முதல் பக்கம்

Feb 17, 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்:2009 ஓர் அறிமுகம்


நண்பர்களே,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட அமைப்புதான் என்றபோதிலும் ஒரு சின்ன நினைவூட்டல் எப்போதும் தேவைப்படுகிறது.. வாழ்வாதாரத்திற்கான (சம்பளம்) வழக்கமான பணிகள், குடும்பத்திற்கான பணிகள், சுயமுன்னேற்றத்திற்கான பணிகள் என ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாள் முழுக்க ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி வாழ்ந்து தன்னோடு மட்டுமே தனது சகாப்தத்தை முடித்து விடுகிறான்.. ஏற்கனவே சொன்ன இந்தப் பணிகளோடு நாம் வாழ்கின்ற இந்த சமுதாயத்திற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? இன்னும் கல்வியறிவே பெறாத கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்தும் வாழாமல் புற்றீசல் போல இறந்து மடிகின்றனரே.. அவர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும்? என யோசித்து, நம்மால் இயன்றதைச் செய்வோம் என முடிவெடுத்து களமிறங்கிய சில விஞ்ஞானிகள், பேராசிரியர்களால் துவங்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்புதான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.. வெறும் பத்து பதினைந்து பேரால் துவங்கப்பட்ட இந்த அமைப்பு இன்று சுமார் இருபதாயிரத்திற்கும் மேலான உறுப்பினர்களைக் கொண்டு வேரோடும் விழுதோடும் மிகப்பெரும் ஆலமரமாக கிளை பரப்பி வளர்ந்து நிற்கிறது..

தன்னார்வமாக சமூகப்பணியாற்ற விரும்பும் எந்த ஒரு நபரும் இணைந்து செயல்படலாம்.. அறிவியல் பிரச்சாரம், பெண்கள் முன்னேற்றத்திற்காக சமம், அறிவியல் விழிப்புணர்வு புத்தகங்களை வெளியிட அறிவியல் வெளியீடுகள், சுற்றுச்சூழல் பணிகளுக்காக வளர்ச்சி உபகுழு, கல்வி சார்ந்த பணிகளைச் செய்வதற்காக கல்வி உபகுழு-அதிலும் ஆரம்பக்கல்வி,உயர்கல்வி என இரண்டு துணைக்குழுக்கள் என எவ்வித எதிர்பார்ப்புமின்றி, சுயநல நோக்கமுமின்றி விஞ்ஞானிகளும், பேராசிரியர்களும், ஆசிரியர்களும், பெண்களும், தொண்டர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

கல்வி குறித்து பேச அறிவியல் இயக்கத்திற்கு என்ன தகுதி?

கல்வியில் மட்டும் பார்த்தோமானால், புதிய முயற்சிகளாக மேற்கொள்ளப்பட்டவை-கற்பது கற்கண்டே, கற்றலில் இனிமை, செயல்வழிக்கற்றல், இரவுப்பள்ளிகள், துளிர் இல்லங்கள், கற்றல் கற்பித்தலில் அறிவியல் அணுகுமுறையை வளர்த்திட ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் என ஏராளமான பயிற்சிகள், கல்வியில் இன்றைய போக்குகள் குறித்து விவாதிக்க மாவட்ட அளவில், மாநில அளவில் கல்வியாளர்களைக் கொண்ட ஆசிரியர் இணையங்கள், வாசிப்பு முகாம்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.. கல்வி மற்றும் அறிவியல் விழிப்புணர்வு கலைப்பயணங்கள் என்ற வகையில் பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்த கலைப்பயணங்கள், அறிவொளிக் கலைப்பயணங்கள், கற்கும் பாரதம் கலைப்பயணம், அனைவருக்கும் கல்வி இயக்கத்துடன் இணைந்து கல்வி உரிமைச் சட்டம் விழிப்புணர்வுக் கலைப்பயணம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பள்ளி இடைநிற்றல் குறித்த ஆய்வு, தண்டனைகள் குறித்த ஆய்வு, செயல்வழிக் கற்றல் குறித்த ஆய்வு, சமச்சீர் பாடத்திட்டம் பற்றிய ஆய்வு ஆகியவை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சுயமாக மேற்கொண்ட கல்வி சார்ந்த ஆய்வுகள், சிட்டுக்கள் மையம், படிப்பும் இனிக்கும், மக்கள் பள்ளி இயக்கம் ஆகியவை பின்தங்கிய மாணவர்களுக்காக அறிவியல் இயக்கம் மேற்கொண்ட சில முயற்சிகள், அனைவருக்கும் ஆரம்பக்கல்வி, பல்லுக்கு மெதுவாய் பணியாரம், மீண்டும் வசந்தம், கற்பது கற்கண்டே, அறிவதில் ஆனந்தம், கைகளில் கண்ணாமூச்சி, இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகியவை கல்வி சார்ந்து அறிவியல் இயக்கம் வெளியிட்ட புத்தகங்கள், இது தவிர தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஆசிரியர் இணைய இதழாக, இருமாதங்களுக்கு ஒருமுறை விழுது என்ற கல்வி இதழையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது..  இவ்வளவு பணிகளையும் தன்னார்வமாகச் செய்துகொண்டு தன்னடக்கத்தோடு வலம் வருகின்ற ஒரு அற்புதமான இயக்கம்தான் நண்பர்களே,தமிழ்நாடு அறிவியல் இயக்கம்..

இப்போது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.. அது பற்றிய குறைந்த பட்ச தகவல்களையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? இதோ..

கல்வி உரிமைச் சட்டம்
v  6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் 26.08.2009ல் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று 27.08.2009ல் மத்திய அரசின் இதழில் வெளியிடப்பட்டு 01.04.2010 முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.(ஜம்மு-காஷ்மீர் நீங்கலாக)..

v  இந்தச் சட்டம் குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 என்று அழைக்கப்படும்.

v  பல்வேறு முக்கிய அம்சங்களை இச்சட்டத்தின் 7 அத்தியாயங்களில் 38 சட்டப்பிரிவுகளில் காணலாம்..

சட்டப்பிரிவுகள்:

1.       இந்தச் சட்டம் குழந்தைகளின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 என்று குறிப்பிடப்படும்.

2.        சட்டப்பிரிவு 2-ல் சில முக்கிய சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப் பட்டுள்ளது.

3.       6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளும் அருகாமைப் பள்ளியில் தொடக்கக்கல்வி முடிக்கும் வரை இலவச கட்டாய கல்வி பெற உரிமை உண்டு..

4.       6 வயதிற்கு மேற்பட்ட குழந்தை பள்ளியில் இதுவரை சேர்க்கப்படவில்லை என்றாலோ அல்லது சேர்ந்து இடையில் நின்றுவிட்டு இருந்தாலோ, தனது வயதிற்கு ஏற்ற வகுப்பில் சேர்ந்து படிக்க உரிமை உண்டு..

5.       தொடக்கக் கல்வியை ஒரே பள்ளியில் தொடர்ந்து முடிக்க இயலாத குழந்தை பிரிதொரு பள்ளியில் தன்னை சேர்த்துக்கொள்ளக் கோரும் உரிமை உண்டு..

6.       பள்ளி இல்லாத பகுதியில், ஒரு அருகாமைப் பள்ளியை இந்தச்சட்டம் நடைமுறைக்கு வரத் தொடங்கிய 3 ஆண்டுகளுக்குள் மாநில அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும்..

7.       இந்தச் சட்டத்தின் விதிகளை செயல்படுத்த மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் நிதி வழங்குவதற்கு பொது பொறுப்பு உண்டு..

8.       ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கட்டாயத் தொடக்கக் கல்வியை வழங்குவது மாநில அரசாங்கத்தின் கடமையாகும்..

9.       உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும்14 வயதுவரை உள்ள குழந்தைகள் பற்றிய ஆவணங்களைப் பராமரிக்க வேண்டும்.

10.    தங்கள் குழந்தைகளை அருகாமைப் பள்ளி ஒன்றில் சேர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும்..

11.    3 வயதுக்கு மேற்பட்ட 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பள்ளிக்கு முந்தைய கல்வி வழங்குவதற்கான ஏற்பாட்டை உரிய அரசாங்கம் செய்ய வேண்டும்..

12.    பள்ளியின் பொறுப்பு..
-6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்கவேண்டும்..
-குறிப்பிட்ட பள்ளிகள் முதல் வகுப்பில் குறைந்தது 25% அருகாமைப் பகுதியில் உள்ள நலிந்த பிரிவுகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த குழந்தைகளைச் சேர்த்து தொடக்கக் கல்வி முடிக்கும் வரையில் இலவசக் கல்வியை வழங்கவேண்டும்..              

13.    எந்தப் பள்ளியும் ஒரு பள்ளியும் ஒரு குழந்தையை சேர்க்கும் பொழுது எந்தவொரு கல்விக்கட்டணமும் வசூலிக்கக் கூடாது-எந்தவொரு தேர்விற்கும் உட்படுத்தக் கூடாது..

14.    வயதுச் சான்றிதழ் இல்லை என்பதற்காக பள்ளிச் சேர்க்கையை மறுக்கக் கூடாது..

15.    பள்ளிச் சேர்க்கைக் காலம் முடிந்த பிறகும் குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டும்..

16.    எந்த ஒரு குழந்தையையும் தொடக்கக்கல்வி முடிக்கும் வரை ஒரே வகுப்பில் நிறுத்தி வைக்கக்கூடாது..

17.    எந்த ஒரு குழந்தையையும் உடல் ரீதியான தண்டனைக்கோ, மன ரீதியான துன்புறுத்தலுக்கோ உட்படுத்தக்கூடாது..

18.    சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அங்கீகாரச் சான்றிதழ் பெறாமல் எந்தவொரு தனியார் பள்ளியும் நிறுவப்படவோ, செயல்படவோ கூடாது..

19.    பள்ளிக்கான நடைமுறை மற்றும் தரங்களை நிறைவு செய்யாத பள்ளிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட மாட்டாது..
-சட்டம் நடைமுறைக்கு வரத் தொடங்கியதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்குள் அங்கீகாரம் பெற்று நிறைவு செய்யவேண்டும்..
20.    பள்ளிக்கான தரங்களில் சேர்த்தல் அல்லது நீக்குதல் போன்றவற்றை மத்திய அரசு செய்யலாம்.

21.    பள்ளிக்கு ஒரு நிர்வாகக் குழுவை ஏற்படுத்த வேண்டும்..
-நிர்வாகக் குழுவில் 75% பெற்றோர்கள் இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில் 50% பெண்களாக இருக்கவேண்டும்.

22.    பள்ளி நிர்வாகக் குழு, பள்ளி மேம்பாட்டுத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். பள்ளி மேம்பாட்டுத்திட்டம் அடிப்படையில் தான் அதற்குரிய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும்..

23.    மத்திய அரசாங்கத்தின், அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு கல்வித்துறை வகுத்துள்ள குறைந்தபட்ச தகுதிகள் உள்ள எந்த ஒரு நபரும் ஆசிரியராக நியமிக்கத் தகுதியுடையவர்..

24.    ஆசிரியரின் கடமைகள்..
-பள்ளிக்கு தொடர்ச்சியாகவும் உரிய நேரப்படியும் வருதல் வேண்டும்..
-வரையறுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை நடத்தி முடித்தல் வேண்டும்..
-வரையறுக்கப்பட்டுள்ள கால அளவிற்குள் பாடத் திட்டங்களை நடத்தி                              ..முடிக்கவேண்டும்..
-பெற்றோர் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துதல் வேண்டும்..

25.    சட்டம் நடைமுறைக்கு வரத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குள் ஒவ்வொரு பள்ளியிலும் வரையறுக்கப்பட்ட மாணவர் ஆசிரியர் விகிதம் 1:30 இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

26.    பள்ளியில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையில் 10 விழுக்காட்டிற்கு மேல் காலியாக இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்..

27.    மக்கள்தொகை கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணி, தேர்தல் பணிகள் தவிர பிற கல்வி சாராத பணிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்துதல் கூடாது..

28.    எந்த ஒரு ஆசிரியரும் தனிப்பட்ட கல்வி பயிற்சி (டியூசன்) நடத்தக்கூடாது..

29.    கல்வித்துறை அதிகார அமைப்பு, தொடக்கக் கல்விக்கான பாடத்திட்டத்தையும் மதிப்பிடும் நடைமுறையையும் வகுத்தளிக்கும்..

30.    தொடக்கக் கல்வியை முடிக்கும் வரையில் எந்தவொரு குழந்தையும், எந்தவொரு வாரியத் தேர்வையும் எழுதி தேர்ச்சி அடைய வேண்டியதில்லை..

31.    தேசியக் குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை குழந்தைகள் கல்வி உரிமையைக் கண்காணிக்கும்..

32.    சட்டத்தின் கீழ் ஒரு குழந்தையின் உரிமை தொடர்பாக எவருக்கேனும் குறை இருக்குமானால் அவர் அதனை உள்ளாட்சி நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம்..
-இந்தப் புகார் குறித்து உள்ளாட்சி அமைப்பு மூன்று மாதங்களுக்குள் முடிவு செய்யும்.
-பின்னர் மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்யலாம்..

33.    மத்திய அரசாங்கம் 15 பேருக்கு மிகாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசிய ஆலோசனைக்குழு அமைத்தல் வேண்டும்..

34.    மாநில அரசாங்கம் 15 பேருக்கு மிகாத உறுப்பினர்களைக் கொண்ட மாநில ஆலோசனைக்குழு அமைத்தல் வேண்டும்..

35.    சட்ட விதிகளை செயல்படுத்துவதற்கு உரிய வழிகாட்டல்களை மத்திய அரசாங்கம் வழங்கலாம்..

36.    உரிய அரசாங்கத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு அதிகாரியின் முன் அனுமதி பெறாத நிலையில் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது..

37.    சட்ட விதிகளை செயல்படுத்தும் நோக்கத்துடன், நல்லெண்ணத்துடன் செயல்படும் எந்தவொரு நபர் மீதும் வழக்கு அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது..

38.    சட்ட விதிகளை செயல்படுத்துவதற்காக உரிய அரசாங்கம் தேவையான விதிகளைப் பிறப்பிக்கவேண்டும்..

அறிந்துகொள்வோம்..! மக்கள் அனைவரையும் அறியச் செய்வோம்..!!
d.sundar
dist.secretary
tnsf.theni

2 comments:

  1. மரியாதைக்குரிய நண்பரே,வணக்கம்.தங்களது பதிவுகள் எல்லாம்.மிகச்சிறப்பாக பல விசயங்கள் தெரிந்து கொள்ளும்விதமாக உள்ளன.வாழ்த்துக்கள்.தங்களது பதிவின்படியே நான் கேள்வியாக அறிவியல் இயக்கம் என்றால் என்ன?எனக் கேட்பவர்களுக்கு பதிலளித்து வருகிறேன்.நன்றிங்க!.என PARAMESWARAN.C
    TAMIL NADU SCIENCE FORUM
    THALAVADY-ERODE DISTRICT.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பர் பரமேஸ்வரன் அவர்களே, தொடர்ந்து அறிவியல் இயக்கப்பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டமைக்கு.. எமது பதிவுகள் பயனளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்..

      Delete