்சி
அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி:
நவம்பர் 19 வெள்ளிக்கிழமையன்று தேனி_அன்னஞ்சி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. முதன்முதலாக பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு பலவித வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவியல் இயக்கப் புத்தகங்களை ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர். மிகவும் பின்தங்கிய ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் நமது எதிர்பார்ப்புகளை விடகூடுதலாகவே புத்தகங்களை ஆர்வமாக வாங்கிச் சென்றனர். கண்காட்சி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க  மாவட்டத் தலைவர் திருமிகு. பா.செந்தில்குமரன் மாவட்டச் செயலாளர் திருமிகு.தே.சுந்தர் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு. ப.மோகன் குமாரமங்கலம் ஆகியோர் செய்திருந்தனர்.

Nov 14, 2010

18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2010

2010 நவம்பர் 12,வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உத்தமபாளையம் HKRH கல்லூரியில் 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தேனி மாவட்ட அளவில் நடைபெற்றது.


துவக்க விழா:
துவக்க விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் திருமிகு.பா.செந்தில் குமரன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் திருமிகு.தே.சுந்தர் வரவேற்றுப் பேசினார்.
ஆய்வறிக்கை சமர்ப்பித்தல்:

அரசு,தனியார்,மெட்ரிக் பள்ளி மாணவர்களும், குழந்தைத்தொழிலாளர் சிறப்புப்பள்ளி, எஸ்.எஸ்.எ. இணைப்புப்பள்ளி மற்றும் துளிர் இல்லங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் தமிழ்_இளையோர், மூத்தோர் ஆங்கிலம்_இளையோர், மூத்தோர் என நான்கு பிரிவுகளில் 48 ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர். பேரா.எஸ்.இராமநாதன், பேரா.கே.ஜெயபாலன்,தேனி வேளாண் அலுவலர் திருமிகு. என்.ராஜ்மனோகரன், சின்னமனூர் வேளாண் உதவி இயக்குநர் திருமிகு.எச்.சையது முகமது நஹீப், முனைவர்.மு.முகமது செரீப், பேரா.டி.கே.திருமலைச்சாமி, பேரா.ஆர்.பாண்டி,பேரா.எம்.சார்லஸ் ராபர்ட், முனைவர்.சி.கோபி, முனைவர்.எம்.அப்துல் காதர் ஜெய்லானி, பேரா.பி.பொற்கொடி, பேரா.ஜெ.கிருஷ்ணவேணி, பேரா.ஜெ.சுரேகா, திருமிகு.எம்.அழகு, திருமிகு.பி.ஐயப்பன், திருமிகு.எம்.மணிகண்டன் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பயிற்சுழற்சி செய்த மற்றும் ஒரே மாதிரியாக பயிரிடப்படும் மண்ணின் சத்துப்பொருட்கள் பற்றிய ஆய்வு, தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளியின் இயற்கை மற்றும் செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படும் மண் பற்றிய ஒப்பீடு, தேனி கம்மவார் சங்க மெட்ரிக் பள்ளியின் மண்ணை வளப்படுத்தும் கரையான்கள் பற்றிய ஆய்வு,கோம்பை, எஸ்.கே.பி. பள்ளியின் நிலவளம் பாதுகாப்பில் வெட்டிவேரின் பங்கு பற்றிய ஆய்வு,_கம்பம், முக்தி விநாயகா நடுநிலைப் பள்ளியின் மண்வகை ஒப்பீடு,_கூடலூர், விக்ரம்சாராபாய் துளிர் இல்லத்தின்  சிறு,குறு விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றிய ஆய்வு  ஆகியவற்றை மாநில அளவிலான மாநாட்டிற்குத் தேர்வு செய்தனர்.

பாராட்டு விழா:
மாவட்டச்செயலாளர் திருமிகு.தே.சுந்தர் அறிவியல் இயக்கம் பற்றிய அறிமுக உரையாற்றினார். மாநில மாநாட்டிற்குத் தேர்வான ஆய்வுகளை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.எஸ்.கண்ணன் அறிவித்தார். தேர்வான குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்கி திருமிகு.கே.ராஜேந்திரன், வருவாய்க் கோட்டாட்சியர் சிறப்புரையாற்றினார். முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருமிகு.சிவாஜி மாவட்டக்கல்வி அலுவலர் திருமிகு.கே.பார்வதி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர்(பொ) பரமசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நடுவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

விஞ்ஞானிகள் சந்திப்பு:
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் பேரா.பொ.ராஜமாணிக்கம் இந்நிகழ்வைத் துவக்கி வைத்துப்பேசினார். "மருத்துவத்துறையில் நானோ தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் விஞ்ஞானி.கே.முருக பூபதிராஜா கருத்துரை வழங்கினார்.

நிறைவு விழா:
 
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத்துணைத் தலைவர் முனைவர்.ஜி.செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர்(பொ) முனைவர். எஸ்.அமானுல்லா வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் தொண்டர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கி நிறைவுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.மு.தியாகராஜன் மாநாட்டு மதிப்புரையாற்றினார். அறிவியல் வெளியீடுகள் புத்தகக் கண்காட்சியை திருமிகு.மொ.தனசேகரன் நடத்தினார். மாநாடு சிறக்க பலவகைகளில் உதவிபுரிந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் திருமிகு.க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.

ஸரிகபதஸ

 ஸரிகபதஸ


மோகனா அன்று
தஞ்சாவூரில் சோழம்பேட்டை.
விவசாய கிராமம்.
பெண்கள் படிக்க ஆரம்பித்திருந்த காலம்.
சுமார் ஆறு மைல் தூரத்தில் இருந்தது
மேல்நிலைப் பள்ளி.
அந்த வீட்டின் முதல் குழந்தை மோகனா.
படிப்பில் ஆர்வம் அதிகம்.
வீட்டு வேலை, தோட்ட வேலை,
மாடு மேய்த்தலோடு படிப்பையும்
தொடர வேண்டிய கட்டாயம்.
விடுமுறையில் கையில்
புத்தகத்துடன் மாடு மேய்க்கச் செல்வார்.
படிப்பில் கவனம் அதிகமாகி விட்டால்,
மாடுகளையே மறந்துவிடுவார்.
ஆறு மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய
பள்ளிக்கு எல்லா குழந்தைகளும்
எட்டு மணிக்கே கிளம்பி விடுவார்கள்.
ஆனால் மோகனா ஒன்பது நாற்பதுக்குத்தான்
வேலைகளை முடித்துவிட்டுக் கிளம்புவார்.
ஓட்டமும் நடையுமாகச் சென்று,
பத்து இருபதுக்குச் சரியாகப்
பள்ளிக்குள் நுழைந்துவிடுவார்.
முதல் வரிசையில்தான் உட்கார்வார்.
பாடங்களை உன்னிப்பாகக் கவனிப்பார்.
படிப்பின் மீது ஆர்வம் இருந்ததைப்
போலவே அவருக்கு இயற்கை, விலங்குகள்,
பறவைகள், மனிதர்கள் மீதும் ஆர்வம் இருந்தது.
மோகனாவுடன் படித்த
அந்த ஊர்ப் பெண்கள் எல்லாம்
ஃபெயிலாகியோ அல்லது பருவம் அடைந்தோ
படிப்பை விட்டிருந்தார்கள்.
மோகனா ஃபெயிலாக வாய்ப்பில்லாததால்,
அவர் எப்போது பருவம் அடைவார்,
படிப்பை எப்போது நிறுத்தலாம்
என்று வீட்டில் காத்திருந்தனர்!
பள்ளிப் படிப்பை முடித்த பிறகுதான்
பருவம் அடைந்தார்.
அதற்குப் பிறகு படிக்கக்கூடாது என்றார்கள்.
ஒருமாதம் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து,
பட்டினி கிடந்தார் மோகனா.
பரிதாபப்பட்ட சித்தப்பா, பியுஸியில் சேர்த்துவிட்டார்.
பியுஸி முடித்ததும்
மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தார்.
மதிப்பெண்கள் அதிகம். எளிதாக இடம் கிடைத்தது.
ஆனால் தன்னால் படிக்க வைக்க முடியாது
என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் அப்பா.
ஏதோ காரணத்தால்
அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு
அம்மா பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
வீட்டைப் பார்த்துக்கொள்ள
உறவினர்களை வைத்தார் அப்பா.
சாப்பாட்டுக்குக் கொடுக்கும் பணத்தை
உறவினர்கள் பத்து நாள்களுக்குள்
செலவழித்து விடுவார்கள்.
அதற்குப் பிறகு?
தென்னை ஓலைகளை வாங்கி,
கூடை முடைந்து கொடுப்பார் மோகனா.
நாள் முழுவதும் கூடை முடைந்தால்
75 பைசா முதல் 1 ரூபாய் வரை கொடுப்பார்கள்.
இதிலும் ஒன்றிரண்டு பைசாவை
மிச்சம் பிடித்து, ஹிந்து பேப்பர் வாங்கிப் படிப்பார்.
ஓர் ஆண்டு சென்றது.
கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தார்.
பிஎஸ்ஸி (விலங்கியல்) கிடைத்தது.
மீண்டும் வீட்டில் ஒரு யுத்தம்.
பாட்டியின் வற்புறுத்தலால்
இறுதியில் படிக்க அனுப்பினார் அப்பா.
பேராசிரியர்கள் எல்லோரிடமும் நல்ல பெயர் கிடைத்தது.
கல்லூரிகளில் நிறைய நண்பர்கள்.
அதில் முக்கியமானவர் சோமு.
மோனாவின் பக்கத்து ஊர்க்காரர்.
எம்.ஏ படித்துக்கொண்டிருந்தார்.
அழகாக ஆங்கிலம் பேசுவார். எழுதுவார்.
இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது..
மூன்று ஆண்டுகள் முடிந்தன. .
டிகிரி கிடைத்துவிட்டது.
வங்கி வேலைக்கு முயற்சி செய்தார்.

விஷயம் கேள்விப்பட்ட அவருடைய அப்பா,
‘படிப்பு சொல்லிக் கொடுக்கற வேலை
செய்றதா இருந்தால் செய்.
இல்லைன்னா வேலைக்கே போக வேண்டாம்’
என்று கறாராகச் சொல்லிவிட்டார்.
‘என்ன செய்வது?
மோகனாவுக்கு ஒரு யோசனை வந்தது.
‘அப்பா, நம்ம சொத்து எல்லாம்
தாத்தா சம்பாதித்ததுதானே?
எனக்கும் அதுல பங்கு இருக்கு
. என் பங்கை அடகு வச்சு
கொடுத்தீங்கன்னா நான் எம்எஸ்ஸி படிப்பேன்..’

மோகனா நேற்று
‘உன்னைப் படிக்க வச்சது தப்பாப் போச்சு.
சொத்தா கேக்குற சொத்து?
பொட்டைப்புள்ளைக்கு சொத்து வேணுமாம்ல…’
என்று கேட்டு, அடித்து விட்டார்.
பரிந்து பேச
இப்போது பாட்டியும் இல்லை.
அப்போதுதான் சோமுவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.
மோகனா வீட்டில் இல்லை.
சித்தப்பா வாங்கிப் படித்தார்.
கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது.
ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்ததால்,
ஓரளவு கடிதத்தைப் படித்தார்.
கோபம் தலைக்கேறியது.
அண்ணன், அண்ணியிடம் கத்தினார்.

‘அந்தக் கீழ்சாதிப்பய கடிதம் எழுதியிருக்கான்.
ரெண்டுபேரும் ஊரை விட்டு ஓடிப் போயி,
கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டிருக்கான்.
இவளுக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும்?’

‘அடிப்பாவி. இப்படிப் பண்ணிட்டாளே….
நான் என்னங்க பண்ணறது?’
செய்தி கேட்டு உறவினர்கள் கொதித்துப் போனார்கள்.
‘இங்க பாரு, நமக்கு மானம்தான் முக்கியம்.
கீழ்சாதிப் பயலோட  வாழறதுக்கு,
அவ செத்துப் போயிடலாம்..
இன்னும் மூணு குழந்தைங்க உனக்கு இருக்கு…
அவங்க எதிர்காலம் இவளால பாழாயிடும்…’
கோபத்தில் இருந்த அப்பாவுக்கும்
அது சரியென்று தோன்றியது.
எல்லோரும் சேர்ந்து, மோகனாவுக்குப் பிடித்த
அல்வாவில் விஷம் வைத்துக் கொல்வது
என்று தீர்மானித்தார்கள்.
வீட்டில் இருந்த பெண்கள்
கூடிக் கூடிப் பேசியதில் விஷயத்தை
யூகித்து விட்டார்.
ஆனால் அதற்கான
காரணம்தான் புரியவில்லை மோகனாவுக்கு.
மறுநாள்
மாமாவும் சித்தப்பாவும்
மோகனாவை வெளியூருக்கு
அழைத்துச் சென்றார்கள்.
சித்தப்பாவே விஷயத்தை ஆரம்பித்தார்.
‘உன்னை நம்பித்தானேம்மா படிக்க வச்சோம்.
இப்படிப் பண்ணிட்டீயே?
அந்தப் பயலோட ஓடிப் போற அளவுக்குப் போயிட்டீயே?’
‘எந்தப் பையன்? என்ன சொல்றீங்க?’
‘இந்தக் கடிதாசியைப் பாரு.’
‘இதுல அப்படி ஒண்ணும் எழுதலை சித்தப்பா.
அடுத்து நான் என்ன படிக்கலாம்,
எந்த எந்த இடத்துல
என்ன படிப்பு இருக்குன்னுதான் எழுதிருக்கு…’
‘உன்னை நம்ப மாட்டேன். பொய் சொல்லாத…’
‘யார் கிட்ட வேணாலும் காட்டிப் படிக்கச் சொல்லுங்க.’
அந்த ஊர்
வாத்தியார் மகனிடம்
கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள்
‘உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?
படிப்பு பத்திதான் எழுதிருக்கு…
உங்க பொண்ணுகிட்ட
யாராவது வம்பு பண்ணினா செருப்பை எடுத்துடும்.
அதனால பையன்கள் எல்லாம் பயப்படுவாங்க.
உங்க பொண்ணைப் படிக்க வைங்க,
உங்க பரம்பரையே முன்னேறும்…’

மீண்டும் ஊருக்குத் திரும்பினார் மோகனா.
வசதியான தோழிகளிடம் படிப்பதற்கு உதவி கேட்டார்.
அவர்கள் எல்லாம் சந்தோஷமாகப் பணம் கொடுத்தார்கள்.
வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு,
எம்எஸ்ஸி படிக்கச் சென்றார்.

‘எந்தப் பையனையும் காதலிக்க மாட்டேன்னு
சத்தியம் பண்ணிட்டுப் போ….’
‘சத்தியமா காதலிக்க மாட்டேன்…’
முதல் ஆண்டு படிப்பு முடியும்போது,
மோகனாவின் அப்பா நிலத்தை அடகு வைத்து,
பணம் கொண்டு வந்தார்.
தோழிகளிடம் வாங்கிய கடன்கள்
எல்லாம் அடைக்கப்பட்டன.
சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.
பழநியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில்
இருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தனர்.
அந்தக் கல்லூரியில்
120 ஆண்களுக்கு மத்தியில்
ஒரே பெண்ணாக வேலை செய்தார் மோகனா.
அங்குதான்
இனிய நண்பர் அருணந்தியின் அறிமுகம் கிடைத்தது
. அவர் மூலம்
கல்லூரி ஆசிரியர் சங்கத்தில் சேர்ந்தார்.
பல முறை போராட்டாங்களில்
கலந்துகொண்டு சிறை சென்றார்.

மோகனாவின் அப்பா வந்தார்.
தூரத்து உறவு
என்று சொல்லி ஒரு மாப்பிள்ளையைக்
கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னார்.
இந்த விஷயத்திலாவது
அவர்கள் சொல்வதைக் கேட்கலாம்
என்று முடிவு செய்தார் மோகனா.
திருமணமாகி ஒரு வாரத்துக்குப் பிறகு,
‘சோமுவைக் காதலிச்சியா?’
‘இல்லை…’
‘நான் எப்படி நம்பறது?’
‘காதலிச்சிருந்தா அவரையே கல்யாணம் செஞ்சிருப்பேன்…’
திருமணம் நடந்து மூன்று மாதங்கள்
வரைதான் வேலை செய்தார் கணவர்.
ஒவ்வொரு வேளையும் விதவிதமாகச்
சமைக்க வேண்டும்.
குழந்தை உண்டானதால்
கடுமையான வாந்தி. சோர்வு.

ஆனாலும்
வீட்டில் எந்த வேலையிலும் குறை வைக்கக்கூடாது.
யாராவது உறவினர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால்,
அன்று கண்டிப்பாக அடிக்க ஆரம்பித்து விடுவார்.
தான் இந்த வீட்டின் தலைவன் என்று நிரூபிக்க முயல்வார்.
அடிக்கடி சந்தேகம்.
சண்டை.
மோகனா கல்லூரிக்குச் சென்று வருவதற்குள்,
தன் மகனிடம்
அவரைப் பற்றி தவறாகச் சொல்லி வைப்பார்.
கணவர்தான் மோசமானவரே தவிர,
அவருடைய குடும்பம் மிகவும் அன்பானது.
மோகனாவின் துயரத்தைக்
கண்ட மாமனார்,
விவாகரத்து வாங்கச் சொல்லி வற்புறுத்தினார்.
மாமியாரும் நாத்தனாரும் அதுதான் சரியானது
என்று வலியுறுத்தினார்கள்.
தனியாக வாழ்வதில்
ஏதோ தயக்கம் இருந்ததால்
மோகனா அதைப் பற்றி யோசிக்கவில்லை.

மகனுக்கு விவரம் தெரிந்தது.
‘அப்பாவை விவாகரத்து பண்ணிடுங்க.
என் நண்பனோட அமமா கூட விவாகரத்து வாங்கிட்டாங்க.
எதையும் சமாளிச்சுக்கலாம்’
என்று சொன்னதும் மோகனாவுக்குத் தைரியம் வந்தது.
விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள முடியாது
என்று உறுதியாக இருந்தார் கணவர்.
கல்லூரிக்குச் சென்று ரகளை செய்தார்.
வழக்கு நீண்டுகொண்டே சென்றது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை கிடைத்தது.

நண்பர் அருணந்தியின் மூலம்
அறிவியல் இயக்கத்தின் அறிமுகம் கிடைத்தது.
தனக்கு ஏற்ற களமாக அதைக் கருதினார் மோகனா.
தன் துறை தவிர்த்து, இயற்பியல், வானியல்
என்று பலவற்றிலும் கவனத்தைச் செலுத்தினார்.
மிக விரைவில் அறிவியல் இயக்கத்தின்
முக்கியமான பொறுப்பாளர்களில் ஒருவரானார்
. இந்தியா முழுவதும் ரிசோர்ஸ் பர்ஸனாகச் சென்றார்.
தமிழ்நாட்டில் அவர் செல்லாத கிராமங்கள் மிகவும் குறைவே.
கல்லூரி நாள்கள் தவிர,
மற்ற நாள்கள் முழுவதும்
இயக்கப் பணிக்காக ஓடிக்கொண்டே இருப்பார்.

அவருடைய வீடு
கல்லூரி மாணவர்கள்,
பேராசிரியர்கள்,
இயக்க நண்பர்கள்
என்று எந்நேரமும்
களைகட்டிக்கொண்டிருக்கும்.
கூட்டம் நடக்கும்.
இரவில் பெரிய தொலைநோக்கி, பைனாகுலர்களை வைத்து,
‘சிரியஸ் பிரகாசமாகத் தெரிகிறது…
ஓரியான் கூட்டம் சற்று விலகியிருக்கிறது…’
என்று வான் ஆராய்ச்சி நடைபெறும்!

மோகனாவின்
சமையல் அறை சற்று வித்தியாசமாக இருக்கும்.
ஒரு பக்கம்
அவருடைய தம்பி அம்மியில்
மிளகாய் அரைத்துக்கொண்டிருப்பார்,
இன்னொரு பக்கம் மகன்
காய் நறுக்கிக்கொண்டிருப்பார்…
அவர்கள் வீட்டில் பெண்களுக்கு.
ஆண்களுக்கு என்று தனித்தனி வேலைகள்
கிடையாது.
எல்லோரும் இயல்பாக
எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

அறிந்தவர்கள், அறியாதவர்கள்
என்று எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்வார் மோகனா.
அவருடைய தம்பிகள், தங்கை
குழந்தைகளைப் படிக்க வைத்து,
திருமணமும் செய்துகொடுத்துவிட்டார்.
முகம் தெரியாத எத்தனையோ
மாணவர்களை இன்றளவும்
படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
பிரச்னைகளின் போது
உடன் இருந்து தைரியமாகப்
போராட வைத்தவரும் நண்பரும்
பிலாசபருமான அருணந்திக்கு
மூளை புற்றுநோய் வந்தபோது
துவண்டு போனார் மோகனா.
அவரையும் அவருடைய மனைவியையும் இரண்டு ஆண்டுகள் தன் வீட்டிலேயே வைத்து, மருத்துவம் பார்த்தார்.

மோகனா இன்று
மகன் பிடெக் முடித்தவுடன்
அமெரிக்கா சென்றுவிட்டார்.
மருமகளின் முதல் பிரசவத்துக்கு
அமெரிக்கா செல்ல விரும்பினார் மோகனா.
ஆனால் விவாகரத்து பெற்றவர்,
ஒரே மகன் என்பதால் அங்கேயே தங்கி விடுவார்
என்று காரணம் காட்டி,
ஓவ்வொரு முறையும்
அவருக்கு விசா மறுக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததில்
இரண்டாவது பிரசவத்தின்போது விசா கிடைத்தது.

துறைத் தலைவராக
இருந்து ஓய்வு பெற்ற பிறகு,
இன்னும் அதிகமாக மக்களுக்கு
உழைக்க ஆரம்பித்தார் மோகனா
. நிறைய படிப்பார். நிறைய எழுதுவார்.

இதுவரை பதினேழு அறிவியல் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
ஆரோக்கியமான
உணவு, உடற்பயிற்சி,
குறிப்பிட்ட இடைவெளிகளில்
மருத்துவப் பரிசோதனை
என்று தன்னையும் பார்த்துக்கொண்டார்.
அன்று…
‘ஹலோ மோகனா பேசறேன்…’
‘எப்படி இருக்கீங்க?’
‘நல்லா இருக்கேன்.
செக்கப்புக்காக ஹாஸ்பிடல் வந்தேன்.
மார்பகப் புற்றுநோய்ன்னு தெரிந்தது.
நேத்து காலையில்
ஒரு மார்பகத்தை எடுத்துட்டாங்க.
நான் நல்லா இருக்கேன்…
கவலை வேணாம்.’
இரண்டு மாதங்களுக்குப் பிறகு…
இளைத்துப் போயிருந்தார்.
முடி எல்லாம் கொட்டியிருந்தது.
கீமோ தெரபி எடுப்பதால்
நாக்கு, உள்ளங்கைகள்,
கால்கள் எல்லாம் கறுத்துப் போயிருந்தன.

‘உங்க வாழ்க்கையில்
இப்பத்தான் ரெஸ்ட்ல இருக்கீங்க…’
‘அறுபது வயதுக்கு
மேல ஓய்வு எடுப்பதில் அர்த்தமில்லை.
முன்னாடி விட இப்பத்தான் அதிகமா வேலை செய்யணும்.
மார்பகப் புற்று நோய் பற்றி
கிராமப் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்ணும்.
கிராமப்புற மக்களுக்கு
நிறைய திட்டங்கள் வச்சிருக்கேன்.
நீயே சொல்லு, ஓய்வெடுக்க முடியுமா?’
-thanks:tamilpaper

சுலபமாக தண்ணீர் கொதிக்கவைக்கும் சாதனம் - சத்திரக்குடி மாணவர்கள் சாதனை

Monday, 15 December 2008
பரமக்குடி டிச 15 : சுலபமாக தண்ணீர் கொதிக்கவைக்கும் சாதனம் - சத்திரக்குடி மாணவர்கள் சாதனை : எளிய முறையில் தண்ணீரைக் கொதிக்க வைப்பது எப்படி? என்று ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து சத்திரக்குடி பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
ஆய்வுக் கட்டுரை
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான ஆய்வுக் கட்டுரை போட்டி கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகமது சபீர், ராஜேஷ் குமார், நந்தினி, மணிகண்டன், சாபீரா பர்வின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர். இவர்களது ஆய்வு கட்டுரைக்கு மாநில அளவில் முதலிடம் கிடைத்துள்ளது.
இதேபோல மாநில அளவில் ஜுனியர் பிரிவில் 15 ஆய்வு கட்டுரைகளும், சீனியர் பிரிவில் 15 ஆய்வு கட்டுரைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுக்களின் தலைவர்கள் வருகிற 27-ந்தேதி நாகலாந்தில் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
சாதனம்
இதன்படி மாணவன் முகமது சபீர் நாகலாந்து செல்கிறார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது : தற்போது எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நோய்கள் நீரின் மூலமே பரவுகிறது. எனவே அனைவரும் நீரை கொதிக்க வைத்து அருந்துவதற்கு சூரிய ஒளியில் நீரை கொதிக்க வைக்கும் சாதனத்தை பழைய டயர், கண்ணாடி, மரப்பலகை, கருப்பு பெயிண்ட் அடித்த அலுமினிய பாத்திரம் இவற்றை கொண்டு உருவாக்கி உள்ளோம்.
இதில் பலகையின் மேல் டயரை வைத்து அதன் நடுவில் நீர் நிரம்பிய அலுமினிய பாத்திரத்தை வைக்க வேண்டும். பின்னர் டயரின் மேல் பகுதியை கண்ணாடியை வைத்து மூடவேண்டும். கண்ணாடி வழியாக உள்ளே செல்லும் சூரிய ஒளி பாத்திரத்தை வெப்பப்படுத்துகிறது. மேலும் உள்ளே இருக்கும் காற்று சூடாகி அது வெளியேற முடியாமல் பாத்திரத்தை வெப்பப்படுத்துகிறது. இதனால் நீர் விரைவில் சூடாகிறது. இதனை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதில்லை. இலவசமாக சூடான நீரை தினமும் பெற முடியும். இவ்வாறு அவர் கூறி னார்.
பாராட்டு
மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ள இந்த ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த மாணவ-மாணவிகளையும், வழிகாட்டிய ஆசிரியர் வெங்கடேசனையும், பள்ளி தலைமை ஆசிரியர் கதிரேசன், உதவி தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். 

செய்தி : முதுவை ஹிதாயத்

குழந்தைகள் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்

புதிய புத்தகம் பேசுது அக்டோபர்09 
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்திரன் அவர்களை மாநாட்டையட்டி புதிய புத்தகம் பேசுது இதழுக்காக சந்தித்தோம். பல வேலைகளுக்கு இடையில் நமக்கு நேரம் ஒதுக்கி கொடுத்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? Balachandran
1980 இல் சென்னை ஐஐடி அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய விஞ்ஞானிகளில் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக இன்று சென்னை உச்சநீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சந்துரு, ஹிந்து பத்திரிகையைச் சேர்ந்த என். ராம், வெங்கடேஷ் ஆத்ரேயா, டாக்டர் சுந்தர்ராமன் இவர்களும் இணைந்து இந்த இயக்கத்தை ஆரம்பித்தார்கள்.
அறிவியல் இயக்கத்தை ஏன் துவக்கினார்கள். அல்லது ஏன் தேவையாக இருந்தது என்றால் அன்றைக்கு இருந்த அறிவியல் கொள்கைகளையும், உணர்ச்சிகளையும் தொழில்நுட்ப உணர்ச்சிகளையும் ஒரு விமர்சனப்பூர்வமாக பார்ப்பதும், சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கிறது என்பதற்காகத்தான். 80 முதல் 85ஆம் ஆண்டுவரை இந்த இயக்கம் அரங்க கூட்டங்கள் வாயிலாக மட்டுமே நடைபெற்றது. உதாரணமாக ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வந்தால் அது பயன் இருக்கா, இல்லையா என்கிற விமர்சனம், கட்டுரைகள் எழுதுவது, கருத்தரங்கம் நடத்துவது போன்றவைகள் நடைபெற்றன.
85 க்குப் பிறகுதான் மக்களை நோக்கி களத்துக்கு சென்றது. இதை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பார்க்கிறோம்.
அதிகமாக அறிவியலை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும். இதற்காக 1987 இல் ஒரு கலைப்பயணம் தொடங்குகிறாங்க. அது கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம் முழுவதும் சுமார் 60,000க்கும் மேற்பட்ட மக்களை சந்திக்கிறாங்க. இந்தப் பயணத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம், ரிஷிஷிறி ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்து இருந்தன. இந்தக் கலைப் பயணத்தில் அறிவியல் இயக்கம் வெளியிட்ட புத்தகங்களும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. அப்போது எழுத்தறிவு சார்ந்த வாய்ப்புகளும் பிரச்சனைகள் கண்டறியப்பட்டன.
மக்களிடம் என்ன மாதிரி பிரச்சனைகள் இருந்தன?
ப: அன்றைய சூழலில் ரத்தம் சம்பந்தமாக பிரச்சனை இருந்தது. ரத்தம் என்று சும்மா சொன்னாலே மக்கள் பீதி அடைந்துவிடும் சூழல் இருந்தது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பற்றி தெரியாது. ரத்தம் கொடுத்துவிட்டால் மீண்டும் ஊறாது என்ற தவறான நம்பிக்கை இருந்தது. வயிற்றுப்போக்கு பற்றி மக்களிடம் நிறைய தவறான நம்பிக்கைகள் இருந்தன. வயிற்றுப் போக்கு அதிகம் ஏற்பட்டால் நிறைய தண்ணீர், உப்புக் கரைசல், சர்க்கரை கரைசல் என்று ஏதாவது கொடுக்கணும். ஏன்னா வயிற்றுப்போக்கால் நீர் இழப்பு ஏற்படும். நீங்கள் மருத்துவமனைக்கு சென்றா லும் முதலில் இதைத்தான் கொடுப்பார்கள். ஆனால் தண்ணீர் கொடுத்தால் வயிற்றுப்போக்கு அதிகமாகும் என்ற கருத்து மக்களிடம் இருக்கிறது. மேலும் பொதுவாக வயிற்றுப் போக்கால் கிராமங்களில் ஐந்து பேர், பத்து பேர் என்று தொடர்ச்சியாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இப்படி நடந்தால் பேய், பிசாசு என்று கருத்துகளும் இருந்தது. அதே நேரம் மக்களிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடந்தன. அவர்கள் எங்களிடம் நிறைய கேள்விகளை எழுப்பினார்கள். பேரா. மாடசாமி போன்றவர்கள் நிறைய புத்தகங்கள் எழுதினார்கள். புத்தகங்களில் இருந்த விஷயங்கள்
சாதாரணமாக இருந்தன பொதுவாக மக்கள் மத்தியில் சுகாதாரம் மற்றும் அறிவியல் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கின்றன. அதற்கு கல்வி என்பது விடுதலையாக இருக்கும். என்பதை வலியுறுத்தின.
கிராமங்களில் மரபுரீதியாக சில வைத்திய முறைகள் உள்ளன. அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
மரபு என்று சொல்கிறபோது, சில ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் என்று வருகிறபோது பாட்டி வைத்தியம், அஞ்சறைப் பெட்டி வைத்தியம், துளசியை சாறாக குடிப்பது போன்றவைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் இதோடு மரபு என்று சொல்லி சில தவறான விஷயங்களும் இருக்கிறது. பாம்பு கடித்தால் மருந்து கொடுக்கிறார்கள். அந்த மருந்து சில நேரம் கேட்கிறது, சில நேரம் கேட்பதில்லை. பேய், பிசாசு என்று சொல்லி மந்திரவாதியிடம் செல்வது, விபூதி மந்திரிப்பது போன்றவைகளும் இருக்கின்றன. ஒரு குழந்தைக்கு காய்ச்சல் என்றால் முதலுதவி கொடுக்காமல், விபூதி போடுவது, தண்ணி தெளித்தல், தொக்கு எடுத்தல் போன்றவைகள் இன்னமும் நடைமுறையில் இருக்கின்றன.
வத்திராய்ப்பு பக்கத்தில் தம்மிபட்டி என்கிற ஒரு கிராமத்தில் தொக்கு எடுப்பவர் சின்ன சின்ன உருண்டைகளாக கல், மண் ஆகியவற்றில் செய்து வைத்திருந்தார். இதையெல்லாம் வாயில் போட்டுத்தான் ஊதுவார்கள். இப்படி ஊதும்போது குழந்தைக்கு உள்ளே சென்றால் என்ன செய்வது? இதெல்லாம் விளக்குவதற்காக நாடகங்கள், பாடல்கள், கதைகள் மூலமாக சொன்னோம். இது நடந்தபோது சில ஊர்களில் எங்களை கற்களால் அடித்தார்கள். அதன்பிறகு ஓரளவிற்கு மாறினார்கள். பொதுவாக கிராமங்களில் மருத்துவமனை கிடையாது. ஆனால் ஊர் வழக்கப்படி மருத்துவச்சின்னு ஓருவர் இருப்பாங்க. இதனால் கர்ப்பிணி பெண்கள் இறப்புகள், குழந்தை இறப்பு அதிகமாக இருந்தது. ஆரம்பச் சுகாதார மையத்திலிருந்து உதவி செய்யுங்க, பிரசவம் என்பது கண்டிப்பாக மருத்துவமனையில்தான் நடக்க வேண்டும் என்ற பிரச்சாரம் செய்ததற்கு ஓரளவு பலன்கிடைத்தது.
மூட நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை விஞ்ஞான மனபான்மையோடு வாழ்வதற்கு என்ன முயற்சி செய்றீங்க?
மூட நம்பிக்கைன்னு சொல்ல முடியாது. தவறான நம்பிக்கைன்னு சொல்லலாம். யாரோ தவறாகக் கற்றுக் கொடுத்ததை தொடர்ந்து பின்பற்றி வர்றாங்க. அறிவியல் இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கு இருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டு சொந்தக்காலில் நிற்கணும் என்பதுதான். எதுவாக இருந்தாலும் கேள்வி கேட்கணும். பதில் சரி என்றால் எப்படி சரி, தவறு என்றால் எப்படி தவறு என்று பலவிதமான கேள்விகளை எழுப்பி தேடணும். உதாரணமாக மந்திரமா, தந்திரமா என்ற ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம். இது போன்று சிலர் ‘மேஜிக்’ நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்துறாங்க. இப்படி நடத்துகிறவர்கள் எப்படி நடத்துகிறோம் என்ற உண்மைகளை சொல்வதில்லை. ஆனால் அறிவியல் இயக்கத்தில் யார் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறோம். குறிப்பாக திருச்சிக்கு பக்கத்தில் பிரேமானந்தா வாய்க்குள்ளே இருந்து லிங்கம் எடுத்தார். விபூதி வரவைத்தார். மோதிரம் எடுத்தார். பாலியல் பிரச்சனை போன்றவைகளால் அவருக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. புதுக்கோட்டையில் இருக்கும் அறிவியல் இயக்கத் தொண்டர் மருதமுத்து என்பவருக்கு மந்திரமா, தந்திரமா என்ற மேஜிக் கலையைக் கற்றுக் கொடுத்து இருந்தோம். அவர் நீதிமன்றத்தில் லிங்கம் எடுத்தார். மோதிரம் எடுத்தார். நீதிபதியே அசந்து போனார். பிரேமானந்தா மிரண்டு போய்விட்டார். பிரேமானந்தாவிற்கு தண்டனை கிடைக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் ஒரு காரணமாக இருந்தது.
குழந்தைகள் மத்தியில் என்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள்?
குழந்தைகள் மத்தியில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலும் சரி, இன்றைக்கும் சரி ஆங்கிலமோகம் என்பது அதிகமாக இருக்கிறது. கல்விச் சூழல் என்பது விளையாட்டாக கலந்துரையாடலாக இல்லாமல் அச்சுறுத்துவதாக உள்ளது. வகுப்பறைகள் என்பது கேள்வி கேட்கிற இடமாக இல்லை. அறிவியல் என்பதும் செயல்முறை விளக்கமாக இல்லாமல் மனப்பாடமாகவே இருக்கிறது. தண்ணீரின் கொதிநிலை என்ன என்று தமிழகத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளில் கேட்டாலும் 100 டிகிரி செல்சியஸ் என்ற பதில் கிடைக்கும். இதை செய்து பார்த்தார்களா? என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் குழந்தைகளுக்கு அறிவியலை சொல்லித்தர துளிர் என்ற பத்திரிகை வருகிறது. 15,000 பத்திரிகைகள் போய் கொண்டிருக்கிறது. குழந்தைகள் படிக்கிறாங்க. குழுவாக விவாதிக்கிறாங்க. கேள்விகளை எழுப்புறாங்க. இது மாதிரியான விஷயங்கள் தொடர்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்று மத்திய அரசின் உதவியோடு நடத்தி வருகிறோம். குழந்தைகள் பலர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்புக் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். அந்தத் தலைப்பில் குழந்தைகள் மூன்று மாதம் ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்வு என்பது கிராமங்களுக்கு சென்று சேகரிப்பது, இந்த துறைசார்ந்த நபர்களை சந்தித்து ஒரு மாற்று சிந்தனையை, பொருட்களை முன் வைப்பார்கள். இதன் மூலம் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிற்கு வளர்ந்து குழந்தை விஞ்ஞானின்னு பட்டத்தை வாங்குறாங்க.
உதாரணமாக ராமலெஷ்மின்னு ஒரு பொண்ணு சிவகாசியில் தீப்பெட்டி ஆபிசுக்கு வேலைக்கு போயிட்டு இருந்தது. ஐந்தாம் வகுப்புக்கு மேலே படிக்கலை. ஒருநாள் எங்க அலுவலகத்திற்கு வந்து, ‘நான் ஆராய்ச்சி பண்ணனும். அறிவியல் இயக்கத்தில் வாய்ப்பு கொடுக்கிறீங்களாமே என்று கேட்டாங்க. அதற்கு படிச்சவங்களே பண்ண முடியாது. நீங்க எப்படி செய்ய முடியும் என்று எங்களுக்கு இருக்கும் பொது புத்தியில் சொன்னோம். மறுநாள் அந்த பொண்ணு திரும்ப வந்து எனக்கு தெரிந்த மெட்ரிகுலேசனில் படிக்கிற அக்கா ஆராய்ச்சி செய்றாங்க. நானும் செய்யணும்னு சொன்னாங்க. நாங்களும் சரின்னு சொன்னோம். அந்தக் குழந்தை ‘ஏழைகளின் ஊட்டச்சத்து’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொன்னது. அந்தக் குழந்தை சொன்னது கம்பு, கேழ்வரகு போன்ற நவதானியங்களைதான். கடையில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை விட இந்த குழந்தை தயாரித்த ஊட்டசத்தில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் இருந்தது ஆய்வில் நிரூபிக்கப்பட்டது. அந்தக் குழந்தை இன்று ஒரு தன்னம்பிக்கையோடு படித்துக் கொண்டிருக்கிறது. பத்தாவது வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து இருக்கிறது. இரா. நடராசன் எழுதிய ஆயிஷா மறைந்து விட்டாள். இந்த ஆயிஷா கொஞ்சம் மேலே வந்து இருக்கிறாள். கணக்கும் இனிக்கும் என்ற திட்டத்தில் கணக்கு பயிற்றுவிப்பது பற்றி ஆசிரியர்களுக்கும், பயில்வதை மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறோம். இந்தக் கல்வித் திட்டத்தில் குழந்தைகள், ஆசிரியர்கள், மக்கள் என்ற இந்த மூன்று பிரிவினரும் பங்கேற்கணும் என்று உருவாக்கி வருகிறோம். ஆசிரியர்களுக்காக ‘விழுதுகள்’ என்ற இதழும் வெளியிடப்படுகிறது.
சமச்சீர் கல்வியில் அறிவியல் இயக்கத்தின் பங்கு என்ன?
1993 இல் கற்பது கற்கண்டு என்கிற ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். தமிழ் நாட்டில் இருக்கும் எல்லாப் பள்ளிக் கூடங்களுக்கும் ஒரு பெரிய அசைவை ஏற்படுத்தியது இந்த இயக்கம். உடனே அரசாங்கம் ‘கற்றலில் இனிமை’ என்கிற திட்டத்தை கொண்டு வந்தாங்க. கல்விச் சூழல் மாறுவதற்கு தொடர்ச்சியாக இயக்கங்கள் நடத்திக்கிட்டு வருகிறோம்.
இன்றைக்கு செயல்வழி கற்றல்பற்றி ஒரு விவாதம் நடத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உந்துசக்தியாக இருக்குது. இது பற்றி ஆசிரியர்களையும், மக்களையும் தமிழகம் முழுவதும் சந்தித்து ஆய்வு செய்தோம். அதை கோரிக்கையாக வைத்திருக்கிறோம். அதே நேரம் அரசாங்கம் கொண்டு வருவதை ஆதரிக்கணும். இந்தக் கல்வி திட்டத்தைப் பற்றி ஒவ்வொருத்தருக்கு ஒரு கருத்து இருக்கும். எல்லாரையும் ஒன்று திரட்டி பொது கருத்து உருவாக்கப்படணும். இதற்காக அக்டோபர் 2, 3, 4 இல் மேட்டுப்பாளையத்தில் நடக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாட்டில் ஒரு பெரிய விவாதத்தை துவங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் ஷி.ஷி.கி முன்னாள் இயக்குநர் விஜயகுமார், கல்வியாளர் ஷி.ஷி. ராஜகோபாலன், டாக்டர் இராமானுஜம் கேரளாவைச் சேர்ந்த கல்வியாளர் மதுசூதனன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மை இல்லாத சூழலில் அறிவியல் கல்வி கற்பிப்பது பற்றி....
ஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மை இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. வாய்ப்புகள் இல்லைன்னு சொல்லலாம். காட்டாம்பாக்கம் என்ற ஊரில் சக்திவேல் என்று ஓர் ஆசிரியர் இருக்கிறார். அவர் கலிலியோ பற்றி விதவிதமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இத்தனை திறமைகளோட இருக்கிற ஆசிரியர் ஒரு வகுப்பறைக்குள் சென்றவுடன் சராசரி மனிதராகி விடுகிறார். அவருக்கு இடப்பட்ட ஆணை என்பது பாடத்தை வாசித்துகாட்டுவது, குழந்தைகள் படிக்கணும், இவர் நடத்துகிற பாடத்தில் குழந்தைகள் பெயிலாகக் கூடாது என்பதுதான். அப்படி குழந்தைகள் பெயிலானால் ஆசிரியர்தான் தப்பு செய்கிறார் என்று ஆசிரியரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற சூழல்தான் இருக்கிறது.
ஓர் ஆசிரியர் எதுவும் செய்து காண்பிக்க வேண்டுமென்றால் அரசு என்ன உபகரணங்களை கொடுத்து இருக்கிறது? அட்டையிலதான் செய்றாங்க. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சொல்வது இன்றைக்கு இருக்கும் பாடத்திட்டத்தோடு குழந்தைகள் ஆய்வு செய்வதற்கு தனியாக ஒரு பாடதிட்டத்தை உருவாக்கணும். ஒவ்வொரு குழந்தையும் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கணும். இந்த வாய்ப்புகளில் குழந்தைகள் படிக்கும்போது எதிர் காலத்தில் ஒரு நல்ல மாற்றமாக அமையும். ஆர்வம் இருக்கும் ஆசிரியர்களை அறிவியல் இயக்கம் கண்டு எடுத்து, அவர்களின் திறமைகளைக் கண்டெடுத்து, அறிவியல் இயக்கம் செய்கிற பரிசோதனைகளை ஆசிரியர்களுக்கு கொடுக்கிறோம். இதில் எல்லா ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும்.
கே: இந்த மாநாடு பற்றி:
ப: இந்த மாநாடு மிக முக்கியமானது. இந்தியா முழுவதும் வறட்சி இருக்கு. உணவு பாதுகாப்பு சட்டம் வந்திருக்கு. இந்தச் சட்டம் ஏழை எளிய மக்களை பாதிக்க கூடியதாக இருக்கு. அரசின் சூழ்நிலையும் மாறி வருகிறது. ‘அறிவியலும் மக்களின் வாழ்வாதார உரிமைகளும்‘ என்ற கருப் பொருளை வைத்துதான் மாநாடு நடக்க இருக்கிறது. ஏனெனில் இன்றைக்கு உரிமை என்கிற விஷயம் சலுகை என்று மாறி இருக்கிறது. அரசு என்பது தம்முடைய குடிமகன்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது கடமை. இதுதான் உரிமை. இந்த உரிமையை தலைநிமிர்ந்து கேட்காமல் ஒரு ரூபாய் அரிசிக்காகவும், கலர் டி.வி. பெட்டிக்காகவும் தன்னை தாழ்மைப்படுத்திக் கொண்டு வாங்கக் கூடிய சூழல் இருக்கிறது. இதில் ஐநூறுக்கு மேற்பட்ட பிரதிகளும் விஞ்ஞானிகளும் விவாதிக்கப் போகிறார்கள். இம் மாநாட்டையட்டி அறிவியல் இயக்கம் பத்து நூல்களையும், பாரதி புத்தகாலயத்தோடு சேர்ந்து பத்து நூல்களையும் வெளியிடுகிறோம்.. கைகளால் நூறு விளையாட்டுகளை விளையாடலாம், 2009 ஆம் ஆண்டு வானியியல் ஆண்டு அதையட்டிய பாடல்கள், மந்திர தந்திரமா போன்ற குறுந்தகடுகள் வெளியிடப்படுகிறது. சிறப்பு புத்தகக் காட்சிகளும் நடைபெறுகிறது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தினமணி
கம்பம், நவ. 13

உத்தமபாளையம்ஹாஜி கருத்தராவுத்தர் ஹெளதியா கல்லூரியில்தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல்மாவட்ட மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்மாவட்ட தலைவர் பா.செந்தில்குமார் தலைமை வகித்தார்.கௌரவத் தலைவர் பேராசிரியர் எஸ்.எம்.சௌகத்அலிமுன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் தே.சுந்தர் வரவேற்புரையாற்றினார்.கருத்தராவுத்தர் கல்லூரியின்முதல்வர் எம்.ஹெளதுமுகைதீன் தொடக்க உரையாற்றினார்.அரசு மருத்துவமனை மருத்துவர் பி.அழகர்சாமி, ஸ்டேட் வங்கி மேலாளர் எ.பரமசிவம்,பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தலைவர் டி.கே.சீனிவாசன்ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் மெட்ரிக்.பள்ளிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள்,தங்களது ஆய்வு கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.சிறந்த ஆய்வு கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும்நடுவர்களாக பேராசிரியர்கள் எஸ்.அமானுல்லா,எஸ்.ராமநாதன், கே.ஜெயபாலன், சார்லஸ் ராபர்ட்,பி.பொற்கொடி, ஜெ.கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் செயல்பட்டனர்.
ஒருங்கிணைப்பாளராக பேராசரியர் எஸ்.கண்ணன் செயல்பட்டார்.
தேனி கம்மவார் மெட்ரிக். பள்ளி,மேரிமாதா பள்ளி, கம்பம் முத்துவிநாயகர் பள்ளி,கூடலூர் துளிர் பள்ளி மாணவர்களின்ஆய்வுக் கட்டுரைகள், சிறந்தவையாகத்தேர்வு செய்யப்பட்டன. இவர்கள் மாநில அளவில்நடைபெறும் தேசிய குழந்தை அறிவியல்மாநாட்டில் கலந்து கொள்வார்கள்என்று மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் கே.பார்வதி, மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

Nov 13, 2010

துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகள்-2010

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, இளைஞர் அறிவியல் மாநாடு, துளிர் அறிவியல் திருவிழா,  துளிர் அறிவியல் வினாடிவினா போன்ற பல்வேறு பணிகளைச் செய்துவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் போட்டிகளை நடத்தி வருகின்றது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் துளிர் அறிவியல் விழிப்புணர்வுத்திறனறிதல் போட்டிகள் நடத்தப்படுகின்றது.

இவ்வாண்டிற்கான போட்டிகள் இன்று, நவம்பர் 13 (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

திறனறிதல் போட்டியில் கூடலூர் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி.நடுநிலைப் பள்ளி, விக்ரம்சாராபாய் துளிர் இல்லம் காமயகவுண்டன்பட்டி கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் பாத்துமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்தையா பிள்ளை நினைவு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச்சேர்ந்த சுமார் 150 மாணவ,மாணவியர் கலந்துகொண்டனர்.

அறிவியல் இயக்க தொண்டர்கள் திருமிகு.க.முத்துக்கண்ணன் திருமிகு.வி.வெங்கட்ராமன் திருமிகு.ஆர்.அறிவழகன் திருமிகு.ஈஸ்வரன் திருமிகு.அருண்பிரசன்னா திருமிகு.முத்துலட்சுமி ஆகியோர் மேற்பார்வையாளர்களாக செயல்பட்டனர்.

கம்பம் அல்அஜ்ஹர் மெட்ரிக் பள்ளியில் திருமிகு.ஐயப்பன் ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருமிகு.அம்மையப்பன் தேனி கொண்டுராஜா நினைவு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் திருமிகு.முத்துக்கணணன் மற்றும் திருமிகு.பாஸ்கரன் ஆகியோர்  மேற்பார்வையாளர்களாக செயல்பட்டனர். திறனறிதல் போட்டி ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் திருமிகு.தே.சுந்தர் செய்திருந்தார்.

* 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.

*6-8 இளநிலை எனவும், 9-12 முதுநிலை எனவும் இருபிரிவுகளில் தேர்வு நடைபெற்றது.

*தேர்வில் மாணவர்கள் 120 நிமிடத்தில் 100 வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டும். வினாக்கள் பொது அறிவியலாகவும் அறிவியல் விழிப்புணர்வுத் தகவல்களாகவும் துளிர் அறிவியல் செய்திகளாகவும் மாணவர்களின் அறிவியல் விழிப்புணர்வுத் திறனை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும்.
*வினாக்களுக்கு பதில்களை 4 விடைகளிலிருந்து 1 விடையைத்தேர்வுசெய்யும் வகையிலும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பிற்கானபோட்டித் தேர்வுகளில் பங்கேற்கப் பயிற்சி அளிக்கும் வகையிலும் இருக்கும்.

*பெரும்பாலான வினாக்கள் மாணவர்களின் சிந்திக்கும் திறனையும் காரணகாரிய அறிவையும் அறிவியல் குறித்த புரிதலையும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கும்.

*வினாக்கள் ஆங்கிலம்,தமிழ் ஆகிய இருமொழிகளிலும் இருக்கும்.

*எழுத்துத்தேர்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவிலான பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.

*தேர்வில் மாநில அளவில் முதல் பத்து இடங்கள் பெறும் மாணவர்கள் அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கும் வாய்ப்பும் சிறப்புப்பரிசும் வழங்கப்படும்.

*அதிக மாணவர்கள் கலந்துகொண்ட பள்ளிகளுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.

*திறனறிதல் தேர்வு மதிப்பீடு முனைவர்.அ.வள்ளிநாயகம் அவர்களது தலைமையில் தஞ்சையில் நடைபெறும்.