முதல் பக்கம்

Feb 12, 2012

வேறு கோள்களில் உங்களின் வயது?

ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்?


அக்காமாருங்களே , அண்ணாச்சிகளே, ஒக்காருங்க. ஒங்களுக்கு ஒரு கதை சொல்ல வந்திருக்கேன்.

அது என்னா கதை.. நாங்க என்னா பச்சப் புள்ளையா?

அண்ணே, கதை யாரு வேணா கேக்கலாம்.இப்ப நான் சொல்லப்போற கதையே வேற..!

அப்படி என்னா ஊருல ஒலகத்திலே இல்லாத கதை சொல்லப்போற..!

ஊரு ஒலகத்திலே இல்லாத கதைதான்க்கா..அது சரி . ஒங்க ஊரல ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்?

இது என்னாப்பா கேள்வி.?இது தெரியாம மனுசரு உண்டா?

அதெல்லாம் சரி அண்ணாச்சி. பதிலைச் சொல்லுங்க?

எங்க ஊருல மட்டும் இல்லேப்பா,.. இந்த உலகத்துலே எந்த மூலைக்கு நீ போனாலும் ஒரு நாளைக்கு இருவத்தி நாலு மணி நேரம்தாம்பா..!

எப்பவும்தானா அண்ணாச்சி..! எல்லா உலகத்திலேயும், கோளிலேயுமா?

ஆமாப்பா.. எங்க தாத்தன் பூட்டன் காலத்திலேருந்து இதேதாம்பா கதை..!

அண்ணாச்சி.. இப்ப நான் கதைய மாத்தி சொல்லப்போறேன்..!

என்னடாது இது புதுக் கதை உடறே..!

புதுக்கதை இல்லக்கா, பழைய கதைதான், ஆனா பொதுவா யாருக்கும் தெரியாத கதை..!

அப்படியா சொல்லு சொல்லு.ஏதோ கொஞ்சம் நேரம் போவும்.!

அக்கா, நல்லா கேட்டுக்குங்க உங்க புள்ளங்களுக்கும் போயி சொல்லுங்க.பழைய கதையோட . புதுக்கதையும் சொல்றேன்..! அதான் நடந்த கதை,நடக்கிற கதை, நடக்கப்போற கதை எல்லாம் சொல்லப்போறேன்..!

கதை கேளு, கதை கேளு, ஒரு நாளின் கதை கேளு..


இப்ப நம்ம பூமியிலே ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். ஆனால் நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒவ்வொன்றின் ஒரு நாள் நேரமும் வேறு வேறாக இருக்கிறது.

அப்படியா சங்கதி..சரி அதையும் சொல்லு கண்ணு.? புதன் கிரகத்துலே ஒரு நாள் எத்தினி மணி நேரம்?

புதன் சூரியனுக்கு ரொம்ப பக்கத்திலே இருக்குது.. அதனால அதன் மேல் சூரியனின் ஈர்ப்பு சக்தி அதிகம் தெரியும். புதன் கோள் ஒருமுறை தன்னைத்தானே சுற்றி முடிக்க..நம்ம பூமி நேரப்படி175.94நாட்கள் 59 மணி நேரம் ஆகிறது. அதுதான் புதனின் ஒரு நாள் ஆகும். எந்த கோளாக இருந்தாலும் சரி தன் அச்சில் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரமே, அந்த கோளின் ஒரு நாள் எனப்படுகிறது.

சரி..சரி கண்ணு இப்பத்தானே வெளக்கமா புரியுது.புதனோட நாள் சொல்லிட்டே. செவ்வாய், வியாழன், வெள்ளி,சனியோட ஒரு நாள் நேரம் என்னாப்பா?

சூரிய குடும்பத்திலே, ரெண்டாவதா சுற்றுகிற, நம் பூமிக்கு முன்னாடி இருக்குற வெள்ளி கோளின் ஒரு நாள் என்பது நமக்கு 243 நாட்கள் ஆகும்.

இது என்னடாது, ஒரு நாளைக்கு எத்தினி மணி நேரம்னு கேட்டா, நீ வருஷத்துக்கு சொல்றியேப்பா?

இல்லேண்ணே, நான் சொல்றது ஒரு நாள்தான். வெள்ளி கோளோட ஒரு வருஷமும், ஒரு நாளும் கிட்டததட்ட ஒண்ணு தான். வெள்ளி கோளில் ஒரு வருடம் என்பது, ஒரு முறை வெள்ளி சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம், 224.70 நாட்கள் . இதுதான் வெள்ளிக்கோளின் ஓர் ஆண்டு. ஆனால் அது தன் அச்சில் மிக மிக மெதுவாக சுற்றுவதால் தன் அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்கவே, கிட்டததட்ட ஒரு வருடத்தை நெருங்கி வந்துவிடுகிறது. நம்ம பூமியோட 243 நாள்தான் வெள்ளி கோளில் ஒரு நாள்.அது ஒரு தடவை தன்னோட அச்சிலே சுத்திமுடிக்க 243 நாள் ஆவுது. ஆனால் ஒருசூரிய உதயத்துக்கும் அடுத்த சூரிய உதயத்துக்கும் இடைப்பட்ட நாட்கள் 116.75 பூமி நாட்கள்.தெரியுதா அண்ணாச்சி.

என்னமோ போ, எங்களுக்கென்னா தெரியும், நீ படிச்சவன் சொல்றே. நாங்களும் நம்பிக்கிறோம்.


என்னண்னே இப்புடி சொல்லிட்டீங்க. நான் சொல்றது நெசம் ண்ணே ..!

சரி, சரி மேல சொல்லுப்பா.. கேக்க சுவாரசியமாத்தான் இருக்கு.

அடுத்து நம்ம பூமியோட ஒரு நாள் எனபது சரியா துல்லியமா 24 மணி நேரம் இல்லே. 23 மணி 56 நிமிடம் 4.1 நொடிகள் தான். நம் பூமியின் துணைக்கோளான சந்திரனின் ஒரு நாள் என்பது நமக்கு 29.53 நாட்கள் .அதோட ஒரு வருடம் என்பது

அப்ப நீ ஒரு மாசம்தான் சந்திரனோட ஒரு நாள்னு சொல்றியா?

ஆமாண்ணே..சந்திரன் ஒரு தடவை சுற்றி முடிக்க 29நாள்தான் ஆவுது. அப்படின்னா அதோட ஒரு வருடம் என்பது அதுக்கு 12 நாள்தான்..

ஹும்.. .. நமக்கெல்லாம் இது தெரியாம போச்சே..! நம்ம கணக்குக்கு ஒரு மாசம்னு சொல்றோம்.

அக்கா.. செவ்வாயின் ஒரு நாள் கிட்டததட்ட நாமள மாதிரிதான்.

24 மணி நேரமா?

ஆமா..செவ்வாயின் ஒரு நாள், 24 மணி 37 நிமிடம் 22.66 நொடிகள் தான். செவ்வாயோட சுற்று வேகமும், பூமியோட சுற்று வேகமும் சராசரியா ஒண்ணுதான்.

சரிப்பா, நமக்கு ரொம்ப தொலைவிலே இருக்குற வியாழன், சனிக் கதை என்னா?

வியாழன்தான் நம்ம சூரிய குடும்பத்திலே பெரிய அண்ணாச்சி.அதோ போல வெகு வேகமா சுத்தறதும் அதுதான். அதோட ஒரு நாள் என்பது நமக்கு 9 மணி 55 நிமிடம் 33 நொடிகள்.இதிலே இன்னொரு விஷயமும் சொல்றேன். இந்த வியாழன் நம்ம பூமியைவிட

317 . 5 மடங்கு அதிக நிறை உள்ளது. பூமியில் மட்டும்தான் எடை என்று குறிப்பிடு கிறோம். எடை என்பது ஈர்ப்பு விவசைக்கு தகுந்தாற்போல மாறும். எனவேதான் பூமியைத்தவிர மற்ற கோள், சூரியனில் எல்லாம் நிறை என்றே சொல்லவேண்டும்

.ஆனால் சூரிய குடும்பத்தில் அதிக வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் கோள் இது மட்டுமே.

அப்ப 10 மணி நேரம்தான் வியாழனோட ஒரு நாள்.

ஆமாண்ணே..சனிக்கோ ளின் ஒரு நாள்10 மணி 32 நிமிடம் 36 நொடிகள்.

சுமார் 10 .5 மணி நேரம்.இல்லியா?

ஆமாம். சனிக்கு அப்பாலே இருக்குற யுரேனஸ் கோளின் ஒரு நாள் என்பது 17 மணி 14 நிமிடம் 23 நொடிகள். சரியா சொன்ன நெப்டியூனின் ஒரு நாளுக்கும் கிட்டத்தட்ட அதே நேரம்தான் 16 மணி 6.6 நிமிடம் .

போதும்பா ஒரே குழப்பமா இருக்கு.. நீயே வந்து புள்ளங்களுக்கு சொல்லிக் கொடு.

அண்ணாச்சி இதுக்கே அசந்துட்டா எப்படி..இன்னும் கதை இருக்கே..!

ம்..ம்.. சொல்லு . சொல்லு.

அண்ணே அதுக்கு முன்னே, இன்னொரு இண்டரஸ்ட்டான ஒரு விஷயம் சொல்றேன்.

என்னப்பா நெனச்சி நெனச்சி புதிர் போடறே

வேறு கோள்களில் உங்களின் வயது?

ஆமாக்கா, புதிர்தான். ! ஆனா அது இந்த கோள்களின் ஒரு நாள் நேரத்தோடவும், ஒரு வருஷ காலத்தோடவும் சம்பந்தப்பட்டது. இப்ப உங்க மகனுக்கோ/மகளுக்கோ நேத்திக்குத்தான் பொறந்த நாளுன்னு வெச்சிக்குவோம்.

என்ன 11 .02 .2012 ஆ..? எனக்கு அவ்வளவு சின்ன புள்ளே இல்லியேப்பா?

அத விடுண்ணே..அந்த தேதியிலே பொறந்த உங்க புள்ளைக்கு இப்ப 22 வயசு..உங்கள பிள்ளையோட பிறந்த நாள் 11 .02 .1990 ன்னு வெச்சிக்கலாம்.

சரி அதுக்கென்ன இப்ப

இருக்குதே விஷயம் இருக்குதேண்ணே. அவங்களுக்கு நம்ம சூரிய குடும்பத்தோட வேற கோள்லே இருந்த எத்தினி வயசு ஆகும் தெரியுமா?

அதையும் நீயே சொல்லு..

ம்..நல்ல கேட்டுக்குங்க .. இப்ப உங்க புள்ளைக்கு, இங்க 22 வயசுன்னா.. புதன் கோள்லே 91 .3 வருஷம் ஆகும். ஆனால் அடுத்த பொறந்த நாள், திங்கள் கிழமை, செப்டம்பர் 9, 2012 தான் வரும். அதே போல் வெள்ளியிலே, 35 .7 வயசு, அடுத்த் பொறந்த நாள் 2012 , ஏப்ரல் 5 , வியாழக்கிழமை வரும். ஆனால் பூமியிலே, அடுத்த பொறந்த நாள் 2013 , பிப்ரவரி 10 , ஞாயிறு அன்னிக்கு வரும். இந்த ஆண்டு லீப் வருஷம் .

கேக்க நல்லாத்தான் இருக்கு, செவ்வாய்லே எத்தினி வயசு இருக்கும்.

செவ்வாயில் வயது 11 .6 . அடுத்த் பொறந்த நாள் தேதி..வியாழன் செப்டம்பர் , 6, 2012 . ஆனால் வியாழனில் உங்க பிள்ளை குழந்தைதான். வயது 1 .85 .அப்படின்னா குழந்தைதானே .அடுத்து வரும் பிறந்த தேதிசனிக்கிழமை, நவம்பர். 2, 2013 தான்.

நெசம்மாவே எங்களுக்கு கைக்குழந்த இருக்குற மாதிரி பண்ணிட்டே.

நான் செய்யலேன்னே.. நீங்க வேற உலகத்திலே இருந்தீங்கன்னா இப்படி இருக்கும்னு சொல்றேன்.

அப்பாலே இருக்குற சனிக்கெரகத்திலே என்னா வயசு.

அண்ணே, புள்ளைக்கு ஒரு வயசு கூட ஆயிருக்காது?

என்னாப்பா


ஆமாண்ணே, இப்ப நம்ம பூமியிலே பொறந்த புள்ளைக்கு 22 வயசுன்னா, அது சனிக்கோள் லே பொறந்திருந்தா, அதுக்கு 0.74 வருஷம் தான் ஆகி இருக்கும். அடுத்த , பொறந்த நாள் ஞாயிறு,ஜுலை 28, 2019 லே வரும்.

எல்லாம் ஒரே ஆச்சரியமா இருக்கேப்பா?

ஆமாக்கா. இன்னும் தொலைவிலே இருக்கிற யுரேனஸ் லே பூமியின் 22 வயது இளைஞருக்கு , வெறும் 0.26 வருடம்தான் ஆகும். அடுத்த் பிறந்த நாள்,2074 , பிப்ரவரி 15 ல், வியாழன் அன்று நிகழும். அப்புறம் இன்னொரு விஷயம் சொன்னா நீங்க நம்பவே மாட்டீங்க.

அதையும் சொல்லு.. எத நம்ப, எத நம்ப வேண்டாம்னு தெரியலே.. எல்லாமே ஒரே ஆச்சரியமா இருக்கு?

அண்ணே, நமது எட்டாவது கோள் லே நம்ம புள்ளே ௨௨ வருஷத்துக்கு முன்னானி பொறந்து இருந்துச்சுன்னு வச்சிகிட்டா, இப்ப அதுக்கு வயசு 0.13 வருடம்தான். ஆனால் அடுத்த பொறந்த நாள் 2154ல் தான். இன்னும் 152 வருடம் கழிச்சுத்தான்.அந்த வருடம் நவம்பர் 28 ல், வியாழக்கிழமை வரும். அப்புறமா, நம்ம சூரிய குடும்பத்தோட கோள் இல்லேன்னு வெலக்கி வச்சாங்களே, அந்த புளூட்டோவுலே புள்ள இருந்தா அதுக்கு, அங்க .00 88 புளூட்டோனியன் ஆண்டுகள் ஆகி இருக்கும். அடுத்த பிறந்த நாள் எப்ப வரும் தெரியுமா,நீங்க அதுவரை உயிரோட இருந்தா 2238 ம் ஆண்டு, செப்டம்பர் 19, புதன் கிழமை வரும்..

சரி கண்ணு நெறைய விஷயம் சொல்லிட்டே.. நாளைக்கு வந்து புள்ளைங்க கிட்டே இல்லே.

ஆமாம் இதெல்லாம் எப்புடிப்பா..

மூலவர்களான, டைகோ பிராகியும், கெப்ளரும் ..



அண்ணே, ஒவ்வொரு கோள் லேயும், ஓர் ஆண்டு என்பது அதனோட சுற்று வேகத்தையும், அது எத்தனை நாட்களில் நம்ம சூரியனை சுற்றி வருகிறது என்பதையும் பொறுத்தது. இதெல்லாம் நான் சொல்லலே. 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைகோ பிராகியும், அவரின் உதவியுடன், ஜொகான்னஸ் கெப்ளரும் (1571 -1630), கணித சூத்திரங்கள் மூலம் சரியாகக் கண்டறிந்தனர். இதெல்லாம் மிக மிக வியப்பான தகவல்கள்தானே.

சரிப்பா. எவ்வளோ விஷயம் சொல்லி இருக்கிறே.. நல்லா இருப்பா. நாளைக்கு மறக்காம வாப்பா.

அண்ணே நான் நாளைக்கி வர்றேன். இந்த விஷயத்தோட, இனறைய நாளின் கதையும் சொல்றேன். 
-பேரா.சோ.மோகனா

No comments:

Post a Comment