முதல் பக்கம்

Nov 14, 2010

ஸரிகபதஸ

 ஸரிகபதஸ


மோகனா அன்று
தஞ்சாவூரில் சோழம்பேட்டை.
விவசாய கிராமம்.
பெண்கள் படிக்க ஆரம்பித்திருந்த காலம்.
சுமார் ஆறு மைல் தூரத்தில் இருந்தது
மேல்நிலைப் பள்ளி.
அந்த வீட்டின் முதல் குழந்தை மோகனா.
படிப்பில் ஆர்வம் அதிகம்.
வீட்டு வேலை, தோட்ட வேலை,
மாடு மேய்த்தலோடு படிப்பையும்
தொடர வேண்டிய கட்டாயம்.
விடுமுறையில் கையில்
புத்தகத்துடன் மாடு மேய்க்கச் செல்வார்.
படிப்பில் கவனம் அதிகமாகி விட்டால்,
மாடுகளையே மறந்துவிடுவார்.
ஆறு மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய
பள்ளிக்கு எல்லா குழந்தைகளும்
எட்டு மணிக்கே கிளம்பி விடுவார்கள்.
ஆனால் மோகனா ஒன்பது நாற்பதுக்குத்தான்
வேலைகளை முடித்துவிட்டுக் கிளம்புவார்.
ஓட்டமும் நடையுமாகச் சென்று,
பத்து இருபதுக்குச் சரியாகப்
பள்ளிக்குள் நுழைந்துவிடுவார்.
முதல் வரிசையில்தான் உட்கார்வார்.
பாடங்களை உன்னிப்பாகக் கவனிப்பார்.
படிப்பின் மீது ஆர்வம் இருந்ததைப்
போலவே அவருக்கு இயற்கை, விலங்குகள்,
பறவைகள், மனிதர்கள் மீதும் ஆர்வம் இருந்தது.
மோகனாவுடன் படித்த
அந்த ஊர்ப் பெண்கள் எல்லாம்
ஃபெயிலாகியோ அல்லது பருவம் அடைந்தோ
படிப்பை விட்டிருந்தார்கள்.
மோகனா ஃபெயிலாக வாய்ப்பில்லாததால்,
அவர் எப்போது பருவம் அடைவார்,
படிப்பை எப்போது நிறுத்தலாம்
என்று வீட்டில் காத்திருந்தனர்!
பள்ளிப் படிப்பை முடித்த பிறகுதான்
பருவம் அடைந்தார்.
அதற்குப் பிறகு படிக்கக்கூடாது என்றார்கள்.
ஒருமாதம் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து,
பட்டினி கிடந்தார் மோகனா.
பரிதாபப்பட்ட சித்தப்பா, பியுஸியில் சேர்த்துவிட்டார்.
பியுஸி முடித்ததும்
மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தார்.
மதிப்பெண்கள் அதிகம். எளிதாக இடம் கிடைத்தது.
ஆனால் தன்னால் படிக்க வைக்க முடியாது
என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் அப்பா.
ஏதோ காரணத்தால்
அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு
அம்மா பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
வீட்டைப் பார்த்துக்கொள்ள
உறவினர்களை வைத்தார் அப்பா.
சாப்பாட்டுக்குக் கொடுக்கும் பணத்தை
உறவினர்கள் பத்து நாள்களுக்குள்
செலவழித்து விடுவார்கள்.
அதற்குப் பிறகு?
தென்னை ஓலைகளை வாங்கி,
கூடை முடைந்து கொடுப்பார் மோகனா.
நாள் முழுவதும் கூடை முடைந்தால்
75 பைசா முதல் 1 ரூபாய் வரை கொடுப்பார்கள்.
இதிலும் ஒன்றிரண்டு பைசாவை
மிச்சம் பிடித்து, ஹிந்து பேப்பர் வாங்கிப் படிப்பார்.
ஓர் ஆண்டு சென்றது.
கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தார்.
பிஎஸ்ஸி (விலங்கியல்) கிடைத்தது.
மீண்டும் வீட்டில் ஒரு யுத்தம்.
பாட்டியின் வற்புறுத்தலால்
இறுதியில் படிக்க அனுப்பினார் அப்பா.
பேராசிரியர்கள் எல்லோரிடமும் நல்ல பெயர் கிடைத்தது.
கல்லூரிகளில் நிறைய நண்பர்கள்.
அதில் முக்கியமானவர் சோமு.
மோனாவின் பக்கத்து ஊர்க்காரர்.
எம்.ஏ படித்துக்கொண்டிருந்தார்.
அழகாக ஆங்கிலம் பேசுவார். எழுதுவார்.
இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது..
மூன்று ஆண்டுகள் முடிந்தன. .
டிகிரி கிடைத்துவிட்டது.
வங்கி வேலைக்கு முயற்சி செய்தார்.

விஷயம் கேள்விப்பட்ட அவருடைய அப்பா,
‘படிப்பு சொல்லிக் கொடுக்கற வேலை
செய்றதா இருந்தால் செய்.
இல்லைன்னா வேலைக்கே போக வேண்டாம்’
என்று கறாராகச் சொல்லிவிட்டார்.
‘என்ன செய்வது?
மோகனாவுக்கு ஒரு யோசனை வந்தது.
‘அப்பா, நம்ம சொத்து எல்லாம்
தாத்தா சம்பாதித்ததுதானே?
எனக்கும் அதுல பங்கு இருக்கு
. என் பங்கை அடகு வச்சு
கொடுத்தீங்கன்னா நான் எம்எஸ்ஸி படிப்பேன்..’

மோகனா நேற்று
‘உன்னைப் படிக்க வச்சது தப்பாப் போச்சு.
சொத்தா கேக்குற சொத்து?
பொட்டைப்புள்ளைக்கு சொத்து வேணுமாம்ல…’
என்று கேட்டு, அடித்து விட்டார்.
பரிந்து பேச
இப்போது பாட்டியும் இல்லை.
அப்போதுதான் சோமுவிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.
மோகனா வீட்டில் இல்லை.
சித்தப்பா வாங்கிப் படித்தார்.
கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது.
ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்ததால்,
ஓரளவு கடிதத்தைப் படித்தார்.
கோபம் தலைக்கேறியது.
அண்ணன், அண்ணியிடம் கத்தினார்.

‘அந்தக் கீழ்சாதிப்பய கடிதம் எழுதியிருக்கான்.
ரெண்டுபேரும் ஊரை விட்டு ஓடிப் போயி,
கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டிருக்கான்.
இவளுக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும்?’

‘அடிப்பாவி. இப்படிப் பண்ணிட்டாளே….
நான் என்னங்க பண்ணறது?’
செய்தி கேட்டு உறவினர்கள் கொதித்துப் போனார்கள்.
‘இங்க பாரு, நமக்கு மானம்தான் முக்கியம்.
கீழ்சாதிப் பயலோட  வாழறதுக்கு,
அவ செத்துப் போயிடலாம்..
இன்னும் மூணு குழந்தைங்க உனக்கு இருக்கு…
அவங்க எதிர்காலம் இவளால பாழாயிடும்…’
கோபத்தில் இருந்த அப்பாவுக்கும்
அது சரியென்று தோன்றியது.
எல்லோரும் சேர்ந்து, மோகனாவுக்குப் பிடித்த
அல்வாவில் விஷம் வைத்துக் கொல்வது
என்று தீர்மானித்தார்கள்.
வீட்டில் இருந்த பெண்கள்
கூடிக் கூடிப் பேசியதில் விஷயத்தை
யூகித்து விட்டார்.
ஆனால் அதற்கான
காரணம்தான் புரியவில்லை மோகனாவுக்கு.
மறுநாள்
மாமாவும் சித்தப்பாவும்
மோகனாவை வெளியூருக்கு
அழைத்துச் சென்றார்கள்.
சித்தப்பாவே விஷயத்தை ஆரம்பித்தார்.
‘உன்னை நம்பித்தானேம்மா படிக்க வச்சோம்.
இப்படிப் பண்ணிட்டீயே?
அந்தப் பயலோட ஓடிப் போற அளவுக்குப் போயிட்டீயே?’
‘எந்தப் பையன்? என்ன சொல்றீங்க?’
‘இந்தக் கடிதாசியைப் பாரு.’
‘இதுல அப்படி ஒண்ணும் எழுதலை சித்தப்பா.
அடுத்து நான் என்ன படிக்கலாம்,
எந்த எந்த இடத்துல
என்ன படிப்பு இருக்குன்னுதான் எழுதிருக்கு…’
‘உன்னை நம்ப மாட்டேன். பொய் சொல்லாத…’
‘யார் கிட்ட வேணாலும் காட்டிப் படிக்கச் சொல்லுங்க.’
அந்த ஊர்
வாத்தியார் மகனிடம்
கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள்
‘உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா?
படிப்பு பத்திதான் எழுதிருக்கு…
உங்க பொண்ணுகிட்ட
யாராவது வம்பு பண்ணினா செருப்பை எடுத்துடும்.
அதனால பையன்கள் எல்லாம் பயப்படுவாங்க.
உங்க பொண்ணைப் படிக்க வைங்க,
உங்க பரம்பரையே முன்னேறும்…’

மீண்டும் ஊருக்குத் திரும்பினார் மோகனா.
வசதியான தோழிகளிடம் படிப்பதற்கு உதவி கேட்டார்.
அவர்கள் எல்லாம் சந்தோஷமாகப் பணம் கொடுத்தார்கள்.
வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு,
எம்எஸ்ஸி படிக்கச் சென்றார்.

‘எந்தப் பையனையும் காதலிக்க மாட்டேன்னு
சத்தியம் பண்ணிட்டுப் போ….’
‘சத்தியமா காதலிக்க மாட்டேன்…’
முதல் ஆண்டு படிப்பு முடியும்போது,
மோகனாவின் அப்பா நிலத்தை அடகு வைத்து,
பணம் கொண்டு வந்தார்.
தோழிகளிடம் வாங்கிய கடன்கள்
எல்லாம் அடைக்கப்பட்டன.
சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.
பழநியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில்
இருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தனர்.
அந்தக் கல்லூரியில்
120 ஆண்களுக்கு மத்தியில்
ஒரே பெண்ணாக வேலை செய்தார் மோகனா.
அங்குதான்
இனிய நண்பர் அருணந்தியின் அறிமுகம் கிடைத்தது
. அவர் மூலம்
கல்லூரி ஆசிரியர் சங்கத்தில் சேர்ந்தார்.
பல முறை போராட்டாங்களில்
கலந்துகொண்டு சிறை சென்றார்.

மோகனாவின் அப்பா வந்தார்.
தூரத்து உறவு
என்று சொல்லி ஒரு மாப்பிள்ளையைக்
கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னார்.
இந்த விஷயத்திலாவது
அவர்கள் சொல்வதைக் கேட்கலாம்
என்று முடிவு செய்தார் மோகனா.
திருமணமாகி ஒரு வாரத்துக்குப் பிறகு,
‘சோமுவைக் காதலிச்சியா?’
‘இல்லை…’
‘நான் எப்படி நம்பறது?’
‘காதலிச்சிருந்தா அவரையே கல்யாணம் செஞ்சிருப்பேன்…’
திருமணம் நடந்து மூன்று மாதங்கள்
வரைதான் வேலை செய்தார் கணவர்.
ஒவ்வொரு வேளையும் விதவிதமாகச்
சமைக்க வேண்டும்.
குழந்தை உண்டானதால்
கடுமையான வாந்தி. சோர்வு.

ஆனாலும்
வீட்டில் எந்த வேலையிலும் குறை வைக்கக்கூடாது.
யாராவது உறவினர்கள் வீட்டுக்கு வந்துவிட்டால்,
அன்று கண்டிப்பாக அடிக்க ஆரம்பித்து விடுவார்.
தான் இந்த வீட்டின் தலைவன் என்று நிரூபிக்க முயல்வார்.
அடிக்கடி சந்தேகம்.
சண்டை.
மோகனா கல்லூரிக்குச் சென்று வருவதற்குள்,
தன் மகனிடம்
அவரைப் பற்றி தவறாகச் சொல்லி வைப்பார்.
கணவர்தான் மோசமானவரே தவிர,
அவருடைய குடும்பம் மிகவும் அன்பானது.
மோகனாவின் துயரத்தைக்
கண்ட மாமனார்,
விவாகரத்து வாங்கச் சொல்லி வற்புறுத்தினார்.
மாமியாரும் நாத்தனாரும் அதுதான் சரியானது
என்று வலியுறுத்தினார்கள்.
தனியாக வாழ்வதில்
ஏதோ தயக்கம் இருந்ததால்
மோகனா அதைப் பற்றி யோசிக்கவில்லை.

மகனுக்கு விவரம் தெரிந்தது.
‘அப்பாவை விவாகரத்து பண்ணிடுங்க.
என் நண்பனோட அமமா கூட விவாகரத்து வாங்கிட்டாங்க.
எதையும் சமாளிச்சுக்கலாம்’
என்று சொன்னதும் மோகனாவுக்குத் தைரியம் வந்தது.
விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள முடியாது
என்று உறுதியாக இருந்தார் கணவர்.
கல்லூரிக்குச் சென்று ரகளை செய்தார்.
வழக்கு நீண்டுகொண்டே சென்றது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை கிடைத்தது.

நண்பர் அருணந்தியின் மூலம்
அறிவியல் இயக்கத்தின் அறிமுகம் கிடைத்தது.
தனக்கு ஏற்ற களமாக அதைக் கருதினார் மோகனா.
தன் துறை தவிர்த்து, இயற்பியல், வானியல்
என்று பலவற்றிலும் கவனத்தைச் செலுத்தினார்.
மிக விரைவில் அறிவியல் இயக்கத்தின்
முக்கியமான பொறுப்பாளர்களில் ஒருவரானார்
. இந்தியா முழுவதும் ரிசோர்ஸ் பர்ஸனாகச் சென்றார்.
தமிழ்நாட்டில் அவர் செல்லாத கிராமங்கள் மிகவும் குறைவே.
கல்லூரி நாள்கள் தவிர,
மற்ற நாள்கள் முழுவதும்
இயக்கப் பணிக்காக ஓடிக்கொண்டே இருப்பார்.

அவருடைய வீடு
கல்லூரி மாணவர்கள்,
பேராசிரியர்கள்,
இயக்க நண்பர்கள்
என்று எந்நேரமும்
களைகட்டிக்கொண்டிருக்கும்.
கூட்டம் நடக்கும்.
இரவில் பெரிய தொலைநோக்கி, பைனாகுலர்களை வைத்து,
‘சிரியஸ் பிரகாசமாகத் தெரிகிறது…
ஓரியான் கூட்டம் சற்று விலகியிருக்கிறது…’
என்று வான் ஆராய்ச்சி நடைபெறும்!

மோகனாவின்
சமையல் அறை சற்று வித்தியாசமாக இருக்கும்.
ஒரு பக்கம்
அவருடைய தம்பி அம்மியில்
மிளகாய் அரைத்துக்கொண்டிருப்பார்,
இன்னொரு பக்கம் மகன்
காய் நறுக்கிக்கொண்டிருப்பார்…
அவர்கள் வீட்டில் பெண்களுக்கு.
ஆண்களுக்கு என்று தனித்தனி வேலைகள்
கிடையாது.
எல்லோரும் இயல்பாக
எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

அறிந்தவர்கள், அறியாதவர்கள்
என்று எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்வார் மோகனா.
அவருடைய தம்பிகள், தங்கை
குழந்தைகளைப் படிக்க வைத்து,
திருமணமும் செய்துகொடுத்துவிட்டார்.
முகம் தெரியாத எத்தனையோ
மாணவர்களை இன்றளவும்
படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
பிரச்னைகளின் போது
உடன் இருந்து தைரியமாகப்
போராட வைத்தவரும் நண்பரும்
பிலாசபருமான அருணந்திக்கு
மூளை புற்றுநோய் வந்தபோது
துவண்டு போனார் மோகனா.
அவரையும் அவருடைய மனைவியையும் இரண்டு ஆண்டுகள் தன் வீட்டிலேயே வைத்து, மருத்துவம் பார்த்தார்.

மோகனா இன்று
மகன் பிடெக் முடித்தவுடன்
அமெரிக்கா சென்றுவிட்டார்.
மருமகளின் முதல் பிரசவத்துக்கு
அமெரிக்கா செல்ல விரும்பினார் மோகனா.
ஆனால் விவாகரத்து பெற்றவர்,
ஒரே மகன் என்பதால் அங்கேயே தங்கி விடுவார்
என்று காரணம் காட்டி,
ஓவ்வொரு முறையும்
அவருக்கு விசா மறுக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததில்
இரண்டாவது பிரசவத்தின்போது விசா கிடைத்தது.

துறைத் தலைவராக
இருந்து ஓய்வு பெற்ற பிறகு,
இன்னும் அதிகமாக மக்களுக்கு
உழைக்க ஆரம்பித்தார் மோகனா
. நிறைய படிப்பார். நிறைய எழுதுவார்.

இதுவரை பதினேழு அறிவியல் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
ஆரோக்கியமான
உணவு, உடற்பயிற்சி,
குறிப்பிட்ட இடைவெளிகளில்
மருத்துவப் பரிசோதனை
என்று தன்னையும் பார்த்துக்கொண்டார்.
அன்று…
‘ஹலோ மோகனா பேசறேன்…’
‘எப்படி இருக்கீங்க?’
‘நல்லா இருக்கேன்.
செக்கப்புக்காக ஹாஸ்பிடல் வந்தேன்.
மார்பகப் புற்றுநோய்ன்னு தெரிந்தது.
நேத்து காலையில்
ஒரு மார்பகத்தை எடுத்துட்டாங்க.
நான் நல்லா இருக்கேன்…
கவலை வேணாம்.’
இரண்டு மாதங்களுக்குப் பிறகு…
இளைத்துப் போயிருந்தார்.
முடி எல்லாம் கொட்டியிருந்தது.
கீமோ தெரபி எடுப்பதால்
நாக்கு, உள்ளங்கைகள்,
கால்கள் எல்லாம் கறுத்துப் போயிருந்தன.

‘உங்க வாழ்க்கையில்
இப்பத்தான் ரெஸ்ட்ல இருக்கீங்க…’
‘அறுபது வயதுக்கு
மேல ஓய்வு எடுப்பதில் அர்த்தமில்லை.
முன்னாடி விட இப்பத்தான் அதிகமா வேலை செய்யணும்.
மார்பகப் புற்று நோய் பற்றி
கிராமப் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்ணும்.
கிராமப்புற மக்களுக்கு
நிறைய திட்டங்கள் வச்சிருக்கேன்.
நீயே சொல்லு, ஓய்வெடுக்க முடியுமா?’
-thanks:tamilpaper

No comments:

Post a Comment