மதுரை
ஜூலை 10, 11-ல் துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா
First Published : 07 Jul 2010 10:29:15 AM IST
மதுரை, ஜூலை 6: மதுரையில் ஜூலை 10, 11 தேதிகளில் பள்ளிக் குழந்தைகளுக்கான துளிர் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து அமெரிக்கன் கல்லூரி முதல்வர் டி.சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரித் தொழில் நுட்பத் துறை பேராசிரியர் கிருஷ்ணசாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூறியது: துளிர் இல்லம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அமெரிக்கன் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த அறிவியல் திருவிழாவை நடத்துகின்றன. ஊராட்சி ஒன்றியப் பள்ளிக் குழந்தைகளும், மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளும் அறிவியலை எளிமையாகக் கற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த விழா நடத்தப்படுகிறது. அறிவியல் விழாவின்போது மதுரை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவியரும், தேனி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 200 பேரும் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவை அமெரிக்கன் கல்லூரி உணவு விடுதி மூலம் அளிக்கப்படுகிறது. அறிவியலில் உள்ள தற்கால தொழில் நுட்பங்களான நியூட்ரினோ, உயிரித் தொழில் நுட்பம், பல்லுயிரியம் மற்றும் காலநிலை மாறுபாடு குறித்த தலைப்புகளை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 10-ம் தேதி இரவு விண்வெளி குறித்த தகவல்களையும், வானில் தெரியும் கிரகங்களையும் மாணவர்கள் கண்டுகளிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை கணித அறிவியல் மையத்தைச் சேர்ந்த இந்துமதி, பேராசிரியர் கி.முத்துச்செழியன், தொழிலதிபர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். நிறைவு விழாவில் ஹைடெக் அராய் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.டி.பங்கேரா, குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறார் என்று தெரிவித்தனர். பேட்டியின்போது, ஹைடெக் அராய் நிறுவனத்தின் சி.வி.சிதம்பரம், துளிர் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment