பிப்ரவரி 27,2010,
மதுரை :
தேனியில் அமைய உள்ள "நியூட்ரினோ' ஆய்வுக் கூடத்தால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்விநிலையங்களில் அறிவியல் தொழில்நுட்ப அறிவு ஓங்கி வளரும்,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் "நியூட்ரினோ' ஆய்வுக் கூடம் அமைய உள்ளது. இரண்டு கி.மீ., தொலைவுக்கு மலையை குடைந்து, அமைக்கப்படும் இந்த ஆய்வுக் கூடத்தில், கோள்கள் உட்பட விண்வெளியில் உள்ள பொருட்களில் இருந்து கிடைக்கப் பெறும், துகள்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். இந்த ஆய்வுக்கு தேவையான கடின பாறைகள் இப்பகுதியில் இருப்பதால், மத்திய அரசு இந்த இடத்தை தேர்வு செய் துள்ளது. இந்த ஆய்வுக் கூடத் தால் பாதிப்பு ஏற்படுமோ என இப்பகுதி பொதுமக்கள், குறிப்பாக விவசாயிகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையம், அணுசக்தி மையம் போன்ற அமைப்பு இல்லை. இதனால் எவ்வித பாதிப்பும் வராது என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையூட்டினாலும், பலர் அவநம்பிக்கையில் உள்ளனர்.
மாணவியின் இமெயில் கடிதம்:
இந்நிலையில் திண்டுக்கல் காந்திகிராம் பல்கலை மாணவி பிரியதர்ஷினி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் இதுகுறித்த தனது சந்தேகத்தை இ மெயில் மூலம் கேட்டுள்ளார். அதில், ""எனது சொந்த மாவட்டமான தேனி இயற்கை வளம் உள்ளது. எண்பது சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். அரசாங்கம், நியூட்ரினோ ஆராயச்சிக் கூடத் திற்கு தேவாரத்தை தேர்ந்தெடுத்துள்ளது. இத் திட்டப் பணிகள் இங்கு நடக்குமானால், அது எதிர்காலத்தில் இயற்கை வளம், மனிதவளத்தை பாதிக்கும். இதனால் மக்களுக்கு ஏதாவது நன்மை உண்டா? இத்திட்டத்தை சேர்ந்தவர்கள் இதற்காக ஐந்தாயிரம் அடி ஆழம் நிலத்தை தோண்ட வேண்டும் என்றுகூறினர். கழிவுப் பொருளை எங்கு போடுவார்கள்? அது விவசாய நிலங் களை பாதிக்கும் என்று கருதுகிறேன். ஆகவே இத்திட்டம் பற்றி தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்,'' என தெரிவித்து இருந்தார்.
அப்துல்கலாம் பதில்: இதையடுத்து அப்துல்கலாம் இ மெயிலில் அவருக்கு பதிலளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நியூட்ரினோ திட்டம் நியூட்ரினோவின் எடை வரிசையை அறிவியல் முறையில் ஆராய்ந்து கண்டு பிடிக்கும். தேனி பகுதியிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் உள்ள, அறிவியல் நிலையங்களும், கல்லூரிகளும் இந்த நியூட்ரினோ திட்டத்தால், மேலும் வலுப்படுத்தப்படும். நான் அறிவியலாருடன் கலந்து ஆலோசித்த போது, தோண்டி எடுக்கப்படும் கற்கள், நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் மற்றும் சாலைகள் உண்டாக்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினர். பொதுமக்களும் இதனால் பயனடைவர். ஐரோப்பாவில் உள்ள செர்ன் ஆராய்ச்சி நிலையம், அதன் பெரிய ஹாட்ரான் கொல்லைடர் திட்டத்தால் புகழடைந்தது போன்று, தேனியும் அதன் சுற்றுவட்டாரமும், நியூட்ரினோ அறிவியல் திட்டத்தால் புகழடையும். திட்டத்தில் உள்ளவர்கள், இந்த வட்டாரத்தின் சுற்றுப்புறச் சூழலின் முழுத்தேவைகளை கவனத்தில் கொண்டு செயல்படுத்துவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment