முதல் பக்கம்

Nov 6, 2010

வானில் தோன்றிய நெருப்பு வளையம் : ராமேஸ்வரத்தில் முழு சூரிய கிரகணம் : தமிழகம் முழுவதும் மக்கள் பரவசம்

ஜனவரி 16,2010,00:00  IST
ராமேஸ்வரம் : தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தனுஷ்கோடியில், 10 நிமிடம் தோன்றிய கங்கண சூரிய கிரகண அற்புதக் காட்சியை, ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். வானில் தோன்றிய நெருப்பு வளையத்தை, நாடு முழுவதும் மக்கள் பார்த்து மகிழ்ந்தாலும், தனுஷ்கோடியில் பார்த்தது, "நூறு ஆண்டுகளில் யாரும் பார்த்திராத அரிய காட்சி' என, விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் சந்திரன் வரும் போது, சூரியன் மறைக்கப்படுவதால் கிரகணம் ஏற்படுகிறது. சூரியன் வடிவம் பெரிதாகவும், சந்திரனின் வடிவம் சிறியதாகவும் இருப்பதால், சந்திரனால் சூரியனை முழுவதும் மறைக்க முடியாது. இதனால், சந்திரனை சுற்றி, சூரியன் ஒரு வளையம் போல் காட்சியளிக்கும். இதுவே, கங்கண சூரிய கிரகணம் (ஆன்யுலர் எக்லிப்ஸ்) எனப்படுகிறது. கங்கண சூரிய கிரகணத்தின் மையப் பாதை செல்லும் வழி, இந்திய பெருங்கடலில், மன்னார் வளைகுடாவிற்கும், பாக் ஜலசந்தி கடலுக்கும் நடுவில் உள்ள தனுஷ்கோடி பகுதியை தொட்டுச் செல்வதால், கிரகண நிகழ்வு, 93 சதவீதம் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் தெரியும் என கூறப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இரண்டு நாட்களுக்கு முன்பே வந்திருந்த விஞ்ஞானிகளும், செய்தியாளர்களும் நேற்று அதிகாலையே தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் முகாமிட்டனர்.


நேற்று காலை 10.45 மணிக்கு மத்திய ஆப்ரிக்க மக்களால் பார்க்கப்பட்ட சூரிய கிரகணத்தை, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 11.05க்கு காண முடிந்தது. தனுஷ்கோடி பகுதியில் காலை 11.20 முதல் சூரியன் மறையத் துவங்கியது. தொடர்ந்து சிறிது, சிறிதாக நகர்ந்த சந்திரன், மதியம் 1.17க்கு சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நேர்க்கோட்டில் வந்தபோது, முழு கங்கண சூரிய கிரகணம் ஏற்பட்டது. சந்திரனைச் சுற்றி, ஜொலிக் கும் சூரிய ஒளி வளையம் தோன்றியது. சூரியனின் மையப்பாதையில் தென்கிழக்கு திசையில் நுழைந்த சந்திரன், கிரகண நிகழ்வுக்குப் பின், வடமேற்கு திசையில் வெளியேறியது. தனுஷ்கோடியில் 10 நிமிடம் ஏழு வினாடிகளுக்கு, இந்த கங்கண கிரகணம் காட்சி தந்தது. இந்த அதிசய நிகழ்வை பார்த்த பலரும், உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். விஞ்ஞானிகளும், பொதுமக்களுடன் கைகுலுக்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


100 ஆண்டுகளில் யாரும் பார்த்திராத அரிய காட்சி: தனுஷ்கோடியில் 10 நிமிடம் தோன்றிய கங்கண சூரிய கிரகணம் "தென் மாவட்டங்களில் நூறு ஆண்டுகளில் யாரும் பார்த்திராத அரிய காட்சி' என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தனுஷ்கோடியில் 93 சதவீதம் கங்கண சூரிய கிரகணம் தெரிந்ததால், இதை காண கோல்கட்டா, புனே, மும்பை, ஆந்திரா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விஞ்ஞானிகள், அறிவியல் ஆர்வலர்கள் அதிகளவில் தனுஷ்கோடி வந்திருந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பல்கலை கழக மாணவர்களும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் அதிகளவில் மாணவர்கள் ராமேஸ்வரம் வந்திருந்தனர். வெளிநாட்டினரும் ஏராளமானோர் தனுஷ்கோடி வந்திருந்தனர். ராமேஸ்வரம் தீவு முழுவதும் வீடுகளின் மொட்டை மாடியில் நின்றப்படி பொதுமக்கள், கிரகண நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.


பொங்கல் சாப்பிடும் நிகழ்ச்சி: அறிவியல் இயக்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் கிரகண நிகழ்வின் போது நேரடியாக வர்ணனை செய்தனர். பொது மக்கள் பார்க்கும் வகையில் டெலஸ்கோப்புகள் அமைத்திருந்தனர். கிரகண நிகழ்வின் போது பொங்கல் சாப்பிடும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்ணாடிகளும் விற்கப் பட்டன. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் போட்டோகிராபர்கள் மற்றும் செய்தியாளர்களும் ராமேஸ்வரம் , தனுஷ்கோடி கடலோரத்தில் முகாமிட்டு கிரகண காட்சிகளை பதிவு செய்தனர்.


ஸ்ரீ திபாஸ் தாஸ் குப்தா (விஞ்ஞானி, பிர்லா கோளரங்கம் கோல்கட்டா): 1965ல் வடமாநில பகுதியில் கிரகணம் தோன்றினாலும், அது முக்கியத்துவம் பெறவில்லை. தற்போது மீடியாக்களின் வரவால் நாடு முழுவதும் கிரகணம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் இயற்கை சூழல் மாற்றமோ, உயிரினங்களுக்கு பாதிப்போ ஏற்படாது. கருவிழி பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தில் பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளதால், கிரகணத்தின் போது சூரியனை கண்களால் பார்க்க கூடாது, என்றார்.


பார்த்தசாரதி (விஞ்ஞானி, கல்பாக்கம் அணுமின் நிலையம்): எதிர்பார்த்ததை விட பொதுமக்கள் அதிக அளவில் வந்துள்ளனர். வானியல் அறிவியலாளர்களும் அதிக அளவில் வந்துள்ளனர். புத்தகத்தில் மட்டுமே படித்து வந்த மாணவர்களுக்கு, இதை நூறு ஆண்டுகளுக்கு பிறகு யாரும் பார்த்திராத அரிய கங்கண சூரிய கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. இது,எதிர்கால அறிவியல் வளர்ச்சிக்கு மைல் கல்லாக அமையும், என்றார். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் சூரிய கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்.

No comments:

Post a Comment