முதல் பக்கம்

Nov 14, 2010

சுலபமாக தண்ணீர் கொதிக்கவைக்கும் சாதனம் - சத்திரக்குடி மாணவர்கள் சாதனை

Monday, 15 December 2008
பரமக்குடி டிச 15 : சுலபமாக தண்ணீர் கொதிக்கவைக்கும் சாதனம் - சத்திரக்குடி மாணவர்கள் சாதனை : எளிய முறையில் தண்ணீரைக் கொதிக்க வைப்பது எப்படி? என்று ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து சத்திரக்குடி பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
ஆய்வுக் கட்டுரை
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான ஆய்வுக் கட்டுரை போட்டி கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகமது சபீர், ராஜேஷ் குமார், நந்தினி, மணிகண்டன், சாபீரா பர்வின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர். இவர்களது ஆய்வு கட்டுரைக்கு மாநில அளவில் முதலிடம் கிடைத்துள்ளது.
இதேபோல மாநில அளவில் ஜுனியர் பிரிவில் 15 ஆய்வு கட்டுரைகளும், சீனியர் பிரிவில் 15 ஆய்வு கட்டுரைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுக்களின் தலைவர்கள் வருகிற 27-ந்தேதி நாகலாந்தில் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
சாதனம்
இதன்படி மாணவன் முகமது சபீர் நாகலாந்து செல்கிறார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது : தற்போது எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நோய்கள் நீரின் மூலமே பரவுகிறது. எனவே அனைவரும் நீரை கொதிக்க வைத்து அருந்துவதற்கு சூரிய ஒளியில் நீரை கொதிக்க வைக்கும் சாதனத்தை பழைய டயர், கண்ணாடி, மரப்பலகை, கருப்பு பெயிண்ட் அடித்த அலுமினிய பாத்திரம் இவற்றை கொண்டு உருவாக்கி உள்ளோம்.
இதில் பலகையின் மேல் டயரை வைத்து அதன் நடுவில் நீர் நிரம்பிய அலுமினிய பாத்திரத்தை வைக்க வேண்டும். பின்னர் டயரின் மேல் பகுதியை கண்ணாடியை வைத்து மூடவேண்டும். கண்ணாடி வழியாக உள்ளே செல்லும் சூரிய ஒளி பாத்திரத்தை வெப்பப்படுத்துகிறது. மேலும் உள்ளே இருக்கும் காற்று சூடாகி அது வெளியேற முடியாமல் பாத்திரத்தை வெப்பப்படுத்துகிறது. இதனால் நீர் விரைவில் சூடாகிறது. இதனை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதில்லை. இலவசமாக சூடான நீரை தினமும் பெற முடியும். இவ்வாறு அவர் கூறி னார்.
பாராட்டு
மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ள இந்த ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த மாணவ-மாணவிகளையும், வழிகாட்டிய ஆசிரியர் வெங்கடேசனையும், பள்ளி தலைமை ஆசிரியர் கதிரேசன், உதவி தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். 

செய்தி : முதுவை ஹிதாயத்

No comments:

Post a Comment