முதல் பக்கம்

Feb 26, 2012

அன்புள்ள சாந்தி அக்கா...


அன்புள்ள சாந்தி அக்கா...
உங்களுக்கும் எனக்கும்
அப்படியொன்றும்
நெடுங்கால நட்பென எதுவுமில்லை..
இருந்தாலும்..
என்னை எப்போதும் பார்த்தாலும்
சிரித்த முகத்தோடு நீங்கள் கேட்பீர்கள்
"என்ன தம்பி நல்லா இருக்கீங்களா..?
அப்பா.. அம்மா எப்படி இருக்காங்க..?"



சிலரைப் பார்த்ததும்
சென்று பேசத் தோன்றும்..
சிலரைப் பார்த்ததுமே
ஓடி ஒளியத் தோன்றும்..
உங்களைப் போன்ற ஒருசிலருடன் மட்டுமே
எப்போதும் இருக்கத் தோன்றும்!

 
அன்புள்ள சாந்தி அக்கா...

மகப்பேறுக்காக வந்த
மகள் திரும்பிச் சென்று
சில நாட்களே ஆகின்றன..
பொறியியல் படிப்பை-மகன்
படித்து முடிக்க
சில மாதங்களே இருக்கின்றன..

எத்தனை கனவுகளுடன்
நின்றிருந்தாயோ..
மதுரை-பெரியார் நிலையத்தில்..
பேருந்து வடிவத்திலா
வரவேண்டும் பேரதிர்ச்சி..!

உங்க ஊரான புதுப்பட்டியில்
உடல்-என்னிரு கண்முன்னால்
எரிந்து கொண்டிருந்தாலும்
ஏற்கமுடியவில்லை
உன் இறப்பை.. உன் இழப்பை..!





அன்புள்ள சாந்தி அக்கா...

காரியமாற்றுவதற்குப் பதிலாக
வெறும் காரணங்களை மட்டுமே
கைப்பை நிறைய வைத்துக்கொண்டு திரியும்
பல நண்பர்களுக்கு மத்தியில்..
சொந்த ஊதிய உயர்வுக்குக் கூட
போராடத் தயங்கும்
பல்லாயிரம் பெண்களுக்கு மத்தியில்..

பத்துப் பதினைந்து ஆண்டுகளாய்..
துளியென்றும் சமமென்றும்
அறிவியல் இயக்கமென்றும்
மாதர்களின் சங்கமென்றும்
நீயாற்றிய அரும்பணிகள்
அளவிலா.. அளவிலா...!

ஏழாம் வகுப்பு மட்டுமே
படித்த உன்னிடம்-நாங்கள் படித்திட
ஏராளமுண்டு அன்பு அக்கா..

அழுது சிவந்த விழிகளோடு
விலகி நின்று வியந்துபார்த்தனர்
இரத்த உறவுகளாய் வந்தவர்கள்..

சாந்தி அக்கா...
சாந்தி அம்மா...
சாந்திமா...
சாந்தி தோழர்...-என
எத்தனையோ உறவுகளைச் சொல்லி
யார் யாரோ அழுகிறார்களே என்று..!
அத்தனையும் உந்தன் இயக்க உறவுகள்..!

ஆயிரமாயிரம் பேர் எதிர்நின்றாலும்
ஆர்ப்பரித்துப் பேசும் நம் நண்பர்களால்
உனக்கான
இரங்கல் கூட்டத்தில் ஏனோ
இரண்டிரண்டு வார்த்தைகளுக்கு மேல்
பேசவே முடியவில்லை...
பக்குவமான தலைவர்களையும்கூட
பச்சிளம் குழந்தைகள் போல
அழவைத்து விட்டாய்..!

இனி உனது பணிகள்-எமது பணிகள்..
அது இயக்கமாக இருந்தாலும்..
இல்லை குடும்பமாக இருந்தாலும்..!

வீடு திரும்பியும்
விலகாத நினைவுகளோடு..
சுந்தர்


--
SUNDAR.D
DISTRICT SECRETARY
TNSF@THENI

2 comments:

  1. வணக்கம் சுந்தர்.. நெஞ்சம் கனக்கிறது மீண்டும்.தங்களின் பதிவால்... உள்ளத்தின் வலி இன்னும் குறைவைல்லை..மறைய நீண்ட காலம் ஆகலாம்.. சாதாரண விவசாயக் குடும்பப் பெண்,போராளியாகை சரித்திரமும், சாதனையும் படைத்தவர்.. சாவிலும் சரித்திரமும், சாதனையும் படைத்துவிட்டார். நீங்கா நினவுகுகளுடன்,, மோகனா.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து தொய்வின்றி மக்கள் பணியாற்றும் வாய்ப்பும் கொடுப்பினையும் மனத்துணிவும் அர்ப்பணிப்பும் மிகச் சிலருக்கே இருக்கும். அவர்களில் சாந்தியும் ஒருவராய் இருப்பார். தொடர்ந்து பயணிப்போம்..

      Delete