தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்திரன் அவர்களை மாநாட்டையட்டி புதிய புத்தகம் பேசுது இதழுக்காக சந்தித்தோம். பல வேலைகளுக்கு இடையில் நமக்கு நேரம் ஒதுக்கி கொடுத்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
1980 இல் சென்னை ஐஐடி அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய விஞ்ஞானிகளில் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக இன்று சென்னை உச்சநீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சந்துரு, ஹிந்து பத்திரிகையைச் சேர்ந்த என். ராம், வெங்கடேஷ் ஆத்ரேயா, டாக்டர் சுந்தர்ராமன் இவர்களும் இணைந்து இந்த இயக்கத்தை ஆரம்பித்தார்கள்.
அறிவியல் இயக்கத்தை ஏன் துவக்கினார்கள். அல்லது ஏன் தேவையாக இருந்தது என்றால் அன்றைக்கு இருந்த அறிவியல் கொள்கைகளையும், உணர்ச்சிகளையும் தொழில்நுட்ப உணர்ச்சிகளையும் ஒரு விமர்சனப்பூர்வமாக பார்ப்பதும், சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கிறது என்பதற்காகத்தான். 80 முதல் 85ஆம் ஆண்டுவரை இந்த இயக்கம் அரங்க கூட்டங்கள் வாயிலாக மட்டுமே நடைபெற்றது. உதாரணமாக ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு வந்தால் அது பயன் இருக்கா, இல்லையா என்கிற விமர்சனம், கட்டுரைகள் எழுதுவது, கருத்தரங்கம் நடத்துவது போன்றவைகள் நடைபெற்றன.
85 க்குப் பிறகுதான் மக்களை நோக்கி களத்துக்கு சென்றது. இதை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக பார்க்கிறோம்.
அதிகமாக அறிவியலை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும். இதற்காக 1987 இல் ஒரு கலைப்பயணம் தொடங்குகிறாங்க. அது கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம் முழுவதும் சுமார் 60,000க்கும் மேற்பட்ட மக்களை சந்திக்கிறாங்க. இந்தப் பயணத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம், ரிஷிஷிறி ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்து இருந்தன. இந்தக் கலைப் பயணத்தில் அறிவியல் இயக்கம் வெளியிட்ட புத்தகங்களும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. அப்போது எழுத்தறிவு சார்ந்த வாய்ப்புகளும் பிரச்சனைகள் கண்டறியப்பட்டன.
மக்களிடம் என்ன மாதிரி பிரச்சனைகள் இருந்தன?
ப: அன்றைய சூழலில் ரத்தம் சம்பந்தமாக பிரச்சனை இருந்தது. ரத்தம் என்று சும்மா சொன்னாலே மக்கள் பீதி அடைந்துவிடும் சூழல் இருந்தது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் பற்றி தெரியாது. ரத்தம் கொடுத்துவிட்டால் மீண்டும் ஊறாது என்ற தவறான நம்பிக்கை இருந்தது. வயிற்றுப்போக்கு பற்றி மக்களிடம் நிறைய தவறான நம்பிக்கைகள் இருந்தன. வயிற்றுப் போக்கு அதிகம் ஏற்பட்டால் நிறைய தண்ணீர், உப்புக் கரைசல், சர்க்கரை கரைசல் என்று ஏதாவது கொடுக்கணும். ஏன்னா வயிற்றுப்போக்கால் நீர் இழப்பு ஏற்படும். நீங்கள் மருத்துவமனைக்கு சென்றா லும் முதலில் இதைத்தான் கொடுப்பார்கள். ஆனால் தண்ணீர் கொடுத்தால் வயிற்றுப்போக்கு அதிகமாகும் என்ற கருத்து மக்களிடம் இருக்கிறது. மேலும் பொதுவாக வயிற்றுப் போக்கால் கிராமங்களில் ஐந்து பேர், பத்து பேர் என்று தொடர்ச்சியாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இப்படி நடந்தால் பேய், பிசாசு என்று கருத்துகளும் இருந்தது. அதே நேரம் மக்களிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடந்தன. அவர்கள் எங்களிடம் நிறைய கேள்விகளை எழுப்பினார்கள். பேரா. மாடசாமி போன்றவர்கள் நிறைய புத்தகங்கள் எழுதினார்கள். புத்தகங்களில் இருந்த விஷயங்கள்
சாதாரணமாக இருந்தன பொதுவாக மக்கள் மத்தியில் சுகாதாரம் மற்றும் அறிவியல் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கின்றன. அதற்கு கல்வி என்பது விடுதலையாக இருக்கும். என்பதை வலியுறுத்தின.
கிராமங்களில் மரபுரீதியாக சில வைத்திய முறைகள் உள்ளன. அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
மரபு என்று சொல்கிறபோது, சில ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் என்று வருகிறபோது பாட்டி வைத்தியம், அஞ்சறைப் பெட்டி வைத்தியம், துளசியை சாறாக குடிப்பது போன்றவைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் இதோடு மரபு என்று சொல்லி சில தவறான விஷயங்களும் இருக்கிறது. பாம்பு கடித்தால் மருந்து கொடுக்கிறார்கள். அந்த மருந்து சில நேரம் கேட்கிறது, சில நேரம் கேட்பதில்லை. பேய், பிசாசு என்று சொல்லி மந்திரவாதியிடம் செல்வது, விபூதி மந்திரிப்பது போன்றவைகளும் இருக்கின்றன. ஒரு குழந்தைக்கு காய்ச்சல் என்றால் முதலுதவி கொடுக்காமல், விபூதி போடுவது, தண்ணி தெளித்தல், தொக்கு எடுத்தல் போன்றவைகள் இன்னமும் நடைமுறையில் இருக்கின்றன.
வத்திராய்ப்பு பக்கத்தில் தம்மிபட்டி என்கிற ஒரு கிராமத்தில் தொக்கு எடுப்பவர் சின்ன சின்ன உருண்டைகளாக கல், மண் ஆகியவற்றில் செய்து வைத்திருந்தார். இதையெல்லாம் வாயில் போட்டுத்தான் ஊதுவார்கள். இப்படி ஊதும்போது குழந்தைக்கு உள்ளே சென்றால் என்ன செய்வது? இதெல்லாம் விளக்குவதற்காக நாடகங்கள், பாடல்கள், கதைகள் மூலமாக சொன்னோம். இது நடந்தபோது சில ஊர்களில் எங்களை கற்களால் அடித்தார்கள். அதன்பிறகு ஓரளவிற்கு மாறினார்கள். பொதுவாக கிராமங்களில் மருத்துவமனை கிடையாது. ஆனால் ஊர் வழக்கப்படி மருத்துவச்சின்னு ஓருவர் இருப்பாங்க. இதனால் கர்ப்பிணி பெண்கள் இறப்புகள், குழந்தை இறப்பு அதிகமாக இருந்தது. ஆரம்பச் சுகாதார மையத்திலிருந்து உதவி செய்யுங்க, பிரசவம் என்பது கண்டிப்பாக மருத்துவமனையில்தான் நடக்க வேண்டும் என்ற பிரச்சாரம் செய்ததற்கு ஓரளவு பலன்கிடைத்தது.
மூட நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை விஞ்ஞான மனபான்மையோடு வாழ்வதற்கு என்ன முயற்சி செய்றீங்க?
மூட நம்பிக்கைன்னு சொல்ல முடியாது. தவறான நம்பிக்கைன்னு சொல்லலாம். யாரோ தவறாகக் கற்றுக் கொடுத்ததை தொடர்ந்து பின்பற்றி வர்றாங்க. அறிவியல் இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கு இருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டு சொந்தக்காலில் நிற்கணும் என்பதுதான். எதுவாக இருந்தாலும் கேள்வி கேட்கணும். பதில் சரி என்றால் எப்படி சரி, தவறு என்றால் எப்படி தவறு என்று பலவிதமான கேள்விகளை எழுப்பி தேடணும். உதாரணமாக மந்திரமா, தந்திரமா என்ற ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம். இது போன்று சிலர் ‘மேஜிக்’ நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்துறாங்க. இப்படி நடத்துகிறவர்கள் எப்படி நடத்துகிறோம் என்ற உண்மைகளை சொல்வதில்லை. ஆனால் அறிவியல் இயக்கத்தில் யார் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறோம். குறிப்பாக திருச்சிக்கு பக்கத்தில் பிரேமானந்தா வாய்க்குள்ளே இருந்து லிங்கம் எடுத்தார். விபூதி வரவைத்தார். மோதிரம் எடுத்தார். பாலியல் பிரச்சனை போன்றவைகளால் அவருக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. புதுக்கோட்டையில் இருக்கும் அறிவியல் இயக்கத் தொண்டர் மருதமுத்து என்பவருக்கு மந்திரமா, தந்திரமா என்ற மேஜிக் கலையைக் கற்றுக் கொடுத்து இருந்தோம். அவர் நீதிமன்றத்தில் லிங்கம் எடுத்தார். மோதிரம் எடுத்தார். நீதிபதியே அசந்து போனார். பிரேமானந்தா மிரண்டு போய்விட்டார். பிரேமானந்தாவிற்கு தண்டனை கிடைக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் ஒரு காரணமாக இருந்தது.
குழந்தைகள் மத்தியில் என்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள்?
குழந்தைகள் மத்தியில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலும் சரி, இன்றைக்கும் சரி ஆங்கிலமோகம் என்பது அதிகமாக இருக்கிறது. கல்விச் சூழல் என்பது விளையாட்டாக கலந்துரையாடலாக இல்லாமல் அச்சுறுத்துவதாக உள்ளது. வகுப்பறைகள் என்பது கேள்வி கேட்கிற இடமாக இல்லை. அறிவியல் என்பதும் செயல்முறை விளக்கமாக இல்லாமல் மனப்பாடமாகவே இருக்கிறது. தண்ணீரின் கொதிநிலை என்ன என்று தமிழகத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளில் கேட்டாலும் 100 டிகிரி செல்சியஸ் என்ற பதில் கிடைக்கும். இதை செய்து பார்த்தார்களா? என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் குழந்தைகளுக்கு அறிவியலை சொல்லித்தர துளிர் என்ற பத்திரிகை வருகிறது. 15,000 பத்திரிகைகள் போய் கொண்டிருக்கிறது. குழந்தைகள் படிக்கிறாங்க. குழுவாக விவாதிக்கிறாங்க. கேள்விகளை எழுப்புறாங்க. இது மாதிரியான விஷயங்கள் தொடர்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்று மத்திய அரசின் உதவியோடு நடத்தி வருகிறோம். குழந்தைகள் பலர் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்புக் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். அந்தத் தலைப்பில் குழந்தைகள் மூன்று மாதம் ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்வு என்பது கிராமங்களுக்கு சென்று சேகரிப்பது, இந்த துறைசார்ந்த நபர்களை சந்தித்து ஒரு மாற்று சிந்தனையை, பொருட்களை முன் வைப்பார்கள். இதன் மூலம் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிற்கு வளர்ந்து குழந்தை விஞ்ஞானின்னு பட்டத்தை வாங்குறாங்க.
உதாரணமாக ராமலெஷ்மின்னு ஒரு பொண்ணு சிவகாசியில் தீப்பெட்டி ஆபிசுக்கு வேலைக்கு போயிட்டு இருந்தது. ஐந்தாம் வகுப்புக்கு மேலே படிக்கலை. ஒருநாள் எங்க அலுவலகத்திற்கு வந்து, ‘நான் ஆராய்ச்சி பண்ணனும். அறிவியல் இயக்கத்தில் வாய்ப்பு கொடுக்கிறீங்களாமே என்று கேட்டாங்க. அதற்கு படிச்சவங்களே பண்ண முடியாது. நீங்க எப்படி செய்ய முடியும் என்று எங்களுக்கு இருக்கும் பொது புத்தியில் சொன்னோம். மறுநாள் அந்த பொண்ணு திரும்ப வந்து எனக்கு தெரிந்த மெட்ரிகுலேசனில் படிக்கிற அக்கா ஆராய்ச்சி செய்றாங்க. நானும் செய்யணும்னு சொன்னாங்க. நாங்களும் சரின்னு சொன்னோம். அந்தக் குழந்தை ‘ஏழைகளின் ஊட்டச்சத்து’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொன்னது. அந்தக் குழந்தை சொன்னது கம்பு, கேழ்வரகு போன்ற நவதானியங்களைதான். கடையில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை விட இந்த குழந்தை தயாரித்த ஊட்டசத்தில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் இருந்தது ஆய்வில் நிரூபிக்கப்பட்டது. அந்தக் குழந்தை இன்று ஒரு தன்னம்பிக்கையோடு படித்துக் கொண்டிருக்கிறது. பத்தாவது வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து இருக்கிறது. இரா. நடராசன் எழுதிய ஆயிஷா மறைந்து விட்டாள். இந்த ஆயிஷா கொஞ்சம் மேலே வந்து இருக்கிறாள். கணக்கும் இனிக்கும் என்ற திட்டத்தில் கணக்கு பயிற்றுவிப்பது பற்றி ஆசிரியர்களுக்கும், பயில்வதை மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கிறோம். இந்தக் கல்வித் திட்டத்தில் குழந்தைகள், ஆசிரியர்கள், மக்கள் என்ற இந்த மூன்று பிரிவினரும் பங்கேற்கணும் என்று உருவாக்கி வருகிறோம். ஆசிரியர்களுக்காக ‘விழுதுகள்’ என்ற இதழும் வெளியிடப்படுகிறது.
சமச்சீர் கல்வியில் அறிவியல் இயக்கத்தின் பங்கு என்ன?
1993 இல் கற்பது கற்கண்டு என்கிற ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். தமிழ் நாட்டில் இருக்கும் எல்லாப் பள்ளிக் கூடங்களுக்கும் ஒரு பெரிய அசைவை ஏற்படுத்தியது இந்த இயக்கம். உடனே அரசாங்கம் ‘கற்றலில் இனிமை’ என்கிற திட்டத்தை கொண்டு வந்தாங்க. கல்விச் சூழல் மாறுவதற்கு தொடர்ச்சியாக இயக்கங்கள் நடத்திக்கிட்டு வருகிறோம்.
இன்றைக்கு செயல்வழி கற்றல்பற்றி ஒரு விவாதம் நடத்துவதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உந்துசக்தியாக இருக்குது. இது பற்றி ஆசிரியர்களையும், மக்களையும் தமிழகம் முழுவதும் சந்தித்து ஆய்வு செய்தோம். அதை கோரிக்கையாக வைத்திருக்கிறோம். அதே நேரம் அரசாங்கம் கொண்டு வருவதை ஆதரிக்கணும். இந்தக் கல்வி திட்டத்தைப் பற்றி ஒவ்வொருத்தருக்கு ஒரு கருத்து இருக்கும். எல்லாரையும் ஒன்று திரட்டி பொது கருத்து உருவாக்கப்படணும். இதற்காக அக்டோபர் 2, 3, 4 இல் மேட்டுப்பாளையத்தில் நடக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாட்டில் ஒரு பெரிய விவாதத்தை துவங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் ஷி.ஷி.கி முன்னாள் இயக்குநர் விஜயகுமார், கல்வியாளர் ஷி.ஷி. ராஜகோபாலன், டாக்டர் இராமானுஜம் கேரளாவைச் சேர்ந்த கல்வியாளர் மதுசூதனன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மை இல்லாத சூழலில் அறிவியல் கல்வி கற்பிப்பது பற்றி....
ஆசிரியர்களுக்கு அறிவியல் மனப்பான்மை இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. வாய்ப்புகள் இல்லைன்னு சொல்லலாம். காட்டாம்பாக்கம் என்ற ஊரில் சக்திவேல் என்று ஓர் ஆசிரியர் இருக்கிறார். அவர் கலிலியோ பற்றி விதவிதமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இத்தனை திறமைகளோட இருக்கிற ஆசிரியர் ஒரு வகுப்பறைக்குள் சென்றவுடன் சராசரி மனிதராகி விடுகிறார். அவருக்கு இடப்பட்ட ஆணை என்பது பாடத்தை வாசித்துகாட்டுவது, குழந்தைகள் படிக்கணும், இவர் நடத்துகிற பாடத்தில் குழந்தைகள் பெயிலாகக் கூடாது என்பதுதான். அப்படி குழந்தைகள் பெயிலானால் ஆசிரியர்தான் தப்பு செய்கிறார் என்று ஆசிரியரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற சூழல்தான் இருக்கிறது.
ஓர் ஆசிரியர் எதுவும் செய்து காண்பிக்க வேண்டுமென்றால் அரசு என்ன உபகரணங்களை கொடுத்து இருக்கிறது? அட்டையிலதான் செய்றாங்க. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சொல்வது இன்றைக்கு இருக்கும் பாடத்திட்டத்தோடு குழந்தைகள் ஆய்வு செய்வதற்கு தனியாக ஒரு பாடதிட்டத்தை உருவாக்கணும். ஒவ்வொரு குழந்தையும் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கணும். இந்த வாய்ப்புகளில் குழந்தைகள் படிக்கும்போது எதிர் காலத்தில் ஒரு நல்ல மாற்றமாக அமையும். ஆர்வம் இருக்கும் ஆசிரியர்களை அறிவியல் இயக்கம் கண்டு எடுத்து, அவர்களின் திறமைகளைக் கண்டெடுத்து, அறிவியல் இயக்கம் செய்கிற பரிசோதனைகளை ஆசிரியர்களுக்கு கொடுக்கிறோம். இதில் எல்லா ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும்.
கே: இந்த மாநாடு பற்றி:
ப: இந்த மாநாடு மிக முக்கியமானது. இந்தியா முழுவதும் வறட்சி இருக்கு. உணவு பாதுகாப்பு சட்டம் வந்திருக்கு. இந்தச் சட்டம் ஏழை எளிய மக்களை பாதிக்க கூடியதாக இருக்கு. அரசின் சூழ்நிலையும் மாறி வருகிறது. ‘அறிவியலும் மக்களின் வாழ்வாதார உரிமைகளும்‘ என்ற கருப் பொருளை வைத்துதான் மாநாடு நடக்க இருக்கிறது. ஏனெனில் இன்றைக்கு உரிமை என்கிற விஷயம் சலுகை என்று மாறி இருக்கிறது. அரசு என்பது தம்முடைய குடிமகன்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது கடமை. இதுதான் உரிமை. இந்த உரிமையை தலைநிமிர்ந்து கேட்காமல் ஒரு ரூபாய் அரிசிக்காகவும், கலர் டி.வி. பெட்டிக்காகவும் தன்னை தாழ்மைப்படுத்திக் கொண்டு வாங்கக் கூடிய சூழல் இருக்கிறது. இதில் ஐநூறுக்கு மேற்பட்ட பிரதிகளும் விஞ்ஞானிகளும் விவாதிக்கப் போகிறார்கள். இம் மாநாட்டையட்டி அறிவியல் இயக்கம் பத்து நூல்களையும், பாரதி புத்தகாலயத்தோடு சேர்ந்து பத்து நூல்களையும் வெளியிடுகிறோம்.. கைகளால் நூறு விளையாட்டுகளை விளையாடலாம், 2009 ஆம் ஆண்டு வானியியல் ஆண்டு அதையட்டிய பாடல்கள், மந்திர தந்திரமா போன்ற குறுந்தகடுகள் வெளியிடப்படுகிறது. சிறப்பு புத்தகக் காட்சிகளும் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment